வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, June 27, 2010

தூரத்து பச்சை விளக்கு

     
    "செந்தில்... நான் கரெக்டா 7.30 க்கு உங்க வீட்டுக்கு வந்திடுவேன். நீயும் அண்ணாச்சியும் ரெடியா இருக்கனும்.  லேட்டாச்சுன்ன நாமே போயி சேரதுக்குள்ள விடிஞ்சிரும் அப்புறம் ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது. குளிச்சிட்டு ஒடனே கெளம்ப வேண்டியதுதான்" என் பதிலுக்காக காத்திருக்காமல் போனை வைத்தான் வேல். இவன் சொன்னா கழுதப்பய கரெக்ட்ட வந்து நிப்பானே. இப்ப என்ன பண்றது. நான் வேறே எதாவது ட்ரிப் போகணுமுன்னு கெளம்பினா அன்னைக்கின்னு பாத்துதான் நெறைய வேல வரும்.

      நான் ஆபீசிலிருந்து ரூம்க்குள் நுழைந்தபோது மணி ஏழு. அண்ணாச்சி ஏதோ சமைத்துக்கொண்டிருந்தார். "வேல் , நிமா, ஸ்ரீபா பாப்பா கெளம்பி குமார் வீட்டுக்கு போயி குமாரையும்  லக்ஷ்மியையும் கூடிக்கிட்டு சரியா நாம வீட்டுக்கு வந்திருவாங்கலாம்" வேல் சொன்னதாகச்சொன்னார்.  இரவு சாப்பாடு நம்ம வீட்டுலதான். நீ சீக்கிரம் கெளம்பு என்றார் .      


      ஏழு பேர் அமரும் வண்டி கொஞ்சம் பெருசுதான். எனக்கு எப்பவுமே இரவு வண்டி ஓட்டுவது பிடிக்கும் அதுவும் தமிழ்ப்பாட்டு கேட்டுக்கொண்டு. 


              தமிழா....தமிழா.... 
             நாளை உன் நாளே... 
            ஒன்றான இந்திய தேசம் உனை காக்கும் இல்லையா...


என்று ஹரிஹரன் பாடிக்கொண்டு இருந்தார்.  எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தனர் நான் காரை ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி பெட்ரோல் போட்டேன் அப்படியே எனக்கும் ஒரு ஹாட் சாக்லேட் எடுத்துக்கொண்டேன்.  Freeway 15 -ல் Los Angeles to Grand Canyon இன்னும் 30  மைல் என்று GPS  காட்டியது.


         Grand Canyon வார்த்தைகளால் விளக்கமுடியாது. அது கடல் மாதரி மிகப்பெரிய பள்ளத்தாக்கு.  கார் பார்க் நோக்கி நடந்துகொண்டிருந்த எங்களுக்கு முன் ஓர் இந்தியப்பெண். இந்த பொண்ணைப்பார்த்த மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் நடுவுல எதோ ஒரு ஊராத்தான் இருக்கணும். இதைப்பத்தி நீங்க என்ன நேனைகிறேங்க அண்ணாச்சி என்றான் குமார். டிரஸ் மேக்கிங்கை பார்த்த எதோ சென்னை அல்லது கோயம்த்தூர் மாதரி தெரியுது என்றான் வேல். "அங்க என்ன பேச்சு", என்றார் நிமா. இல்லம்மா  நாங்க மியூசிக்பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் என்றான் வேல். நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டேன். அந்த பொண்ணு இலங்கைத்தமிழ் அவங்க அமெரிக்க வந்து பத்து வருஷம் ஆச்சாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க கூட பேசினேன் என்றார் நிமா.   நீங்க எதாவது இந்தியன் ஹோட்டல் பார்த்து சாப்பாடு வாங்கிட்டு வாங்க. பாப்பா, லக்ஷ்மி, நானும் ஹோட்டல் இறங்கிக்கிறோம் என்றார் நிமா.


