வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.
Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Thursday, August 5, 2010

அப்பா

அப்பா ஒரு தொடர். நேராக இங்கு வந்தவர்கள் அப்பா முதல் மற்றும் இரண்டாம்  வாரத்தை படிக்கவும்.






அம்மா இருந்திருந்தால் எனக்கும் அப்பாவுக்குமான தூரம் குறைந்திருக்கக் கூடும். என் பையன் அவர் கட்டிய வீட்டிலும் அவர் மடியிலும் தவழ்ந்திருப்பான். சம சுயகர்வம் உள்ள இரு ஆண்கள் விட்டுக்கொடுப்பது கடினம் என்றே தோன்றியது. உறவை எளிதாக்க  சில சமயம் பெண் அவசியமகிறாள். ஆனால் அப்பா அம்மாவுக்குமான இடத்தையும் சேர்த்தே நிரப்பியிருந்தார் என் இளமையில்.

புத்தகத்தில் படத்தைக்காட்டி என் பையன் கேட்டான் தாத்தான்னா யாருப்பா? போட்டோ காட்டி இவர்தான் தாத்தா என்றேன். ஏம்ப்பா நம்மாகூட இல்ல? எனக்கு பதில்சொல்ல தெரியவில்லை. அப்பா கிட்ட சொல்லணும் உங்களை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை என் பையனுக்கும் சொல்லுங்கள் என்று.

தூரத்தில் அப்பா. நடை தளர்ந்திருந்தது. என் கண்ணில் குபுக்கென்று கண்ணீர் வந்தது. அந்தப்பக்கம் திரும்பி துடைத்துக்கொண்டேன். நான் அழுதால் அப்பாவுக்கு பிடிக்காது. ஓடிப்போய் அப்பாவிடமிருந்து பையை வாங்கினேன். அவர் என்னை அங்கு எதிபார்த்திருக்கவில்லை.

"நீ எப்படி இங்க? நான்கூட உன்ன பார்த்து பேசனுமுன்னு இருந்தேன். உன்னை கேட்காம இந்த வீட்ட உங்க அண்ணனுக்கு எழுதிக்கொடுத்தது என் தப்புதான். உனக்கும் சமஉரிமை அந்தவீட்டில் உண்டு. உன்னைப்போல் இல்லை, அவன் இப்ப ரெம்ப கஷ்ட்டபடுறான், அவனுக்குன்னு ஏதாவது வேணும் என்று செய்தேன். அவன்கூட உன்னை கேட்க வேண்டும் என்றான். நான்தான் வற்புறுத்தி இதை செய்தேன். உனக்கு புரியும்."

"இல்லப்பா.. நான் அதுக்கு வரலே... உங்ககளை வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போகலாம்முனு வந்தேன். நீங்க எங்க கூடவே இருந்திருங்கப்பா"

"இல்லடா அது சரிவராது. அண்ணனுக்குகூட நான் ஊருக்கு போவதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் நான் கிராமத்துக்கு  போவது என்று முடிவு செய்து விட்டேன்."

"அப்பா பழசெல்லாம் நெனச்சுக்கிட்டு வரலேன்னு சொல்லவேண்டாம். அன்று உங்கள் நம்பிக்கையை உடைத்ததற்கு மன்னிக்கணும்."

"என்னைக்கு நான் சொன்னத பொய்யாக்கி வாழ்க்கையில ஜெயிச்சிட்டையோ. அன்னைக்கே உன்னை நான் மன்னிச்சுட்டேன். ஆனாலும் பாதி இரவில் ஒரு பொண்ணு கூட இருந்தும் உன்னை வீட்டை விட்டு அனுப்பியிருக்கக் கூடாது. அந்த பொண்ணை பார்க்கவே கஷ்ட்டமா இருக்குடா"

"இல்லப்பா... அவளுக்கு உங்கள புரியும்ப்பா... நீங்க வாங்கப்பா உங்கள் வாழ்க்கையை என் பையனுக்கு சொல்லிக்கொடுங்கப்பா..."

