வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, September 29, 2016

இல்லாமல் இல்லை

சோகம் சொல்லில் இல்லை
சொல்வதில் உண்டு.
கவலை கோபத்தில் இல்லை
கொள்வதில் உண்டு.
போதம் அம்பில் இல்லை
பாய்வதில் உண்டு.

#என்அடிச்சுவடு

விழுதுகள்

எங்கு சென்றாலும்
எங்கு இருந்தாலும்
இன்னும் நான்
ஒரு கிராமத்தான்.

ஒட்டிய புழுதியில்ல
ஓடும் ரத்தம்.

கிளைகள் பரவி எங்கே
விரிந்தாலும்
வேர்கள் எப்போதும் அங்கேயே.

விழுதுகள் எல்லாம்
வேர்களை தேடியே!!!

#என்அடிச்சுவடு

முடிந்தும் முடியாத

மறைந்த சூரியன்
மனசுக்குள் வெளிச்சம்.

கடந்த ரயில்
காதுக்குள் தடக் தடக்.

நின்ற மழை
நிற்காத தூறல்.

முடிந்த காட்சி
முடியாத பிம்பம்.

விலகிய சொந்தம்
விலகாத உறவுமுறை.

பிரிந்த நண்பன்
பிரியாத நட்பு.

முறிந்த காதல்
முறியாத சோகம்.

#என்அடிச்சுவடு

கோலமகள்

கனவில் புள்ளிவைத்து
நினைவில் கோலமிட்டு
நிசத்தில் கலைந்தாள்
அவள்.

#அடிச்சுவடு

அணைவரும் குற்றவாளி

ஞாபகப்பையில்
தியாகம் ஓடியாடி சேர்ப்பாள்.
நிரம்பி பை
நடுவீட்டில் வழியும் ஒர்நாள்.
வக்கில் நீதிபதி
அன்று அவள் தான் எல்லாம்.
மற்றவர்கள்
குற்றவாளி கூண்டில் வாய்மூடி.
தண்டனை வாசிப்பாள்
ஆனால் அமுல்படுத்தமாட்டாள்.
அணைவரும்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர்.
மறுபடியும்
தியாகம் தேடி ஓடி நிறைய சேர்ப்பாள்
ஞாபகப்பையில் அம்மா.
மற்றோர் நாளில்
தியாகம் நிரம்பி நடுவீட்டில் வழிய
அணைவரும்
எதுவும் செய்யாமல் காத்திருப்பர்
குற்றவாளியாக அன்றும்.

#என்அடிச்சுவடு

வலிந்த கணவன்

பாத்திரங்கள் அலம்பி
அடுக்களை ஒதுங்கி
படுக்கை விரித்தாள்.
அத்தை இரும்பி அழைக்க
சுடுசுக்குதண்ணி கொடுத்தாள்.
வலிந்த கணவன்
உறவாடி பின் உறங்கினான்.
பசியில் அழும் குழந்தை
பாலூட்டி பசி அமர்த்தி
அயர்வா சிறிதே கண்மூடினாள்.
காதுக்குள் பால்க்காரன் மணிச்சத்தம்.
தலையணை துலாவி
வெளிக்கதவுசாவி எடுக்க
குறட்டை கலைய எறிந்து விழுந்தான்
முன்னிரவில் வலிந்த கணவன்.

#என்அடிச்சுவடு

Sunday, September 25, 2016

நீ எனதானால்

எங்கிருந்தாய் இதுவரை
ஏன் வந்தாய் என் முன்னே
என் இருப்பை தொலைத்தேன்
புதிதாய் பிறந்தேன்
உன் புன்னகையில்.
உலகின்
முதல் கெட்டவன்
கடைசி நல்லவன்
அதுபற்றி கவலையில்லை
உன் புன்னகைக்காக போரும்
செய்யத் தயார்
நீ எனதானால்.

