வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

கணினிப்பொறியாளன்

நான்குக்கு நான்கு சிறு பகுதி
பளபளக்கும் மேசை
சுழலும் இருக்கை சுற்றி தடுப்பு
நடுநயமாக அவன்
ஒளிரும்திரை உலகம்
காணும் உலகம் கணினிக்குள்
கவலையில்லை உலகு குறித்து
கவலையில்லை உலகுக்கும்
கணினிப்பொறியாளன் குறித்து.

#என்அடிச்சுவடு

உன் பார்வை களிம்பு

தீராத வலி
சிறிதும் பெரிதும்மாய் அடிகள்
...
நிற்காத ரத்தம்
இங்கும் அங்குமாய் கிறல்கள்
...
நீங்காத துக்கம்
ஈடு செய்யா இழப்புகள்
...
ஆறி போயின அத்தனையும்
உன் பார்வை களிம்பு
...

#என்அடிச்சுவடு

எண்ணவெளி

அலை அலையாய் நினைவுகள்
அடைவது உன் காலடி.

ஒற்றையடி பாதை நினைவுகள்
எதிரே விலக மறுக்கு.

எண்ணவெளியில் உன் நினைவுகள்
பகலிரவாய் சுற்றி சுழலுது.

நொறுங்கி போயின நினைவுகள்
அசை போட்டு போட்டு.

வார்த்தை தேடிய நினைவுகள்
வாடி வதங்கிப் போயின.

உனை எண்ணியே நினைவுகள்
எழுதியது என்வோ குறைவு.

#என்அடிச்சுவடு

கலையாத நினைவுகள்

உடுத்தும் போது எல்லாம்
கலைந்ததே வந்து போகுது

எத்தனை முறை கலைந்தாலும்
மறுமுறை கலைய தோணுது

மறைத்து மறைந்த எல்லாம்
கலைந்து காண காத்திருக்குது

#என்அடிச்சுவடு

சூதானமா இருக்கனும்

பள்ளிக்கூடம் அனுப்பயிலும்
காலேஸுக்கு கெளம்பையிலும்
வேலையில சேரயிலும்
காதல் கல்யாணத்திலும்
வெளிநாடு போகையிலும்
சூதானமா இருக்கனும்பா
சொல்லும் எங்காத்தா
வெவ்வேற அர்த்தங்களுடன்.

#என்அடிச்சுவடு

தாய் காத்திருக்கிறேன்

காத்திருந்தேன் சிலகாலம்
கருவாகி உருவானாய்.

சூல்கொண்டு சுகம் தந்தாய்.

வழியெல்லாம் விழியாய்
விழித்திருந்தேன்.

வலிகள் மறந்தேன்
வழித்தோன்றலாய் நீ வர.

பாலகனாய் பால்வார்த்தாய்
கால்கொண்டு உலகு அளப்பாய்
காலம்கடந்து நிலைத்திருப்பாய்

செல்லும் இடமெல்லாம்
சான்றோன் என கேட்க
தாய் காத்திருக்கிறேன்.

கல்லூரி நண்பன்

திரை விலகி
AVM எம்பளத்தில் ஆரம்பிச்சு
இரண்டு மணி நேரம்
அன்று நான் பார்த்த சினிமா
கதை சொன்னேன்
சிரிச்சு வயிரு வலிக்கு என்றாய்
வருத்தப்பட்டாய் சோகமான இடத்தில்
ஆச்சிரியத்தில் விழிகள் விரித்தாய்
வணக்கம் வரை பொறுமை காத்தாய்
நான் முடித்ததும் சொன்னாய்
நேற்றே அந்தப்படம் பார்த்து விட்டதாக
ஏன்டா மாப்புள்ள
மொதலையே சொல்லலே என்றதற்கு
ஆர்வமா சொன்ன தடுத்தா
உன் மனசு கஷ்டப்படும் என்றாய்
இன்று கஷ்டமா இருக்குடா மாப்புள்ள
உன்னைப்போல் ஒருத்தனை
அப்புறம் பார்க்கவில்லை என்று.