    பக்கத்தில இந்தியன் ஓட்டல்  எதாவது இருக்கன்னு தேடி ஒருவழியா அட்ரஸ் கண்டுபிடுச்சு கார் எடுத்துகிட்டு போனோம்.  நாங்க போய் சேர்ந்தபோது கடைக்காரர் ஹோட்டலை அடைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். நாங்க LA இருந்து வந்திருக்கோம் எதாவது பண்ணமுடியுமா என்றான் வேல். வெஸிடபில் ரைஸ் இருக்கு வேணுமுன பேக் பண்ணித்தரவா  என்றார். நீங்க நல்லா தமிழ் பேசுறேங்க எந்த ஊரு என்றான் வேல் பார்சல் கொண்டுவந்த கடைக்காரரிடம்.  நாங்க இலங்கைத்தமிழர் முதல் சண்டையின் போதே எங்க அப்பா இங்க வந்துட்டார். அங்க இப்ப நிலைமை  எப்படி இருக்கு என்றான் குமார். எங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை ஆனால் நிலைமை மிகவும் மோசம் என்பது உறுதி என்றார்.         


        பில் எவ்வளவு என்றான் குமார். தமிழ்நாடு மக்கள் எங்க மக்களுக்கு எவ்வளவோ பண்ணியிருக்கீங்க. எதோ எங்களால் முடிந்த கைமாறு என்று மறுத்து விட்டார் நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்.  


           விடை  கொடு  எங்கள்  நாடே , 
           கடல்  வாசல்  தெளிக்கும்  வீடே  
           பனைமர காடே , பறவைகள்  கூடே  
           மறுமுறை  ஒருமுறை  பார்ப்போமா ...


பாட்டை  ஆப் பண்ணினேன் காரை ஓட்டிக்கொண்டே. என்னை இந்த பாட்டு மிகவும் காயப்படுத்தியது. எனக்குள் நெறைய கேள்விகள். நான் உண்மையிலே தமிழன் தானா? தமிழன் என்பது இனம்சார்ந்த்ததா  மொழிசார்ந்த்ததா? தமிழ் பேசுவதால் மட்டுமே நான் தமிழன்  ஆகிவிட முடியுமா? இனம்...ரத்தம்...சொந்தம்...அழிவதை செய்தியாக படித்து அன்றுமட்டும் வருத்தப்பட்டு....அடுத்தநாள் அதே பத்திரிக்கையில் டாட்டூ மாமிக்கும் ஞானி நாமம் கொண்டவருக்கும் காதலாம் என்று கிசுகிசு படிப்பவர் தான் நாம் என்று எனக்கே என்மேல் கோவம் வந்தது. காரில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. ரோடு ஒரே இருட்டாக இருந்தது. தூரத்து சந்திப்பில் மஞ்சலில் இருந்து சிவப்புக்கு மாறியிருந்தது சாலை விளக்கு. வேகம்கூட்டினேன் பச்சை வரும் என்ற நம்பிக்கையில். Friday, June 18, 2010

நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா?

நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா ?


         அப்பா, "உங்கள அம்மா கெளம்ப சொன்னங்க கோயிலுக்கு போகனுமாம்". இல்லடா அப்பாக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலே பாக்கி இருக்கு. நீங்க ஆப்பத்தாவ கூப்பிட்டுக்கிட்டு  போயிட்டு வாங்க.  அப்படி என்ன தான் ஆபீஸ் வேலையோ சனி ஞாயிறு கூட என்று ஆட்டோவில் பேத்தியை ஏற்றிவிட்டு தானும் ஏறி அமர்ந்தாள். ஏங்க.... மாமா வந்தா அடுப்பில உப்பமா இருக்கு சாப்புட சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டே கண்ணாடியில் முகம்பார்த்து ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டு கிளம்பினாள் என் மனைவி. கதவை சாத்திவிட்டு கணினி முன் அமர்ந்தேன். 