#என்அடிச்சுவடு 

ஆண்மனம்

அம்மா எனில்
வைராக்கியகாரி.
மகள் எனில்
கெட்டிக்காரி.
அக்கா எனில்
வீம்புக்காரி.
மனைவி எனில்
திமிருக்காரி.
பிடிவாதம் செயல் ஒன்றே
வெவ்வேறாய் அர்த்தம் கொள்ளுது
ஆண்மனம் !!!

#என்அடிச்சுவடு

வலி

வார்த்தை கிடைக்காமல்
................................
வரிகளுக்குள் இடம்
.........................
விட்டு நிரப்புகிறேன்
.........................
வாசிக்கும் உன்னை
..........................
வந்து அடையும்  என்
..........................
வலி என்று.

#என்அடிச்சுவடு

கரிசல்காட்டு மக்கள்

தடித்த தேகம்
காய்த்த தோல்
கருத்த நிறம்
கண்டிய கைகள்
காய்த்த விரல்கள்
முறுக்கு மீசை
முரட்டு பார்வை
அன்பு பாசம்
விருப்பு வெறுப்பு
பக்தி பரவசம்
கோபம் தாபம்
எல்லா உணர்வையும்
ஆக்ரோசமாக மட்டும்தான்
காட்ட தெரியும்
கரிசல்காட்டு வெள்ளேந்திக்கு

#என்அடிச்சுவடு

நித்தம் வேண்டும் நீ

மௌனமாய் ஓர் யுத்தம்
யுத்தத்தில் உன் சத்தம்
சத்தமில்லா உன் மௌனம்
மறுபடியும்
மௌனமாய் ஓர் யுத்தம்
...   ...   ...   ...   ...   ...
யுத்தமோ? மௌனமோ?
நித்தம் வேண்டும் நீ.

#என்அடிச்சுவடு

வாதாடிய வக்கில் பாவம்

ஒளி மலரா சேர்க்கை
செயற்கையா மலர்ந்த விவாதம்
சாட்சி வைக்கா சமாதானம்
சாட்சி வைத்து சண்டை
சண்டை சொல்ல சாட்சி
சாட்சி சொன்ன பொய்
சாட்சி சொல்லா உண்மை
உண்மையில் உள்ள பொய்
பொய்யில் உள்ள உண்மை
உனக்கும் எனக்கும் தெரியும்
வாதாடிய வக்கில் பாவம்.

#என்அடிச்சுவடு

ஒருநாளும் போகலை

ஊத்துன மஞ்சத்தண்ணி
தேய்ச்ச ஒட்டுபுல்லு
அடுத்தநா போயிருச்சு
உசுரோட ஒட்டுனநெனப்பு
ஒருநாளும் போகலையே.

#என்அடிச்சுவடு

சத்தமும்.... முத்தமும்...

காதலாய் முத்தமிட்டேன்
கோபமாய் சத்தமிட்டாள்
காதலியாய் அன்று.

கோபமாய் சத்தமிட்டேன்
காதலாய் முத்தமிட்டாள்
மனைவியாய் இன்று.

#என்அடிச்சுவடு

Tuesday, September 20, 2016

அப்பா பிள்ளை

விதை உனது
விருச்சம் எனது
***
வேர் உனது
விழுது எனது
***
உழைப்பு உனது
உயர்வு எனது
***
கனவு உனது
நிகழ்வு எனது
***
இலக்கு உனது
வெற்றி எனது
***
பாதை உனது
பயணம் எனது
***

#என்அடிச்சுவடு

நீ எனதானால்

எங்கிருந்தாய் இதுவரை
ஏன் வந்தாய் என் முன்னே
என் இருப்பை தொலைத்தேன்
புதிதாய் பிறந்தேன்
உன் புன்னகையில்.
உலகின்
முதல் கெட்டவன்
கடைசி நல்லவன்
அதுபற்றி கவலையில்லை
உன் புன்னகைக்காக போரும்
செய்யத் தயார்
நீ எனதானால்.

