வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

பிடிச்ச சட்ட

எட்டுப்பட்டி திருவிழா
எல்லா ஊருல இருந்தும்
சாமி சப்பரம்
தீசட்டி கரகம்
மொளப்பாரி மாவெளக்கு
தேவராட்டம்
ஊருவலமா வர
ஊரே அல்லோப்படும்
அத்திபட்டி கோயில்ல.

பொறப்பட்டு பொகனும்
பொழுது சாய்றதுக்குள்ள
தொவச்ச துணி இன்னும் வல்ல
இருப்பு கொள்ளல எனக்கு.

ஊருத்துணியெல்லாம் தொவைக்கனும்
ஒத்தாளு எத்தன கையிருந்தாலும்
பத்தாது பாவம் ஏகாலி.

கரம்பமண் வெள்ளாவிலவச்சு
கஞ்சிபோட்டு தேச்சு மடிப்புகளையாம
கொண்டுவரும் அழகுக்கு செத்தநேரம்
காத்திருந்த தப்பில்ல.

ஆத்தா கண்டாங்கிசேலையில கட்டி
தேப்பு துணிமூட்ட வந்திருச்சு
அப்பனோட வெட்டி சட்ட கலையாம
என்னத துண்டா தனியா எடுக்கனும்
இல்லன்னா அப்பா அடிப்பாக.

புடுச்ச சட்ட வல்ல
எங்க போயிருக்கும எனக்கு புடுச்ச சட்ட
ஏகாலி படிக்காதா அறிவாளி
ஒவ்வொரு வீட்டுக்கும் ஓர் அடையாளம்
எங்கவீட்டுக்கு எட்டுப் போல ஒன்னு
மாறி மத்த வீட்டுக்கு போக வழியில்ல
இருந்த சட்ட ஒன்ன எடுத்து
போட்டுக்கிட்டு கெளம்பிட்டேன்.

திருவிழாக் கூட்டத்தில
யென்சோட்டு பையன் ஏகாலி மகன்
எனக்கு பிடிச்சி சட்டயை போட்டுகிட்டு
அதக்காட்டி பெருமையா ஏதோ
சொல்லிக்கிட்டு இருக்க
பக்கதில போனா பாவம் அவன் மனசு
குறுகிப் போகும்ன்னு திரும்பி
திருவிழா கூட்டத்தில நடந்தேன்.

#என்அடிச்சுவடு

No comments:

Post a Comment