வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, September 24, 2010

வண்டிக்காரன் பாகம் 5

நரிவிரட்டியை வீட்டுக்கு வந்து தன்னை பார்க்க சொல்லி ஆள் அனுப்பினார் இன்ஸ்பெக்டர்.  இந்த கேஸ்யை ஸ்டேசனில் வச்சு விசாரிக்க முடியாது. தன் சொந்த விருப்பத்தின் பேரிலும் தன் நண்பனின் அம்மாவுக்காகவும் விசாரிப்பது. வண்டிக்காரன் கடைசியா ஏதாவது சொன்னாரா என்று கேட்கவே இந்த விசாரணை. நரிவிரடியிடம் விசாரணையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ன கேட்பது எதை முதலில் கேட்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார் இன்ஸ்பெக்டர். 

"டொக்...டொக்... சார்...சார்..."  யோசனையில் இருந்து விடுபட்ட இன்ஸ்பெக்டர் நரிவிரட்டி ஒரு பையுடன் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டுருப்பதை பார்த்தார்.

"சார் வரச்சொன்னிங்கலாம்...."

"ஆமா உள்ள வாங்க..." என்று உக்கார சேர் நகத்திபோட்டார் இன்ஸ்பெக்டர். 

"என்ன விஷயமா என்ன வரச்சொன்னிங்க சார்..."
"நான் நேரே விசயத்துக்கு வரேன்... ஏன் வண்டிக்காரன கொலை பண்ணிங்க... எதுக்கு பண்ணிங்க... எப்படி பண்ணிங்க..."

"உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்... அதுக்கும் முன்னாடி எனக்கு நீங்க ஒரு உண்மையச்சொல்லனும்..."

"கேளுங்க..."

"நீங்க நம்ம பழைய பிரசிடன்ட் வெள்ளைசாமியோட பையனா ?"

"ஆமாம்..." இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று ஒத்துகொண்டார் இன்ஸ்பெக்டர்.

"அப்ப சரி தம்பி... உங்க அப்பா இந்த கிராமத்துக்கு எவ்வளவோ நல்லது பண்ணியிருக்காரு... உங்க அப்பா பிரசிடன்டா இருந்தப்பதான் நாம ஊரு கம்மா வெட்டுனது... பள்ளிக்கொடம் வந்தது... ஏன் கரண்டு இழுத்து நாம ஊருக்கு வெளுச்சம் போட்டதே உங்க அப்பாதான்... நீங்களும் நல்லவராத்தான் இருப்பிங்க தம்பி... உங்கள நம்பி நடந்த உண்மையெல்லாம் சொல்றேன்... நல்லது கெட்டது நீங்களே பாத்து செய்யுங்க..."

"முதல நடந்தது என்னனு சொல்லுங்க... நல்லது கெட்டது பின்ன பாக்கலாம்..."

"வண்டிக்காரனை பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல... உங்களுக்கே அவன் செஞ்சது எல்லாம் தெருஞ்சிருக்கும்..."

"ஏன் கொலை பண்ணனுமுன்னு முடிவேடுத்திங்க..."

"அவன் சாராயம் காச்சுறதுக்கு என்னோட தோட்டத்துல இருந்துதன் தண்ணி எடுத்தான்... எடுக்கவிடாட்டி என்கூட சண்டைபோடுவான்... அவன் போலீஸ்ல பிடிபடும் போதெல்லாம்... விசாரணைன்னு போலீஸ் என்னை தெனமும் நடக்க விட்டாங்க... அப்ப போலீஸ் ஸ்டேஷன் வேறே சாப்டூர்லே இருந்துச்சு... போக வர பத்து மையில் நடக்கணும்... அவனால நான் ரெம்ப பாதிக்கப்பட்டேன்... ஆனாலும் சொந்த ஊருக்காரன்னு முடுஞ்ச வரைக்கும் எனக்கு எதுவும் தெரியாதுன்னுதான் சொன்னேன்... சாட்சி இல்லாம போலீஸ் அவனை உள்ள தள்ள முடியாம கஷ்ட்டப்பட்டாங்க... அவன் உள்ளேயும் போகம... சாராயம் காச்சுறதையும் நிறுத்தாம... அவனாலே நான் ரெம்ப கஷ்டப்பட்டேன்..."