#என்அடிச்சுவடு

தமுக்கு

களவோ கன்னமோ
வாயத் தகராறோ
வாயக்காத் தகராறோ
வரப்பு சண்டையோ
வெட்டு குத்தோ
ஊரக்கூட்டனுமா
ஒடனே கூப்புடுவாக
தமுக்கடிச்சு சாட்டி
ஊர்முழுக்க வெவரம் சொல்ல

கல்யாணமோ காதுகுத்தோ
செய்மொறைக்கு கூப்பிட
வராத செய்மொறைய வசூலிக்க
தமுக்கு அடிச்சு சொல்வேன்

ஒத்துவராம அத்துவிட்டது
எலவு கருமாதீ எதுவானலும்
மொத்த ஊருக்கும்
மொதல தெருமுக்குள்ள
கத்தி கத்தி சொல்வேன்

கம்மாதண்ணி தொறக்க
கம்மா மீன் அரிக்க
சாமி சாட்ட
சாமிமாடு ஐல்லிகட்டுக்கு
ஊர்வலமா கூட்டிப்போக
எல்லாத்துக்கும் தமுக்கடிக்கப்பேன்

ஆறு நாளா அடுப்பு எரியல
களப்புகடைக்கு போனா
தனியா டம்ளர்
காப்பி குடிக்க மனசில்ல
யாருகிட்டயும் தமுகடிக்க
தன்மானம் எடந்தல்ல

#என்அடிச்சுவடு

பிடிச்ச சட்ட

எட்டுப்பட்டி திருவிழா
எல்லா ஊருல இருந்தும்
சாமி சப்பரம்
தீசட்டி கரகம்
மொளப்பாரி மாவெளக்கு
தேவராட்டம்
ஊருவலமா வர
ஊரே அல்லோப்படும்
அத்திபட்டி கோயில்ல.

பொறப்பட்டு பொகனும்
பொழுது சாய்றதுக்குள்ள
தொவச்ச துணி இன்னும் வல்ல
இருப்பு கொள்ளல எனக்கு.

ஊருத்துணியெல்லாம் தொவைக்கனும்
ஒத்தாளு எத்தன கையிருந்தாலும்
பத்தாது பாவம் ஏகாலி.

கரம்பமண் வெள்ளாவிலவச்சு
கஞ்சிபோட்டு தேச்சு மடிப்புகளையாம
கொண்டுவரும் அழகுக்கு செத்தநேரம்
காத்திருந்த தப்பில்ல.

ஆத்தா கண்டாங்கிசேலையில கட்டி
தேப்பு துணிமூட்ட வந்திருச்சு
அப்பனோட வெட்டி சட்ட கலையாம
என்னத துண்டா தனியா எடுக்கனும்
இல்லன்னா அப்பா அடிப்பாக.

புடுச்ச சட்ட வல்ல
எங்க போயிருக்கும எனக்கு புடுச்ச சட்ட
ஏகாலி படிக்காதா அறிவாளி
ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் அடையாளம்
எங்கவீட்டுக்கு எட்டுப் போல ஒன்னு
மாறி மத்த வீட்டுக்கு போக வழியில்ல
இருந்த சட்ட ஒன்ன எடுத்து
போட்டுக்கிட்டு கெளம்பிட்டேன்.

திருவிழாக் கூட்டத்தில
யென்சோட்டு பையன் ஏகாலி மகன்
எனக்கு பிடிச்சி சட்டயை போட்டுகிட்டு
அதக்காட்டி பெருமையா ஏதோ
சொல்லிக்கிட்டு இருக்க
பக்கதில போனா பாவம் அவன் மனசு
குறுகிப் போகும்ன்னு திரும்பி
திருவிழா கூட்டத்தில நடந்தேன்.