       ஆபீஸ் வேலை ஒரு சாக்கு. உண்மையில் எனக்கு கோயிலுக்கு போக விருப்பம் இல்லை.  இன்று எழுந்ததில் இருந்து எனக்கு எதிலும் ஒரு நாட்டம் இல்லாமல் இருந்தது. டொக்...டொக்...டொக்...  கதவு தட்டும் சப்தம்  திறந்தால், "பரமன் யாரு சார்"   என்றான் தபால்காரன். நான் தான் என்று கையெழுத்து போட்டு கடிதம் வாங்கி டிவி மேல் வைத்தேன். கணினியில் வசித்த செய்தியை திரும்ப திரும்ப வாசித்தேன். மனம் ஏனோ எதிலுமே ஒட்டாமல் அலைபாய்ந்தது.

     திடிரென்று ஒரு எண்ணம். என் நினைவுகளில் பின்னோக்கி சென்று என் நினைவுகளிலே  மிக பழைய நினைவு எது. என்னால் எந்த நினைவு வரை பின்னோக்கி செல்லமுடியும் இதை ஒரு தவமாக செய்து விடவேண்டும் என்று முடிவு செய்தேன். கல்லூரி படித்த போது கொஞ்சநாள் தியானம் கத்துகிறேன்னு கண்ணைமூடி முயற்சி செய்து முடியாமல் கைவிட்டிருந்தேன். அந்த தியான அறிவை இன்று பரிசோதித்து பார்த்துவிடுவது என்று கண்ணைமூடி உக்கார்ந்தேன். ஒரே இருட்ட இருந்துச்சு.   நல்லா மூச்சு இழுத்து விட்ட மனசு லேசாகும் தியான வகுப்பில் சொன்ன ஞாபகம். நல்லா மூச்சு இழத்து விட்டேன்.    

      நாசி தொண்டை நெஞ்சு உடம்பு என்று மூச்சு பரவுவதை உணரமுடிந்தது. என் உடலை உணர முடிந்தது. வேறு ஒரு மனிதனை பார்ப்பது போல் என்னையே நான் பார்க்க முயற்ச்சித்து முடியவில்லை. பழைய நினைவுகளை அசைப்போட முயன்றபோது என் கிராமம் என்முன் காட்சியாக விரிந்தது. 

     சரி எங்கிருந்து ஆரம்பிப்பது யாரில் இருந்து ஆரம்பிப்பது. முரட்டுகாளை படம் பார்த்துட்டு நானும் நண்பர்களும் ஊருக்கு திறம்பி வந்துகொண்டிருந்தோம். எதுத்தாப்பிடி என் மாமா குடும்பத்துடன் மாலை காட்சி பார்ப்பதற்காக வந்துகொண்டிருந்தார். அவரை தூரத்தில் பார்த்தவுடன் முடிவுசெய்து விட்டேன் ரஜினியை இரண்டாவது முறைபார்ப்பது என்று.  மாமாவிடம் கெஞ்சினேன் அழுதேன் முடியாது ஊருக்கு போ என்றார்.  இதற்க்குள் நண்பர்கள் குறைய தூரம் போயிருந்தார்கள். ஓடிப்போய் உன் நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு போ இருட்டுகிறது என்று அவரும் நடக்க ஆரம்பித்தார். நான் நடுவில் இருட்டியதால் பயமாகவும் அழுகையாகவும் வந்தது. மாமாவும் நண்பர்களும் ஒத்தையடி பாதையில் எதிர் எதிர் திசையில் வெகுதூரம் போயிருந்தார்கள். கொஞ்சதூரம் கழித்து புதர் மறைவில் ஒளிஞ்சு இருந்து பார்த்த மாமா.  நான் போகவில்லை என்று தெரிந்து அழைத்து சென்றார். நான் திரையில் பார்த்த முதல் படம் நான் கடைசியாக இருமுறை திரையில் பார்த்த ரஜினி படம். 