"இதுதான் கொலைசெய்யா காரணமா ?"

"இதுமட்டும் இல்ல தம்பி... ஊருல அவனுக்கும் என் பொண்டாடிக்கும் தொடர்புன்னு என் காது படவே பேசிக்கிட்டாங்க... நான் நம்பல.. ஆனா போலீஸ் சொல்லுச்சு... அவனுக்கும் என் பொண்டாடிக்கும் தொடர்பு இருக்காதனாலே தான்... நான் அவன்கிட்ட காசு வாங்கிட்டு உண்மையே சொல்லன்னு சொன்னங்க... அப்பதான் முடிவு பண்ணுனேன் வண்டிக்காரன கொலைபன்னனுமுன்னு..."

"சரி எப்படி கொலை பன்னேங்க..."

"அவனோட கொலையே ரெம்ப நிதானமா... யாரும் கண்டுபிடிக்க முடியாத மாதரி செய்யானுமுன்னு முடிவு செஞ்சேன்... அதுக்காக புதுசா அருவா வேல்கம்பு கதியெல்லாம் அடுச்சேன்... ஏன்னா என்னோட கசப்பு கடையில இருக்க அருவ கத்திய வச்சு கொலை செஞ்சா எங்க போலீஸ் மோப்பநாய் கண்டுபிடுச்சுருமொன்ன பயம்... அந்த புது அருவ கத்திய அவனுக்கு தெரியாம அவன் சாராயம் காச்சுற எடத்துக்கு பக்கத்துலேயே ஒரு மரபோந்துல ஒலுச்சு வெச்சேன்..."

"கொலையா எப்ப பன்னேங்க..."

"ஒரு முழுநிலா இருக்குற பவுர்ணமியில கொலை பண்றதுன்னு முடிவு பண்ணினேன்... அவன் அன்னிக்கு கட்டாயம் சாராயம் காச்சா வருவான்... அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் செஞ்சேன்... நானா எனக்கு பெதிபோரதுக்கு மருந்து சாப்பிட்டுட்டு எழுமலை கவர்மெண்டு ஆஸ்பத்திரியில ரெண்டு நாளைக்கு முன்னாடியே அட்மிட் ஆனேன். கொலை செய்யணுமுன்னு முடிவெடுத்தா அன்னிக்கு யாருக்கும் தெரியாம ஆஸ்பத்திரியில இருந்து அவன் சாராயம் காச்சுற கரட்டுக்கு வந்தேன்... ஒரு பெரிய பானையில இருந்து டுயூப் வழியா சின்ன பானைக்கு சாராயம் சொட்டு சொட்ட போயிக்கிட்டு இருந்துச்சு... அவன் தூங்கிக்கிட்டு இருந்தான்... இதுதான் சரியான சமயமுன்னு...  சாராயம் காச்சுறதுக்கு நேரே மேலே ஒரு பெரிய பறையில மறஞ்சிருந்த நான் தூங்கிக்கிட்டு இருந்த அவன் கழுத்த குறிபார்த்து வேல்கம்ப எறிஞ்சேன்... அது கரக்டா அவன் கழுத்துல பாஞ்சது... அவனிடம் ஒரு அசைவும் இல்ல...சரின்னு கீழ எறங்கிப்போனேன்..." 

"அப்புறம் என்ன பன்னேங்க..."

"அவன் வலியால் துடிக்கலே...கால் கை அசையலே...  மெதுவா பக்கத்துல போயி உடம்ப தொட்டு பாத்தா ஒடம்பு ஜில்லுன்னு இருந்துச்சு... எனக்கு தூக்கிவாரி போட்டுருச்சு... எனக்கு தெருஞ்சு அவன் நாலு அஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடியே செத்து போயிட்டன்..."