#என்அடிச்சுவடு

வழித்துணை

ஒற்றையாய் பயணம்
ஓர் சந்திப்பில்
பார்த்துக் கொண்டோம்
பழகி பயணப்பட்டோம்
உடன்படிக்கை இல்லை
கை கொடுத்தாய்
கை தட்டினாய்
ஆச்சரியங்கள் அள்ளிதந்தாய்
விருப்பங்கள் வேறு வேறாயின
திருப்பத்தின் முடிவில்
பாதை பிரிந்தது வேறு வேறாய்
பயணம் மட்டும் தொடருது
முடிவில் பார்த்துக் கொள்வோமா?
நிச்சயம் நினைத்துக் கொள்வோம்.

#என்அடிச்சுவடு

பால் வேறுபாடு இல்லாமல் இருவருக்கும் பொருந்தும்படி எழுதியது. இன்று இது கமல் கௌதமியின் பிரிவை ஞாபகப்படுத்தினாலும். பின்னர் பிரிந்த நட்பு, காதல், உறவு குறித்து இருக்க வேண்டும் என்று பாடுபொருள் உட்பொருளாக எழுதியது.

சொல்லாத சொல்

சொல்லிய சொல்லினும்
சொல்லாத சொல்லே
அடைந்து கிடக்குது
அடர்ந்த அர்த்தங்களாய்
என்றும் எனக்கு மட்டுமாய்
ஆழ்மனதின் அடியில்.

#என்அடிச்சுவடு

மரணம்

வலிகள் நிறைந்ததல்ல
மரணம்
மற்றவர்களின் மனங்களில்
மரித்தவனுக்கு.

#என்அடிச்சுவடு

இருந்தா நல்லா இருக்கும்

எதிர்பார்பில்லா அன்பு
காமமில்லா காதல்
சத்தமில்லா முத்தம்
முரணில்லா திருமணம்
உடன்படிக்கையில்லா உறவு
அளவுக்கதிகமில்லா செல்வம்
சண்டையில்லா சமாதனம்
கேள்வில்லா அமைதி
இல்லை என்றில்லை
இருந்தா நல்லா இருக்கும்.

#என்அடிச்சுவடு

ஆயிரம்

மாசக்கடைசியில் பலமுறை
மன்றாடி இருக்கிறேன்.
அன்பளிப்பாக வந்தது
அப்பா தந்தது
தோழி ஞாபகம்
குலசாமி உண்டியல்
ஆயிரம் காரணம் சொல்வாள்.
மதிப்பு மாறாமல்
திருப்பி தருவதாய்ச் சொன்னாலும்
அது வேற இது வேற என்பாள்.
இன்று அத்தனையும்
மாற்றச் சொல்லி
மன்றாடிக் கேட்கிறாள்.

செல்லாக்காசு

ஆசை ஆசையாய்
ஆயிரங்கள் இருந்தது
உன்னிடம் பரிமாற
என்னிடம்.
ஓர் இரவு
ஓர் வார்த்தை
செல்லாக்காசாக
இன்று நான்.

வழக்கு எண் 18/9 மீள் May 11, 2012

படம் நாயகியின் பார்வையில் தொடக்கி பார்வையில் முடிகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கதாபாத்திரத்தின் வழியாக பார்ப்பது.

கதையின் நாயகி மொத்தம் பேசும் வசனங்கள்

"அதன் சொல்றேன்லே... எனக்கு யாரையும் தெரியாது"
"அம்மா மோதிரம் "
"அம்மா சர்ப் தீந்திருச்சு"
"அம்மா காப்பி வேணுமா"
"பொருக்கி "
"எனக்கு ஒரு தம்பி இருந்த பாத்துக்க மாட்டேனா"

ஆனால் அவளின் உணர்வுகளை அழகா காட்சிகளில் விளக்கியிருப்பது அழகு.

இரு கதையும் வகிடு எடுத்து அம்மா சடை பின்னியது போல் இயல்பாய் இணைவது தனி அழகு.

காலத்துக்கு தேவையானதை காலத்தே கொடுத்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் இதுவரை வந்த தமிழ் திரைப்படங்களின் முதன்மையான படம் என்பேன் .