   சாப்புடுரையாட சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மாமா கேட்டார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாப்பிட்டான் என்றாள் அத்தை. பரவாயில்லை கொஞ்சம் சோறும் இன்னக்கி உருக்குன நெய்யும் ஊத்து அவனுக்கு பிடிக்கும் என்றார் மாமா.  அத்தையும் மாமாவும் வெத்தலை போட்டார்கள்  சாப்பிட்டு முடித்து.   நான் கேட்டதற்கு ஆம்பளைப்பய வெத்தல போட்ட கோழி முட்டும் என்றாள் அத்தை. தரையில் விழுந்து அழுதேன். ரோஜா பாக்கின் காகிதம் என் கையில் பட்டது. யாருக்கும் தெரியாமல் காகிதத்தை வாயில் வைத்து சுவைத்தேன்.

      ஒரு நாள் காலை தூங்கி எழுந்தபோது மாமா போர்வையை போர்த்திக்கொண்டு திண்ணையில் உக்கார்ந்திருந்தார். அவருக்கு காய்ச்சல் என்றாள் அத்தை. பெரியகுளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் மாமாவை. மாமா ஒரு மாசம் கழித்து ஊருக்கு வந்தார் பாதியாக.  மாமா நடமாடி பார்க்கவில்லை. அதற்க்கு பிறகு படுத்தே இருந்தார். 

      நான் மாமாவை பார்க்கவேண்டும் என்று அழுதேன். என்னை என் மாமாவின்  மகன் தோளில் தூக்கி காட்டுகிறார். எனக்கு வெறும் தலைகளாக தெரிகிறது. வெட்டியான் எல்லாரும் விலகுங்க பரமு அவங்க மாமா முகத்த பாக்கனுமாம். எல்லோரும் விலக வெட்டியான் எருவை விலக்குகிறான். மாமாவின் முகம் எருவுக்கு  நடுவே. 

     என்னால் இதற்கு மேலும் தொடர முடியாமல் கண்ணை திறந்தேன். பரமா...பரமா.. கதவுக்கு வெளியே அப்பா. பனித்திருந்த கண்ணை துடைத்து கொண்டு எழுந்தேன் கதவு திறக்க.Saturday, June 12, 2010

அமெரிக்கரயிலில் தமிழ்ப்பெண்

       குளித்து முடித்து கண்ணாடி பார்த்து தலை வாரிக்கொண்டிருந்தேன். குளியல் அறைக்கதவை ஆள் நெருங்கும் சப்தம். கதவு தட்டும்முன் திறந்தேன் துண்டுடன் நண்பன். எனக்கு அகநானூரில் வரும் கதவானாள் என்ற சொல் நினைவுக்கு வந்தது. பத்து நிமிடம் லேட்  என்றான் நண்பன். அலமாரி திறந்து எதோ ஒரு சட்டையும் பேண்டும் எடுத்து போட்டுக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தேன்.


    கொஞ்சநாளா நேரம் இல்லாததால் காலை உணவுக்குப்பதில் ஹோர்லிக்ஸ்க்கு   மாறியிருந்தேன். ஹோர்லிக்ஸ்யை உறிஞ்சிக்கொண்டு நண்பனுக்கு காத்திருந்தேன். டிவியில் சக்தி டவுன்லோட் செய்து கொடுத்த இளையராஜா பாடல் ஓடிக்கொண்டிருந்தது.  "காத்தடிச்சா தாங்காதடி மல்லியப்பூ  மாராப்பு" என்று நாயகியை சீண்டிக்கொண்டிருந்தான் நாயகன். "கையிருக்கு காவலுக்கு" என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் நாயகி. 


      நேரமே ஆபீஸ்க்கு போகணும் மீட்டிங் இருக்கு. குளியல் அறை நோக்கி போனேன் உள்ளே நண்பன் புதிய எ ஆர் ரஹ்மான் பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தான். பாடலை விட எனக்கு தண்ணியின் சத்தம் அதிகமாக கேட்டது.  அதுவும் நன்றாகவே இருந்தது. கதவு தட்டி நான் முன்னே போகிறேன் மீட்டிங் இருக்கு என்றேன் சரி என்றான் நண்பன். 