வண்டிக்காரன நரிவிரட்டி கொலை செய்யவில்லை என்றால் அவன் எவ்வாறு இறந்தான்?அவன் ஏன் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டான்? அவன் தலை மட்டும் எரிக்கப்பட்டது ஏன்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, September 17, 2010

வண்டிக்காரன் பாகம் 4

வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் 

கராணங்கள் எல்லாம் சரியாகத்தான் ஆனால் நரிவிரட்டியை அணுகுவதில் சிறிய சிக்கல். அவருக்கு நான் யார் என்பது தெரிந்துவிட்டது என்பது என் யூகம். காரணம் அவரின் முதல் பார்வை அவர் கேட்ட கேள்விகள். நானும் இதே ஊரைச்  சேர்ந்தவன்தான். நானும் வண்டிக்காரன் மகன் அசோக்கும் நல்ல நண்பர்கள் சிறுவயதில். நான் அந்த ஊரிலே உள்ள முக்கிய மனிதரின் பிள்ளை. என் அப்பாவுக்கு அசோக்குடன் சேர்வது பிடிக்கவில்லை இருந்தும் எங்கள் நட்பு தொடர்ந்தது. 


வண்டிக்காரன் இறப்பால் என் நட்பை இழந்தேன். பின் நானும் ஆறாவது வெளியூரில் படிக்க மெல்ல என் குடும்பமும் நகரத்தை நோக்கி நகர தொடர்பு இல்லாமல் போனது. மறுபடியும் மாற்றலாகி இப்பொழுது இங்கே. இந்த இடமாற்றம் நான் விரும்பி கேட்டது. என் நண்பனின் அம்மாவுக்காக. நான் இந்த ஊர்க்காரன்... என் அப்பாவின் முகச்சாயல் இதைவைத்து நரிவிரட்டி என்னை கண்டுகொண்டார். நான் போலீஸ் என்று தெரிந்த அவர் என்னை மேலும் கேள்வி கேட்க்காது அங்கிருந்து நகர்ந்தது என் சந்தேகத்தை உறுதிபடுத்தியது.


நடுவில் அசோக்கை பார்க்க முயற்சித்து முடியவில்லை. ஒருமுறை அவரின் அம்மாவின் ஊர்க்கு போனேன். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. அசோக் அம்மா அவனை படிக்க வைப்பதற்காக சென்னையில் ஏதோ சிறிய வேலையில் சேர்ந்து அவர்கள் அங்கு சென்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். பாவம் அசோக்கும் அவன் அம்மாவும். 

அசோக் அம்மா அந்த காலத்திலேயே பத்தாவது படித்தவர்கள். எப்படி வண்டிக்காரனை காதலித்து கல்யாணம்... என்னால் நினைத்து பார்க்கமுடியவில்லை அதுவும் சாராயம் காச்சுரவனை.  ஆனால் வண்டிக்காரன் ஒரு சகலகலா வல்லவன்... நல்ல பாடுவான்... நல்ல மாடு அனைவன் சல்லிக்கட்டில்... நல்ல வண்டி ஓட்டுவான்... ஏதோ ஒரு ஊர்க்கு நாடகம் போடப்போனபோது கண்மணி அம்மா இவனை நல்லவன் என்று நம்பி ஏமாந்திருக்கிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு எவ்வளவோ முயன்றும் திருத்தமுடியவில்லை. பாவம் நிறைய கஷ்ட்டப்பட்டர்கள் பல காரணங்களுக்காக. அவன் செய்யும் எல்லா தவறுக்கும் இவரும் அசோக்கும் பதிக்கபட்டனர்.

வேலையில் சேர்ந்தபிறகு அசோக்கை தேடுவதைத் தீவிரப்படுத்தினேன். இருபது வருடங்களுக்கு முன் என்னுடன் கிராமத்தில் படித்த நண்பனை கண்டுபிடிப்பதில் சற்று சிரமமாக இருந்தது. என் நண்பர்கள் சொல்லி எல்லா சோசியல் நெட்வொர்க் இணையதளத்தில் சேர்ந்தேன். பின் அசோக்கை இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது. காரணம் அவன் wild life photographer ஆகிருந்தான். எல்லா இணையத்திலும் இருந்தான். அவனை தொடர்பு கொண்டு ஒரு முறை கண்மணி அம்மாவையும் அவனையும் பார்க்க போயிருந்தேன். 