தமிழ் திரைப்படங்களின் வழக்கு(களையும்) எண்(ணங்களையும்) புரட்டி போட்டிருக்கிறது வழக்கு எண் 18/9.

கமல் vs ஹாசன் (மீள் Jan 05, 2013)

கமலும் சர்ச்சைகளும் கூடவே பிறந்தது. கமல் பார்க்காத சர்ச்சைகள் கிடையாது. அதில் ஒன்று கமல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று. முதலாவதாக கமலின் பாதி பெயர் முஸ்லிம் பெயர். கமல் ஒரு முறை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் ஹாசன் என்ற பெயர் காரணமாக தடுத்து நிறுத்தப் பட்டார். அவர் நினைத்திருந்தால்  தன் பெயரை கடவு புத்தகத்திலாவது மாற்றி இருக்கலாம். இல்லை இன்றும் அவர் கமல் ஹாசன் தான்.

கமலின் முஸ்லிம் ஆதரவு அவரின் படங்களில் இருந்து  இங்கே.

1. குருதி புனல்

இதில் வரும் ஆதி (கமல்) அப்பாஸ் (அர்ஜுன்) கதாபாத்திரங்களில் அப்பாஸ் என்ற முஸ்லிம் கதாபாத்திரம் தான் கடைசிவரை நல்லவனாகவே இருந்து இறப்பார். கதையின் நாயகன் ஆதி கூட குடும்பத்திற்காக தீவிரவாதிக்கு உதவ சம்மதித்து பின் திருந்துவது போல் காட்டியிருப்பார்.

2. அவ்வை சண்முகி

இதில் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரமாக பாட்ஷா (நாசர் ) என்ற முஸ்லிம் தான் வருவார். அவனாவது வயித்து பொழப்புக்கு மாடு வெட்டுறான் ஆனா நிங்க அதோட தோல எடுத்து ஏற்றுமதி பண்ணுரிங்க. அவன் வெட்டுற மாட்ட விட நிங்க வெட்டுற மாடுதான் அதிகம் என்று ஒரு அய்யர் கதாபாத்திரத்தை பார்த்து பாண்டி (கமல்) பேசுவது போல் அமைத்து அந்த அய்யர்(ஜெமினி) திருந்துவது போல் காட்சி அமைத்திருப்பார்.

3. ஹே ராம்

இதில் இரு முக்கிய முஸ்லிம் கதாபாத்திரங்கள் (காவல் துறை அதிகாரி - நாசர் , மருத்துவர் - அப்பாஸ் ) கலவரத்தில் சாகேத் ராம் (கமல்) காப்பாற்றுவது போல் காட்டியிருப்பார். பிரிவினை வாத கலவரத்தில் மனைவியை இழந்த ராம் தீவிரா வாதியாக மாறுவார் பின் திருந்துவார். ஆனால் அஜ்மத் (ஷாருஹான்) என்ற முஸ்லிம் கடைசி வரை நல்லவனாகவே இருப்பார் மற்றும் ராம் திருந்துவதற்கு முக்கிய காரணமாக இருப்பார்.

4. தசாவதாரம்

இதில் வரும் பத்து பாத்திரத்தில் கலிபுல்லா என்ற முஸ்லிம் மிக நல்லவராக எல்லாருக்கும் உதவுவராக காட்டியிருப்பார்.

5. உன்னை போல் ஒருவன்

இதில் வரும் காவல் துறை அதிகாரியாக ஆரிப்கான் நல்லவராகவே வருவார். இன்னும் சொன்னால் comman-man ஒரு முஸ்லிம் போல் தான் சித்தரித்திருப்பார்.