#என்அடிச்சுவடு

ஆள்வவன் நினைத்தால்

தலைப்பை கட்டம்கட்டி பெட்டியாக்க
மற்றோர் தலைப்பு
உருவாக்கம் செய்யப்படுகிறது.
***
பெரிதை சிறிதாக்கி புறந்தள்ள
மற்றோர் சிறிது
மடைமாற்றி பெரிதாக்கப்படுகிறது.
***
சம்பவம் மறைக்க மறக்க
மற்றோர் சம்பவம்
தற்செயல்போல் நிகழ்த்தப்படுகிறது.
***
மணியோசை முன் எழுப்பி
மற்றோர் யானை
பின் ஒழிக்கப்படுகிறது.
***
எளியவனை பலிகடா ஆக்கி
மற்றோர் வலியவன்
படையலில் படைக்கப்படுகிறது.
***
பசித்தவனுக்கு பந்தி போட்டு
மற்றோர் பூசனிக்காய்
சோற்றுக்குள் பரிமாறப்படுகிறது.
***
சாத்தியமே சத்தியமாய் சாத்தியமே
அத்துணையும் சாத்தியமே
ஆள்வவன் நினைத்தால்.
***

#என்அடிச்சுவடு

Sunday, September 18, 2016

எங்கோ வாழ்கிறார்கள்

உயிருக்கு உயிருராய்
காதலித்தார்கள்.
நண்பர்கள் சூழப் பதிவு
செய்து கொண்டார்கள்.
ஒரே கலரில் சட்டை
போட்டார்கள்.
ஒருவருக்கு ஒருவர்
விட்டுக்கொடுத்தார்கள்.
அன்பான அடைமொழியில்
விளித்து கொண்டார்கள்.
ஆண் நண்பர்கள் அவள்போல்
மனைவிக்கும்
பெண் நண்பிகள் அவன்போல்
கணவனுக்கும் பிராத்தித்தார்கள்.
ஒரு நல்ல நாளில் நண்பர்கள்
தொடர்பு எல்லைக்கு
வெளியே போனார்கள்.
எந்த சமுகவலைதளங்களும்
எங்களுக்கு உதவவில்லை.
எங்கு தேடியும் இன்றுவரை
அவர்கள் கிடைக்கவில்லை.
எங்கள் நண்பர்களை பொறுத்தவரை
அவர்கள் மட்டுமே காதலர்கள்.
எங்கோ குடும்பமாய் வாழ்கிறார்கள்.

#என்அடிச்சுவடு

தற்கொலை

விக்னேஷ்
சிலநாட்கள் இன்னும்
செய்திகளில்  தென்படப்போகும்
பெயர்.
விவாதங்களில் அடிபடப்போகும்
பெயர்.
வலை முகப்புகளில் பகிரப்போகும்
பெயர்.
அன்று மொழியின் பெயரால்
பத்துக்கு மேல்
நேற்று இனத்தின் பெயரால்
நூற்றுக்கு மேல்
இன்று ஆறின் பெயரால்
நீ.
விதைப்பது நீங்கள்
அறுவடை செய்வது என்னவோ
அரசியல் கட்சிகள்.
தமிழா....
எங்கே கற்றுக்கொண்டாய்?
நாளை எதன் பெயரால்
நிகழ்த்த போகிறாய்?
வேண்டாம் இனி எதன் பெயராலும்
தற்கொலை.

#என்அடிச்சுவடு

#என்காவேரி

Wednesday, September 14, 2016

முருங்கை

கொல்லை முருங்கைக்கு
கொள்ளை என்ன வந்தது
காய்ப்பதை நிறுத்தி கொண்டது
ஊரில் அவன் இல்லாதபோது