அவன் முழுவது மாறிப்போயிருந்தான் அவன் உலகம் குறித்த பார்வை மாறிப்போயிருந்தது. அவன் அவன் அப்பா வண்டிக்காரனை முழுவதும் மறந்துபோயிருந்தான். உண்மைதான் அவன் அப்பா குறித்தா எந்த நல்ல நினைவுகளும் அவனுக்கு இருந்திருக்க வாய்ப்பு குறைவே. அவன் மிகவும் வறுமை கஷ்டம் மட்டுமே பார்த்திருந்தான் இந்த ஊரில் இருந்தபோது. அவன் அம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவனை மிகவும் நல்லவனா வளர்த்திருந்தார். நான் சும்மா கேட்டேன் உன் அப்பாவை கொலை செய்தவரை கொண்டுபிடிக்க வேண்டுமா என்று. அது வீண் முயற்சி மேலும் அவர் ஒன்றும் நல்லவர் இல்லை. அவர் பல குடும்பங்களை கெடுத்தவர் தண்டனை அடைய வேண்டியவரே என்று. எனக்கு ஆச்சிரியத்தை தந்தது.

என் போலீஸ் புத்தியும் என் ஆர்வமும் சும்மா இருக்கவில்லை. கண்மணி அம்மாவிடம் பேசினேன் அசோக் இல்லாதபோது. அவர்கள் சொன்னது என்னை தினுக்குற வைத்தது. நரிவிரட்டிதான் கொலைகாரன் என்றும் ஆனால் என் புருசன் தண்டிக்க படவேண்டியவர். அவரால் நரிவிரட்டியின் குடும்பம் மற்றும் பல குடும்பம் பதிக்க பட்டது. நான் அவரை திருத்த பல முயற்சி எடுத்து தோற்றுவிட்டேன். அதன் நான் நரிவிரட்டின் மேல் கேஸ் கொடுக்கவில்லை. அப்போது எனக்கு என் மகன் அவன் எதிர்காலம் முக்கியம் என்று பட்டது. அதனால் அக்கிராமத்தில் இருந்து நகர்ந்த விட்டேன் என்றார்.

நரிவிரட்டிதான் கொலை செய்தார் என்று எப்படி உறுதியாக சொல்ரிங்கம்மா என்றதற்கு. கொலை நடந்த இடத்தில் கிடைத்ததாக அவர்கள் கொடுத்தது தன் இந்த நரிவிரடியின் நரிபல் தாயித்து. நான் தான் போலீஸ் இடமிருந்து மறைத்து விட்டேன். பாவம் இனிமேலாவது நரிவிரட்டி நல்ல இருக்கட்டும் என்று. இது எதும் அசோக்கிற்கு தெரியாது என்றார்.

என் புருசன் தண்டிக்கபடவேண்டியவர் தான் ஆனால் அவரின் கடைசியில் என்ன நினைத்தார் என்ன பேசினார் அவரின் ஆசை என்னவாக இருந்தது தெரியல அதன் கஷ்டமா இருக்கு என்றார். அதன் நான் இங்கே.

அடுத்த பதிவில் நரிவிரடியிடம் கேக்கலாம் எப்படி கொலை செய்தார் என்று. வண்டிக்காரன் எதாவது சொன்னனா என்று.

Friday, September 10, 2010

வண்டிக்காரன் பாகம் 3
வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் 

"சார் டீ..." டீ பையன் டேபிளில் டீ டம்ளர் வைத்த சத்தத்தில் யோசனையில் இருந்து விடுபட்டார் இன்ஸ்பெக்டர்.

வண்டிக்காரன் கொலை செய்யப்பட்டபோது எனக்கு இந்த டீ பையன் வயசுதான் இருக்கும். எனக்கு கொலைக்கான காரணம் புரியாவிட்டாலும் இழுப்பும் அதன் வேதனையும் புரிந்தது.  வயசு ஆக ஆக கொலை யார் செய்திருக்க கூடும் என்ற கேள்வியும் அது சார்ந்த விசாரணையும் என்னுள் வேறு வேறு கோணங்களில் விரியத் தொடங்கியது அதன் முடிவு நரிவிரட்டி. நரிவிரட்டிதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று நான் நம்ப காரணங்கள் உண்டு.