     மூன்று சிக்னலில் காத்திருந்து ரயில் நிலையம் அடைந்தபோது தூரத்தில் ரயில் வந்துகொண்டிருந்தது. உள்ளே முழுதும் மூடிய அமெரிக்க ஆண்களும் கொஞ்சமே மூடிய  அமெரிக்க பெண்களும் கலந்து அமர்ந்திருந்தனர். நண்பனுடன் வந்தால் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு செல்வோம்.  நண்பன் இல்லாததால் மூவர் அமரும் இருக்கையில் இரண்டவதாக அமர்ந்தேன் நடுவில் இடம்விட்டு.  இந்த இருக்கையில் ஒரு வசதி மூன்றாவதாக யாரும் அமர்வதில்லை. தூங்கினாலும் அடுத்தவர் மீது விழத்தேவையில்லை.


      இங்கு ரயிலில் யாரும் பேசி பார்த்தது இல்லை இந்திய லைப்ரரியைவிட அமைதியாக இருக்கும். இங்கு எல்லோரும் iPod - ல் பாட்டு கேட்டுக்கொண்டோ அல்லது புத்தகம் வாசித்துக்கொண்டோ இருப்பார்கள். எனக்கு பேச ஆளில்லாததால் தூங்கிப்போனேன்.  தமிழில் பேசும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். 


      என் அருகே மூன்றாவதாய் ஒரு தமிழ்ப்பெண் போனில் பேசிகொண்டிருந்தாள் .  அவள் ஊரில் இருந்து வந்து கொஞ்சநாள் தான் ஆகியிருக்கவேண்டும். புருவம் திருத்தியிருக்கவில்லை. முடியை நேராக்கி விரித்துப்போட்டு கழுத்துவரை குட்டையக்கிருக்கவில்லை. உடலோடு ஒட்டிய பனியனோ ஜீன்ஸோ அல்லாது சுடிதார் அணிந்திருந்தாள்.  அந்த பெட்டியில் அவள் மட்டும் தனித்திருந்தாள்.  நான் ஒரு விநாடி ஊருக்குபோய் திரும்பியிருந்தேன்.Wednesday, June 9, 2010

ஆத்தா அக்கா மகள்

       விருமா, "குண்டு வெளையாட போறேன் நீயும் வரயா?". நான் வரலே, எங்க ஆத்தா சீக்கிரம் வீட்டுக்கு வரச்சொல்லுச்சு. நான் நேரே வீட்டுக்கு போகணும். எங்க அக்கா பேர்காலத்துக்கு எங்க வீட்டுக்கு வருது.  அவங்க அப்பா  தச்சு கொடுத்த உரப்பையில புத்தகம் நோட்டு பள்ளிகொடதில போடுற மதியசாப்பாடு சாப்பிடுற வட்டி எல்லாத்தையும் திணித்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். 

     விருமன் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியே அவங்க அக்கா நாலு மணி பஸ்ல வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்க அக்கா விருமனுக்கு பிடிச்ச சேவு அதிரிசம் வாங்கிட்டு வந்திருந்தாங்க. அவங்க அப்பத்தா, "எல்லாத்தையும் இன்னக்கே தின்னு தீத்திறதே நாளக்கி கொஞ்சம் பள்ளிகொடத்துக்கு கொண்டுபோகவும் வையி" என்றாள். அவங்க அப்பத்தா சொன்னா எதையும் காதில்வாங்கிக்கொள்ளாமல் அதிரிசத்தை வாயில் திணித்துக்கொண்டு சேவை கால்சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வெளையாட ஓடினான். 