மனிதம் மாண்டது

அவரவர் தனித்தன்மை
ஏது என்றோம்?
இனம் என்றாய்
மொழி என்றாய்
சிறிய சிறிய
கோடு போட்டாய்
ஏன் என்றோம்?
ஆள வசதி என்றாய்
கோடுகளை சேர்க்க
பெரியகோடு போட்டாய்
எதுக்கு என்றோம்?
வேற்றுமையில் ஒற்றுமை
அதுக்கு என்றாய்
நானும் அவனும் நம்பினோம்.
ஆள வந்தாய்
அரசியல் செய்தாய்
இனம்
வேறுபாடு கற்பித்தாய்
மொழி
பிரிவினை வளர்த்தாய்
கோடு
அவனவன் எல்லையாக்கினாய்
தனித்தன்மை
வேற்றுமை ஆனது
சிறிய கோடுகள்
பெரிய கோடானது
அரசியல் ஊற்றி வளர்த்தாய்
நதி பிரிந்தது
நீர் மடைமாறியது
நதி மடலானது
நஞ்சை தாரானது
அடுப்பு அணைந்தது
வயிரு எரிந்தது
மானமுள்ளவன் இறந்தான்
ரோசமுள்ளவன் எதிர்த்தான்
எதிர்த்தவனை அடித்தான்
அடிபட்டவனும் அடித்தான்
மனிதம் மாண்டது
போர் மூண்டது.

மனிதம்?

நீரின்றி அமையாது உலகு
உலகின்றி நீர் அமையுமா?
உயிர் வாழ நீர் வேண்டும்
நீர் வாழ உயிர் வேண்டுமா?
பயிர் வாழ நீர் வேண்டும்
நீர் வாழ உயிர் வேண்டுமா?
நீரிட்டு உயிர் வளர்த்தாய்
தீயிட்டு எதை வளர்ப்பாய்?
நீர் விட்டு நேசம் சேர்த்தாய்
உதிரம் விட்டு எது சேர்ப்பாய்?
அணை வெட்டி நீர் தேக்கினாய்
எனை வெட்டி எதை தேக்குவாய்?
அவர்கள் அடித்தார்கள்
நாங்கள் அடிக்கிறேம்...
அவர்கள் எரித்தார்கள்
நாங்கள் எரிக்கிறேம்...
என்ன ஆனது மனிதம்?
போதும் வேண்டாம் இனியும்.
வீழ்வது எதுவாயினும் இருக்கட்டும்
வாழ்வது மனிதமாக இருக்கட்டும்.

மழலை வரம்

வருடங்கள் சில ஓடிவிட்டன.
இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த 
விசாரிப்புகள் இப்பொழுதெல்லாம்
அம்மாவின் பிராத்தனை
நாத்தனாளின் ஏளனம்
நட்பின் தேற்றல்
சொந்தங்களின் பரிகாசம்
அக்கம்பக்கதின் பொறனி
மாமியாரின் எல்லாமுமாய்
பரிணாமித்து பல்கிபெருகி
இலக்கின்றி எய்த
குற்றவாளியே சாட்சியாக
இலக்கு நான், குற்றவாளி
கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறேன்.
ஆலமரம்
ஆஸ்பத்திரி
ஜோஸியம்
பரிகாரம்
என தனியே அலைகிறேன்
மலடி சொல் கேளாமல்
மழலையை வரங்களாக வேண்டி!!!

மன வாசனை

நித்தம் சந்திக்கும் காபிஷாப்
அதே மூலையோர மேசை 
எதிரெதிராய் அவனும் அவளும் 
இரண்டு பக்கமும் மௌனம்
பரிசுகள் இடம்மாறின உணர்வுகளற்று
கடிதங்கள் ஒன்றொன்றாய் கிழித்தான்
வாழ்த்துஅட்டை பார்க்காமல் அழித்தாள் 
கைகுலுக்காமல் விடைபெற்று 
வீதியில் இறங்கி நடந்தனர்.
எதிர்பாராத மழை எங்கிருந்தோவர 
இருவர் மனதிலும் சந்திப்புகளின்
வாசனை.

Monday, September 12, 2016

காத்திருப்பு

இது என்கடைசி மூச்சு 
சக்தியெல்லாம் ஒன்றுதிரட்டி  
உயிரையை  சில வினாடி நிறுத்தி 
கண்களால் தேடினேன் 
வெளிநாடு போன மகன் 
இன்னும் வந்து சேரவில்லை. 
இறந்து இரண்டு நாள் ஆகிறது 
காத்திருக்கிறேன் அவனுக்காக 
காடுக்காவது  வருவான் என்று.