காரணம் 1 
இந்த ஊரிலே அருவ வேல்கம்பு வேட்டை என்று ஆயுதங்களுடன் பரிச்சயம் உள்ளவர் நரிவிரட்டி. நரிவிரட்டி மலைக்கு வேட்டைக்கு போவதுண்டு. புதரில் ஒளிந்திருந்து எந்த மிருகத்தையும் வேட்டையாடுவதில் கில்லாடி. வேட்டைக்கு போனபோது நரியை வேல்கம்பை கொண்டே குத்தி கொன்றதால்தான் அவருக்கு இந்த பெயர். 

காரணம் 2 
வண்டிக்காரன் ஒரு வீரன் அவனை ஒதைக்குஒத்தை சண்டையிட்டு விழ்த்துவது கடினம். எனக்கு தெரிந்து வண்டிக்காரன் போதைமயக்கதில் இருந்தபோது புதரில் மறைந்திருந்து வேல்கம்பால் நரிவிரட்டி குத்தி சாய்த்திருக்க வேண்டும். பின் வண்டிக்காரனை வெட்டி கூறு போட்டிருக்க வேண்டும். நரிவிரட்டி  காசாப்பு கடை வைத்திருப்பதால் எப்படி ஒரு உடலை துண்டாக்குவது என்று தெரியும். வண்டிக்காரனை துண்டு துண்டாக வெட்டும் அறிவும் தைரியமும் நரிவிரட்டிக்கு மட்டுமே சாத்தியம்.

காரணம் 3 
மேல சொன்னா இரண்டும் நரிவிரடியின் தைரியம் சார்ந்தது. ஆனால் இது கொலைக்கான காரணம். நரிவிரட்டியின் தோட்டம் வண்டிக்காரன் சாராயம் காச்சும் கரட்டின் அடிவாரத்தில் தான் உள்ளது. அதனால் நரிவிரடிக்கு தேவையில்லாத தொல்லைகள். வண்டிக்காரன் போலீசில் மாட்டும்போது எல்லாம் நரிவிரட்டி சாட்சி என்ற பெயரில் அலக்கழிக்கபடுவது வாடிக்கை. அதனால் நரிவிரட்டியின் அன்றாடம் வாழ்க்கை வண்டிக்காரனால் பதிக்கபட்டிருந்தது.

காரணம் 4
இந்த காரணம் தான் நரிவிரட்டி வண்டிக்காரனை கொலை செய்ய முக்கியம் என்று நான் நம்புவது. வண்டிக்காரனின் தொடுப்பு மேகலா நரிவிரட்டியின் மனைவி. நரிவிரட்டிக்கு அவர்கள் தொடர்பு தெரியவந்தா என்பதில் எனக்கு சந்தேகமுண்டு. அப்படி தெரிந்திருந்தால் இது கொலைக்கான வலுவான காரணம் என்று நான் நம்புவது சரியாக இருக்ககூடும்.

இது தவிர என்னிடம் வேறு ஒரு ஆதாரமும் சிக்கியுள்ளது நரிப்பல்லு. நரிவிரட்டி கொன்ன நரியோட பல்ல தாயித்து மாதரி செஞ்சு கழுத்துல அணிந்திருப்பார். அது வண்டிக்காரன் கொலைக்கு அப்புறம் காணவில்லை. அது என்னிடம் சிக்கியுள்ளது. 

ஏன் இந்த ஆதாரங்களை தேடி அப்போது போலீஸ் போகவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமே. வண்டிக்காரனால் போலீஸ்க்கு பல தொல்லை அதனால் கேஸ்யை அவசர அவசரமாக முடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

போலீஸ்க்கு அன்று சிக்காத நரிப்பல்லு எவ்வாறு இன்ஸ்பெக்டரிடம் வந்தது? பார்க்கலாம்.
 

Wednesday, September 1, 2010

வண்டிக்காரன் (பாகம் 2)

வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் சிறிது நேரத்தில் பெருசுக்கு மயக்கம் தெளிந்தது. ஆஸ்பத்திரிக்கு போகனுமா என்றதற்கு பெருசு மறுத்தது. ஏதாவது வாங்கிசாப்புடுங்க என்று இன்ஸ்பெக்டர் கொடுத்த  ஐம்பது ரூபாயை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு முதல்முறையாக வாயை திறந்தது பெருசு.