கடைசியாக விஸ்வரூபத்திற்கு வருவோம்

முன்னோட்ட காட்சியில் இருந்து

1. சமாதான புறா மசூதியின் மேல் இருப்பது போல் வருகிறது. முஸ்லிம் சமாதானத்தை உயர்த்தி பிடிப்பது போல் வருகிறது.
2. அதே சமாதான புறா wall street - ன் எருதின் காலடியில் (stock exchange) இருப்பது போல் வருகிறது. அமெரிக்கா உலக சமாதானத்தை அதன் பொருளாதரத்தின் காலடியில் தான் வைத்திருகிறது என்பதுபோல் வருகிறது.
3. பாடலில் டாலர் உலகில் சமதர்மம் கிடையாது என்று வருகிறது.

so, கமல் ஒருவர் சார்ந்து எடுத்திருக்க மாட்டார். நிச்சயம் முஸ்லிம்களை சாடி எடுத்திருக்க மாட்டார் என்று நம்புவோமாக !!!

மகன்வகுத்து பேரன்

ஊருலயே பெரிய சாவு
தெருவ அடைச்சு கொட்டக

மல்லப்பர கொட்டுக்காரன்
அல்லிநகர ஆட்டக்காரன்

ஏழெட்டு மையில் தொலவுஊர்
சொந்தமெல்ல வந்திருச்சு
எலவு மரக்கா சேலயோட

உள்ளுரு கொட்டுக்காரன் ஊர்வலமா
கூட்டிவாரான் வெளியூருகாரங்கள

எலவு மரக்கா தானியம் கொட்ட
தனித்தனியா சாக்குப்பை

செய்மொற சேல தொங்கப்பொட
ஒவ்வொரு மருமகளும் அவ அவளுக்கு
தனியா தனியா கொடிக்கயிறு

கெழவிய குளுப்பாட்டிக்கட்ட
வெள்ளாவியில வெகவச்ச சேல

எள்ளுப்போட  எடமில்ல
திரும்புற பக்கமெல்ல சனங்க

ஊரே கூடிக்கூடி குசுகுசுன்னு பேசுது
கட்டிஅத்துவிட்ட மகன்வகுத்து பேரன்
நீர்மால எடுக்க எப்ப வருவான்னு

#என்அடிச்சுவடு

சும்மா சொல்லிட்டேன்

பங்குனி பொங்க பாக்க
குடும்பத்தோட வாடான்னு
ஆத்தா ஆசையா வந்து
கூப்புட்டுச்சு.

மொதநா
சாமிகரகம் மொளப்பாரி
அடுத்தநா
மாவெளக்கு தீச்சட்டி
கடேசிநா
கெடவெட்டு சாமி கரைக்குறது
எல்லாத்தையும் ஒன்னுவிடாம
பாக்கனும் போல இருக்கு.

கூடப்படிச்ச சோட்டுக்காரபுள்ள
படும்பாடு பாக்க பொறுக்காம
வேலயிருக்குமா வல்லன்னு
சும்மா சொல்லிட்டேன்
இந்த வருசமும்.

#என்அடிச்சுவடு

#பொய்சொல்லிட்டேன்

#சும்மாசொல்லிட்டேன்

இதே கவிதையை  #பொய்சொல்லிட்டேன் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். இது வட்டார வழக்கில் #சும்மாசொல்லிட்டேன்  .

பொய் சொல்லிட்டேன்

பங்குனித் திருவிழா
பார்க்க குடும்பத்தோட வாடா
அம்மா ஆசையோட
அழைத்தாள் போனில்.

முதல்நாள்
சாமிகரகம் முளைப்பாரி
அடுத்தநாள்
மாவிளக்கு தீச்சட்டி
கடைசிநாள்
கிடாய்வெட்டு சாமிகலக்கல்
எல்லாம் பார்க்க
எனக்கும் ஆசைதான்.

பள்ளிக்கூடத்தில் கூடப்படித்த
பாவிப்பயமகள் படும்பாடு
பார்க்க பிடிக்காமல்
வேலையிருக்கும்மா வரமுடியாது
பொய் சொல்லிட்டேன்
இந்த வருடமும்.

#என்அடிச்சுவடு

#பொய்சொல்லிட்டேன்

#சும்மாசொல்லிட்டேன்