Saturday, September 10, 2016

கடைக்கண்

இல்லாமல் இருக்கும்
இடையில் சிக்கி
விலக மறுக்குது
விழிகள் இரண்டு
கடைக்கண் காட்டி
கரையேற்றி விடுவாயா?

Friday, September 9, 2016

மூக்குத்தி

கண்ணே காணமுடியவில்லை 
மை இருட்டு
முகத்தை கொஞ்சம் திருப்பு 
மூக்குத்தி வெளிச்சத்தில் 
முன்னேறி வருகிறேன் 
முத்தம் ஒன்னு தர.

கார்ப்பேரெட் காடு

புழுக்கம் தாளவில்லை 
தாகம் தீரவில்லை 
எங்கும் கானல்நீர்
மூச்சு முட்டுகிறது
விழி பிதுங்கிறது 
நரிகள் நிறைந்த காடு 
எங்கும் கார்ப்பேரெட் காடு
திக்கு தெரியவில்லை 
திரும்ப வழி புரியவில்லை 

கண்டு கொன்றார்

அவன் அவளை
கண்டு கொண்டான்
அவள் அவனை
கண்டு கொண்டாள்
அப்பா அவர்களை
கண்டு கொன்றார்

இதழாள்

வாசித்ததில் 
நேசித்தது
இசைந்து 
அவள் தந்த
இதழ்கள்.

Thursday, September 8, 2016

மல்லிகை

அவன் ஊரில் இல்லாதது 
பூக்காரிக்கு கூட புரிந்திருக்கிறது 
மல்லிகை சரம் வைக்காமல்
கதம்பத்தை மட்டும்
கதவில் மாட்டிவிட்டு
போயிருக்கிறாள் சாமிக்கு.

Thursday, September 1, 2016

விதை நெல் - நெல் நான்கு




விதை நெல் - நெல் மூன்று

தலையில் சும்மாடு அதுக்குமேல கூழ்ச்சட்டி இடுப்பில் நார்ப்பெட்டி  நிறைய வெதைத் தானியம் மறுகையில் கன்னுக்குட்டியும் பிடித்துக் கொண்டு புளிமூட்ட மாமா  பின்னாடி கொஞ்சத்தூரத்தில் நடந்து வந்தார் செவனம்மா அத்தை.  

தலையில் கூழ்ச்சட்டி எந்த பிடிமானமும் இல்லாமல் செவனம்மா அத்தை நடந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

நான் எழுந்து என் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு எங்க தோட்டத்தை நோக்கி நடந்தேன். என்னைப்பார்த்த அத்தை பாதையில் இருந்து சிறிது விலகி எனக்கு வழி விட்டு நடந்தாங்க.

"குதுரவள்ளி வெதைக்க போறீங்களா  அத்த" என்றேன்.

"ஆமாம்.... மருமகனே..."  மருமகனே என்னு சொன்னது அவங்களுக்கே கேட்டு இருக்காது அவ்வளவு மெதுவா தலையக்கூட நிமிராமல் கன்னுகுட்டியை பார்த்துக்கொண்டே பதில் சொன்னாங்க. பெறந்த குழந்த கூட அது மருமகன் முறை என்றால் எங்க ஊர் பொம்பளைங்க  கொடுக்கும் மரியாதை எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும்.

தம்பியை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரெண்டு ஆட்டுக்குட்டிய விரட்டிக்கிட்டு "ஆத்தா... மெதுவா போ..." என்று கத்திக்கொண்டே வேகமாக நடந்து வந்தா ஒன்பது வயது மதிக்கத்தக்க அத்தமக.  

நான் அவளை வழி மறித்து நின்றேன்.

"மாமா... வழிவிடுங்க நான் போகனும்" என்றாள்.

"உன் பேரு என்னன்னு சொல்லு... நான் வழி விடுறேன்" என்றேன்.

"செங்கனி" என்றாள்.

"நல்ல பேரு... உன் பேருக்கு என்ன அர்த்தம் ?" என்று வம்புக்கு இழத்தேன்.

"செம்மை கூட்டல் கனி" என்றாள்.