"உங்கள நான் இந்த ஊருல பார்த்ததில்லையே.... நீங்க யாரு?"

யோசித்த இன்ஸ்பெக்டர் "ப்ரெண்டு  ஒருத்தர பார்க்கவந்தேன்" என்றார்.

"உங்கள எங்கேயோ பாத்திருக்கேன்... உங்க முகம் என் மனசுல அப்படியே ஆணி அடிச்சதுபோல பதுஞ்சுருக்கு" தாடையை தடவி யோசிக்க ஆரம்பித்தது பெருசு.

பெருசு கண்டுபிடுச்சுரும்போல என்று ஒரு நிமிஷம் ஆடிப்போனார் இன்ஸ்பெக்டர். என்ன சொல்லலாம் என்று யோசிக்கும்போதே அடுத்த கேள்வி கேட்டது பெருசு.

"என்ன போலீஸ்காரர் வண்டி போல இருக்கு. நீங்க இந்த ஊருக்கு புதுசா வந்த போலீசா ?"

"ஆமாங்க பெருசு... நான் தான் புதுசா இந்த ஊருக்கு வந்திருக்க போலீஸ்..." இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று ஒத்து கொண்டார் இன்ஸ்பெக்டர்.

கேஸ் பத்தி கேக்கலாமா? கேட்டாலும் எந்த உண்மையும் வரப்போறது இல்லை சரியான நேரத்தில் சரியான முறையில் விசாரிக்கலாம் என்று ஒரு நிமிஷம் யோசித்து வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டார். பெருசு எழுந்து நடக்க ஆரம்பிக்க இன்ஸ்பெக்டரும் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினார்.

கொஞ்சதூரம் போயி திரும்பிபார்த்த பெருசு. என் கணக்கு சரியா இருந்தா இந்த போலீஸ் கிட்ட கொஞ்சம் சாக்கரதையா இருக்கணும். இவரு இந்த ஊருக்கு வந்த நோக்கம் என்ன தெரியனும். இவர் வந்த நோக்கம் வண்டிக்காரன் கொலையாளி என்றால்? கொலைகாரன் தப்பிப்பது கஷ்ட்டம். வீட்டுக்கு வெரசா நடந்தார் பெருசு.

பைக்கை ஸ்டாண்டு போட்டுவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் கேஸ் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார். என் யுகங்கள் சரியானால் பெருசு தான் கொலையாளி. ஆனால் அதை எவ்வாறு ஊர்சிதப்படுத்துவது... அதில் நிறைய சிக்கல் இருக்கு. தான் யார் என்று தெரிந்தாலும் கேஸ் மேல் நோக்கி எடுத்து செல்வதிலும் சிக்கல். இது ஒரு மூடிய கேஸ் அரசாங்கமோ மேல்அதிகாரியோ விசாரிக்க சொல்லவில்லை. என்னை பல வருடங்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம். கட்டாயம் கண்டுபிடிக்கணும். சட்டத்தின் முன் நிறுத்தனுமா? வண்டிக்காரன் கொலை செய்யப்படவேண்டியவனா ? என்னக்கே பல கேள்விகள் உண்டு. ஆனால் எனக்காக... என் ஆத்மா திருப்திக்காக கண்டுபிடிக்கணும். 

எவ்வாறு நரிவிரட்டியாய் மடக்குவது என்று யோசித்தார். நரிவிரட்டி அதுதான் பெருசின் பெயர்.

இந்த இன்ஸ்பெக்டர் யார் ? இந்த நரிவிரட்டி என்ற பெருசு யார்? ஏன் நரிவிரட்டி  வண்டிக்காரனை கொலை செய்ததாக இன்ஸ்பெக்டர் நம்புகிறார்? இன்ஸ்பெக்டருக்கு ஏன் மூடிய கேஸ் மீது அக்கறை?
என பல கேள்விகள் உண்டு உங்களை போல் எனக்கும்.... வண்டி வரும் வரை காத்திருப்போம் ...... ????