    விருமன் வெளையாடிட்டு வீட்டுக்கு வந்தப்ப, நெறைய பக்கத்துக்கு வீட்டு பொம்பளங்கலாம் அவங்க அக்காவ பாக்க வந்திருந்தாங்க.  ஒ புருசன் மாமியா எல்லாம் நல்ல இருக்காகள என்றாள் பக்கத்து வீட்டுக்கிழவி.  இருக்கக என்று பட்டும் படாமல் சொன்னாள் அக்கா. "ஏண்டி இழுக்கிறே" என்றாள் கிழவி. "மூணாவதும் பொம்பளப்பிள்ளைன்ன வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அவங்க மாமியா சொல்லிட்ட அதான் வருத்தமா இருக்க" என்றாள் ஆத்தா.  "அவளும் பொம்பளதானே பின்னே ஏன் பொம்பளபிள்ள வேணாங்கிற" என்றாள் கிழவி.  

      விருமா, "நீ இன்னக்கி பள்ளிகொடத்துக்கு போக வேணாம், அக்காவுக்கு கொளந்த பொறந்த அக்கா வீட்டுல சொல்ல போகணும்" என்றாள் விருமானின் ஆத்தா. ஏங்க கடைக்கு போயி பேர்காலத்துக்கு தேவையான சாமான வாங்கிகிட்டு வாங்க என்று அப்பனை ஏவினாள். "டேய் அப்படியே ஒரு வெடக்கோழி வாங்கிட்டு வா பச்சஒடம்புக்கு நல்லது வலி எல்லாம் போயிரும்" என்றாள் விருமானின் அப்பத்தா. எல்லாத்துக்கும் சரி என்று தலைய ஆடிட்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கிளம்பினார் விருமானின் அப்பா.

        விருமா, "உங்க அக்காவுக்கு பொம்பளபுள்ள பொறந்திருக்கு நீ பாக்க போகலைய" என்றாள் தண்ணி எடுக்க வந்த விருமானின் வயதொத்த பக்கத்து வீட்டுச்சிறுமி. விருமன் வெளயாட்ட பாதியிலே விட்டுட்டு வீட்டுக்கு ஓடினான். விருமன் பிறந்த கொளந்தைய  பக்கத்தில பாக்கிறது இதான் மோதல.  "நீ என்னடி பண்ணுவ பாவம் கொளந்த பால் கொடு என்று அதட்டினால்" அக்காவை பக்கத்து வீட்டுக்கிழவி.  ஆத்த நான் வேணுமுன்ன அக்காவுக்கு கொளந்த பொறந்தத அக்கா வீட்டுல சொல்லிட்டு வரவா என்ற விருமனிடம் அதல்லாம் வேணாம் நீ வெளையாட போ என்றாள் விருமானின் ஆத்தா.

        விருமன் வெளையாடிட்டு வீட்டுக்கு வந்தபோது கொளந்தையை தேடினான். அவங்க அக்கா சுவத்து  பக்கம் திரும்பி அழுது கொண்டிருந்தாள். அழாதேடி என்று மகளை தேத்திகொண்டிருந்தாள் விருமானின் ஆத்தா. மூளையில் உக்கார்ந்து எங்கோ பார்த்துகொண்டிருந்தாள் விருமானின் அப்பத்தா. விருமனுக்கு அங்கிருக்க பிடிக்காமல் வெளியேறி, நண்பனின் வீட்டுக்கு போனான்.

         "விருமானின் ஆத்தாதான் பாலில் நெல்ல போட்டு கொளந்தைக்கு கொடுத்து கொன்னுட்டாங்க" , என்று சொல்லிகொண்டிருந்தாள் பள்ளி நண்பனின் ஆத்தா. அவனுக்கு ஆத்தா மேல் கோவம் கோவமாக வந்தது.  விருமன் நேராக மாட்டுதொழுவத்துக்கு போயி அங்கிருக்கும் கயித்து கட்டிலில் படுத்து யாருக்கும் கேட்காமல் அழுதான்.