அவள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரிமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணர்வுகளை காட்டிக்கொள்ளாமல் " என்ன படிக்குற..." என்றேன்.

"இப்ப பள்ளிக்கூடம் போகல... நாலாவதோட நின்னுட்டேன்... ஆத்தா வேணாம்னு சொல்லிட்டாங்க... " என்றாள்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.

"பொம்பளப்புள்ள படிச்சு என்ன பண்ணப்போகுது... அதேன் எதுக்குன்னு நிறுத்திட்டோம்..." என்றார் அத்தை.

"அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்த... " என்றேன் வருத்தமாக.

"கூடமாட இருந்து வீட்டு வேல தோட்ட வேல கத்துகிட்டா போற இடத்துல ஒத்தாசைய இருப்பா அதான்...  தம்பி..." என்று இழத்தார் அத்தை.

"பார்த்தா நல்லா படிக்குற பொண்ணு மாதரி இருக்கா... வீட்டுல பொண்ணுங்க தான் படிக்கனும்... அப்பதான் அவங்க பிள்ளைங்க படிக்க உதவியா இருக்கும்" என்றேன். அப்போது ஏனோ குடும்பவிளக்கு பாரதிதாசன் என் நினைவில் வந்து போனார்.

"ஆமாப்பா ஓட்டத்துல கூட மொத இடத்துல வந்து இருக்கா... அவங்க வகுப்புலயே இரண்டாவதாம்" அத்த கண்ணில் ஒரு சிறிய பெருமை வந்து போனதை கவனித்தேன்.

"பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க அத்த..."  என்றேன் சிறிது கெஞ்சலாக.

"எங்க அப்பா கூட பள்ளிக்கூடம் தான் போகச் சொல்லுராங்க மாமா... ஆனா..." என்று தம்பியை இறக்கிவிட்டு அம்மாவை ஏறயிறங்க பார்த்தாள் செங்கனி.

"நான் அம்மா, அப்பாகிட்ட சொல்லிக்கிறேன். நீ பள்ளிக்கூடம் போறயா? " என்றேன்.

"சரிங்க மாமா " என்று ஆட்டுக்குட்டியை பிடிக்க துள்ளிகுதித்து ஓடினாள் செங்கனி.

செங்கனியை பார்த்தபோது என் தேன்மொழி தான் ஞாபகத்துல வந்தா? மனது பாரமானது... நல்லா மூச்சு இழந்துவிட்டேன் மனபாரம் குறையும் என்று.  ஆனால் பாரம் கூடவே செய்தது.


யார் அந்த தேன்மொழி?  ஏன் இவன் கவலையானான் தேன்மொழியை நினைத்து? தேன்மொழிக்கு என்ன ஆயிற்று?

வளரும்....

புகைப்படம்

எப்போதும் கேமராவுடன் திரிந்தாள்
எல்லோரையும் படம் பிடித்தாள்
கிளிக் கிளிக் சத்தத்துடன்
எதிர்வந்த எவரையும் விடவில்லை
பதறி விலகினர் அவளை பார்த்து
கேமராவை ஒழித்துவைத்தான் அண்ணன்
அடம்பிடிக்க எடுத்து தந்தாள் அம்மா
போஸ் கொடுக்க மறுத்தாள் அக்கா
தன்னை தானே எடுத்துக்கொண்டாள்
நாயை வளைத்து வளைத்து எடுத்தாள்
பட்டாம்பூச்சி படம்பிடிக்க ஓடினாள்
அவள் கேட்டகும் போதெல்லாம்
அப்பா சளைக்காமல் சிரித்தார்
குட்டிப்பெண் பொம்மைகேமராவுக்கு.

விடியா இரவு

நிலவு இல்லாத வானம்
இருட்டு தின்னும் இரவு
மழைவிட்டும் தூறும் மரம்
அணைய துடிக்கும் தெருவிளக்கு

எமனுக்காக காத்திருக்கும் கிழவி
தூரத்தில் குரைக்கும் நாய்
தனியே கத்தும் தவளை
உறக்கம் இல்லா புழுக்கத்தில்
பேரிளம்பெண்.