"இல்லடா... லீவுக்கு ஊருக்கு உன் பையனை கூட்டிட்டு வா... உன் வேர் எங்கிருந்து வந்தது என்று காட்டு... அவனுக்கு வாழ்க்கையின் எல்லா பக்கமும் புரியும்... என் அப்பா எனக்குன்னு வாங்கிய ஒரு ஏக்கர் நிலம், அந்த ஓட்டு வீடு, என் கடைசி காலத்தை அங்கு கழிக்க விரும்பிறேன். எனக்கு... என் அப்பாவுக்கு... பிடித்த வாழ்க்கையை இப்பவாது வாழறேன். என்னை வற்புறுத்தாதே."

அப்பா ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். கையசைத்தேன் கலங்கிய கண்களுடன் நான் அழுவது அப்பாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும்.

Thursday, July 29, 2010

அப்பா - 2

அப்பா ஒரு தொடர். நேராக இங்கு வந்தவர்கள் அப்பா முதல் வாரத்தை படிக்கவும். அப்பா - 1





வெறும் கையேடு வீட்டைவிட்டு வெளியேறினோம் அப்பா சென்னைக்கு வந்ததுபோல. அவள் எதுவும் பேசவில்லை. அப்பாகூட அன்று யாரும் இல்லை. என்னுடன் மற்றொரு ஆத்மா. என்னை மட்டும் நம்பி வந்தவள். அவளுக்கு காத்திருக்க நேரமில்லை, வேறுவழியில்லை. இந்த முடிவை எடுத்தாகவேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்பா புரிந்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். அவர் மீது தவறில்லை. அவர் வாழ்ந்த பார்த்த வாழ்க்கை வேறு. அப்பா மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  

ஆனால் இன்று நிலைமை வேறு. அப்பா வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். என் அண்ணனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு.  அப்பா ஊருக்கு போறாராம் என் நண்பன் போன்பண்ணியிருந்தான். அப்பா ஊருக்கு போகக்கூடாது. அவர் தோற்கக்கூடாது. ஊரில் அவர் பெருமை அப்படியே வாழ்க்கையில் ஜெயித்ததாகவே இருக்க வேண்டும்.

அப்புறம் அப்பாவை ஒரே ஒருமுறை பார்த்தேன். அப்பா குழந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். என் மனைவி மயக்கத்தில் இருந்ததால் அவரை பார்க்கவில்லை. என்னுடனும் அதிகம் பேசவில்லை. என் நண்பன் மூலம் அப்பாவுக்கு சிறு சிறு தேவைகளை செய்து தரச்செய்வேன். நான் செய்வதாக தெரிய வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அப்பா என் உதவியை ஏற்ப்பாரா தெரியாது.  போன் அடித்தது என் மனைவிதான்.

"சொல்லுமா"

"அப்பாவ பாத்திங்களா ?"

"இல்லமா வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்"

"அப்பாவுக்கு பிடுச்ச மொச்சபயிறு கொளம்பு வச்சிருக்கேன். ப்ரிச்ல இருக்கு. நீங்க வந்து ரைஸ் கூகர்ல ரைஸ் வச்சுகங்க. கொளம்பு மைக்ரோவேவ் பண்ணி அப்பாவுக்கு கொடுங்க . நான் பையன ஸ்கூல் இருந்து கூட்டிட்டு வந்திறேன். அப்பறம் சொல்ல மறந்திட்டேன். நீங்க படிக்கிற ரூம்பை அப்பாவுக்கு பெட் ரூமா மாத்திட்டேன். அது அப்பாவுக்கு வெளிச்சமாவும் காத்தோட்டமாவும் இருக்கும்."

"சரிம்மா"  போனை வைத்தேன்.