       விருமனிடமிருந்து போன்,  இப்படி முடிக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்த விருமானின் பள்ளி நண்பனுக்கு. மறுமுனையில் விருமன், "எனக்கு  பெண் குழந்தை பிறந்திருக்கிறது. செத்துப்போன எங்க ஆத்தா அப்படியே பொறந்த மாதரி இருக்குடா. நல்ல கலருடா செத்துப்போன எங்க அக்கா கொளந்தபோல " என்றான்.

Monday, June 7, 2010

மிதமான காற்றும் இலையும்

மிதமான காற்றும் இலையும்

      Mobile - ல் அடித்த ஆறு மணி அலாரத்தை அணைத்துவிட்டு மறுபடியும் போர்வைக்குள் புகுந்தேன் எழுந்திருக்க மனமின்றி. மனசுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மனைவி குழந்தையுடன் நேற்று நிகழ்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. எது சாப்பிட்டாலும் வாந்தியாக வருகிறது ரொம்ப கஷ்ட்டமாக இருக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு என்றாள் மனைவி. குழந்தை எப்பப்பா வருவிங்க என்றாள். Fourth Std half yearly exam leave-க்கு வந்திருவேன் என்றேன்.

       உலகத்திலே மிகவும் வருத்தமான ஒன்று, ஒருத்தர் கஷ்டபடுறத ஒரு பார்வையாளன ஒன்றும் செய்யாமல் பார்த்துகொண்டு இருப்பது. என்னால India - யாவில் இருக்கிற குடும்பத்துக்கு phone பண்ணலாம் chat பண்ணலாம் பணம் அனுப்பலாம். அவங்க கஷ்டப்படும் போது ஒரு துரும்பைக்கூட என்னால நகர்த்த முடியாது. Office - க்கு போக மனமின்றி leave போடலாமுன்னு தோனுச்சு.

          Sick leave போல மனசுக்கு சரியில்லை என்றாலும் leave போடுறதுக்கு ஒரு category - யை corporate company எல்லாம் கொண்டு வரணுமுன்னு தோனுச்சு. உடம்புக்கு முடியலைனாலும் ஓரளவுக்கு வேலை செய்யலாம் மனசு சரியிலைன்ன எப்படி வேலை செய்யிறது corporate company மேலே கோவம் கோவமாக வந்தது.
        
         Leave - விட leave latter எழுதிறது கொடுமை. எனக்கு exam - ல கூட leave latter எழுத பிடிக்காது.  போர்வைக்குள் இருந்தவாரு laptop - ய அருகில் இழுத்து I'm not feeling well and taking sick day என்று பொத்தம் பொதுவாக ஒரு email - லை manager   - க்கும் team உள்ள மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டு மறுபடியும் முகத்தை போர்வைக்குள் புதைத்தேன்.

       பக்கத்தில் உறங்கும் நண்பனை எழுப்பி நான் office - க்கு வரல நீ வேணுமுன்ன எழுந்துக்க என்று சொல்லலாமுன்னு தோனுச்சு ஆனால் அவன் கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது உறங்கட்டுமுன்னு விட்டுடேன். நண்பனின் ஏழு மணி அலாரம் அடித்து. அவன் மெல்ல எழுந்து காபி கலந்து குடித்து email check பண்ணி குளித்து சரியாக ஏழரைக்கு room - ய  விட்டு போயிருந்தான்.  எழுந்திருக்க மனமில்லாது உறங்கிபோனேன்.

           Mobile சப்தம் என் தூக்கத்தை கலைத்திருந்தது mobile - ல நண்பன் கூப்பிடிருந்தான் call - யை எடுத்தேன். மறுமுனையில் அவன் "உடம்புக்கு முடியலைய இல்ல usual sick leave - வ" என்றான். நான் usual sick leave தான் என்றேன் வருஷ கடைசியில சும்மாதான போகபோகுது அதான் எடுத்தேன் என்றேன். நான் முடிபதற்குமுன் மறுமுனை துண்டிக்கபட்டிருந்தது. நேரத்தை பார்த்தேன் மாலை நாலு என்றது.