அப்பாகிட்ட சொல்லணும். என்னை எவ்வளவு பிடிக்குமோ... பையனை எப்படி பிடிக்குமோ... அவ்வளவு உங்களையும் அவளுக்கு பிடிக்கும்ப்பா... நான் காதலிக்கும்போது உங்களை பற்றி உங்கள் வாழ்க்கை பற்றி நிறையே அவளுக்கு சொல்லியிர்க்கேன்ப்பா என்று.

 அப்பா வந்தாரா ? இவனுடன் பேசினாரா ? அவளை பற்றி சொன்னானா? அப்பா வீட்டுக்கு வந்தாரா ? அடுத்தவாரம் பார்க்கலாம்.

Friday, July 23, 2010

அப்பா - 1


தெருமுனை ஆட்டோ ஸ்டண்ட் எதிரிலுள்ள டீ கடையில் அப்பாவுக்காக கடந்த ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன். தெருக்கோடியில்த்தான் அப்பா பார்த்து பார்த்து கட்டிய எங்க வீடு இருக்கு. அப்பா கையை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு போனது... அப்பா சைக்கிள் கத்துக்கொடுத்தபோது கீழே விழுந்தது... நான்கு தெரு தள்ளியிருந்த காதலிக்காக  இதே டீ கடையில் காத்திருந்தது... எல்லாம் இந்தத்தெருவுக்கு தெரியும்.  பத்து வருடம் ஆகிவிட்டது இந்தத்தெருக்கு வந்து எந்த மாற்றமும் இல்லை.

அப்பா பத்தாவது முடிச்சிட்டு வெறும் கையோட சென்னைக்கு வந்து ரயில்வே கேண்டின்ல சேர்ந்து... ரயில்வே பரிச்சை எழுதி... படிப்படியாக முன்னேறியிருக்கார். நான் ஒரளவுக்கு படிப்பேன். அண்ணன் காலேஜ் பெயில். அப்பா யார் யாரையோ பிடித்து... யாருக்கோ காசு கொடுத்து... மலேசியாவுல அண்ணனுக்கு கார்பன்டர் வேலை வாங்கினார்.   எங்க கிராமத்திலிருந்து வரும் எல்லோரிடமும் பெருமையா சொல்லுவார். பெரியவன் வெளிநாட்டில் இருக்கான். சின்னவன் பி. எட் படிக்கிறான். பொண்ணு டீச்சர் ட்ரைனிங் படிக்குது. எப்படியும் இவங்க ரெண்டுபேருக்கும் வாத்தியார் வேலை வாங்கிருவேன் என்று.

என்னை அப்பாவுக்கு ரெம்ப பிடிக்கும். அவரப்போல மூக்கு எனக்கு இருக்கதாலா...?  ஓரளவு படிகிறதாலா ...? ஒரு விசயத்தில விடப்புடிய இருந்து முடிக்கிறதாலா...?  தெரியாது. இவன் என்னைமாதரி என்று எல்லாரிடமும் பெருமையா சொல்லுவார்.  அவர் எதிர் பார்க்கவில்லை என் காதலியை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவேன் என்று.

இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு அன்று இரவு அப்பா சொன்னது. அவங்களும் நம்மளும் வேறே...வேறே.. ஒத்துவராது. நீ வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது. திருத்துவது மிகச்சிரமம், நீ ரெம்ப கஷ்ட்டப்படுவ. நீ கூடிட்டுப்போயி கல்யாணம் முடிச்சது தெரிந்தா  என் மூத்த பையனுக்கும் என் பொண்ணுக்கும் நான் எங்க போயி பொண்ணு மாப்பிள தேடறது... நீ வீட்டைவிட்டு வெளியே போ.

இவன் வீட்டைவிட்டு வெளியே போனானா? அவள் என்னவானாள்?   எதற்க்காக  அப்பாவை பார்க்க வேண்டும் ? நீங்கள் அடுத்தவாரம் வரை காத்திருக்க வேண்டும்.  ஆம்... இது ஒரு தொடர்... அடுத்தவாரமும் அப்பா வருவார்.