            மெல்ல எழுந்து காபி கலந்து கொண்டு பின் கதவு திறந்து பால்கனிக்கு சென்றேன். வானம் மேகமுட்டதுடன் மிதமான காற்று வீசியது அது தோட்டத்தில் இருந்த இலைகளுக்கு நடுவே புகுந்து சென்றது. அந்த காற்று இலைகளை வருடிசென்றது இலைக்கு சுகமாக இருந்திருக்கும் என்றே தோன்றியது.

Sunday, June 6, 2010

குழந்தையின் பதில்

Office-ல் இருந்து ரெண்டு ரயில் மாறி வீட்டுக்குள் நுழைந்தபோது ஒரு coffee சாப்பிட்டா நல்ல இருக்குமுன்னு தோனுச்சு. மனைவின் நெனப்பு வந்ச்சு. Refrigerators-ல இருந்து பால எடுத்து instant coffee பொடி கலந்து oven - ல  வைத்து ரெண்டு  minute set பண்ணினேன்.   coffee குடித்து கொண்டே net - ல தமிழ் நாளிதழை நோட்டம் விட்டேன். ரெண்டு நாள video chat - ல வரசொன்ன பொண்டாட்டிகிட்ட  நேரம் இல்லன்னு சொல்லி இருந்தேன். Computer  5.30 pm காட்டியது, இப்ப இந்தியாவில 5.00 am தான் இருக்கும் தூங்கிகிட்டு இருப்பா கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடலாமுன்னு  இருந்தேன். அதுக்குள்ள அவளே online - ல வந்தா.  காசு அனுப்பங்க பொண்ண computer class அனுப்பனும் என்றாள். Leave - ல ஊருக்கு போயிருந்தேன் சொன்னா. சரி எல்லாரும் நல்ல இருக்கங்களா, அப்புறம் என்ன சொல்றங்க  என்று கேட்டு வைத்தேன். நீங்க எல்லாம் பண்ணிகொடுத்தும், உங்க அம்மாவும் அப்பாவும் ஊருல இருக்க உங்க தம்பிக்குத்தான் support பண்ணி  பேசுறாங்க என்றாள். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் வழக்கம் போல விழித்தேன். தாத்தாவையும் அப்பத்தாவையும் சித்தப்பாதானே பக்கத்தில இருந்து எல்லாம் பாத்துகிறாரு என்றாள்  அங்கு இருந்த என் பொண்ணு.  எனக்கு அவளின் பார்வை சரி என்றே பட்டது பெருமையாகவும்  இருந்தது.

Friday, June 4, 2010

த்ரிஷாவும் நானும்


நான் பிறந்தபோது
அழுதேனோ தெரியாது 
நீ பிறந்தபோது 
அழுதேன் 

உயிரை பிரிந்ததாய்
உணர்ந்தேன் 
உன்னை விட்டு 
ஊருக்கு போகையில் 

நான்  வேண்டியது 
கிடைத்ததில்லை 
நீ வேண்டியது 
கிடைத்திட விளைகிறேன் 

என் நாள் 
உன் குரல் கேட்டு 
விடியவும் முடியவும் 
செய்யும்

விளையாட்டாய் 
நீ உன்மடியில் 
எனைசாய்த்தபோது
என் தாய்மடி உணர்ந்தேன் 

என் எல்லா 
திசையிலும் உன்குரல்
என் எல்லா 
பக்கத்திலும் உன்முகம்


Thursday, June 3, 2010

மனைவி அவள்

மனைவி அவள்
எல்லோரையும் புரிந்துகொள்ள
அவளை புரிய
யாரும்மில்லை

மனைவி அவள்
எல்லோருக்கும் சமைத்து
அவள் சாப்பிட்டாளா
யாருக்கும் கவலையில்லை

மனைவி அவள்
எல்லோருக்கும் காதுகொடுத்து
அவள் பேச்சுக்கேக்க
யாரும்மில்லை

மனைவி அவள்
குழந்தையின் பாடம்படித்து
அவள் வேலை
துறப்பாள்