வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.
Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Saturday, September 6, 2014

பம்பர பெண்கள்

அழகு அழகாய் பம்பரம் 
இறுக்கி சுற்றி சுற்றி வந்தது 
சாட்டை.

சுழற்றி விட்டதில் 
சுற்றி தலைகுனிந்து விழுந்தது 
பம்பரம்.

பம்பரம் பார்த்து சிரித்து
கேலி பழி சொன்னது
வேடிக்கை பார்த்த
கூட்டம்.

கலர் கலராய் வேறு பம்பரம்
சுற்றி சுழற்றி விட்டது
அதே சாட்டை.

அடுத்த அடுத்த பம்பரம்
வேறு வேறாய் பழி கேலி
பம்பரத்தின் மீது.

கேலி பழி பாதிப்பதில்லை எப்போதும்
சாட்டைகளை
ஆண்களை போல்.

Monday, December 20, 2010

விடியும் என்று?


 1. காலை 

கணக்கு வாத்தியார் அரைப்பரிச்சை பேப்பருடன் ஆறாம் வகுப்புக்குள் நுழைந்தார்.

"யோகி... வைரம் ஏன்டா பள்ளிக்கூடம் வரல?" கணக்குத்தாள் கொடுத்த வாத்தியார் கேட்டார். 

"வைரத்தோடா அப்பா மாடு வாங்க வத்ராப்பு போயிருக்காரு சார், அதனாலே அவங்க காட்டுல தண்ணிவெலக கூடிட்டு போயிருக்காங்க சார்"  

"வைரம் உங்க மாமா பொண்ணு தானே?"

 "ஆமாங்க... சார்"

"இந்தாடா...  வைரத்தோட கணக்குத்தாள். உங்க மாமாகிட்டச்சொல்லு தேவையில்லாம வைரம் லீவு போடக்கூடாதுன்னு.... சரியா?"

 "சரிங்க... சார்"

2. மதியம் 

வைரமும் அவங்க ஆத்தாளும் மெளகாத்தோட்டத்தில வேலபாத்துகிட்ருந்தாங்க.

"இந்தாடி வைரம் உரத்த  செடித்தூறுல இருந்து   நாலு வெரக்கட தள்ளி வையி. இல்லாட்டி செடி செத்துப்போகும்... சரியா?"

"சரித்தா..."

 "நான் மெளகாநாத்து ஊடுநடவு போடுறேன். நீ  தண்ணியப்பாத்திக்கு அளவா பாச்சு. அப்புறம் வாமடைய  ஒடையாம அடைக்கனும்"

"சரித்தா..."

உரம் வைக்க ஆரம்பித்த வைரத்தின் யோசனை  எல்லாம் பள்ளிக்கூடத்தில் இருந்தது. வாமடையயை வெலக்கி தண்ணியை ஒரு பாத்தியிலிருந்து  அடுத்த பாத்திக்கு விட்ட வைரம் அடிவயித்த பிடித்துக்கொண்டு யத்தே என்று அலறிக்கொண்டே  வரப்பில் உக்கார்ந்தாள். என்னாடி என்று ஓடிவந்த ஆத்தா மகளை பம்புச்செட்டில் குளிக்கவைத்தாள்.

"மரியாத்தா...  இவளுக்காச்சும் நல்ல வழியக்காட்டு" வடக்கு நோக்கி விழுந்து கும்பிடாள்.

"நீ வேப்பமரத்தடியில உக்காரு... ஆத்தா போயி உரத்த எடுத்து ரூம்பில வச்சுட்டு,  மோட்டாரே  நிறுத்திட்டு வரேன் சரியா...?"

3. மாலை 

பள்ளிக்கூடப்பைய வீட்டில வச்சுட்டு வைரத்தின்  கணக்குத்தாளை எடுத்துக்கிட்டு  வைரத்தை பார்க்கப்போனான் யோகி.  வைரம் தாவணி போட்டுக்கிட்டு  வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒக்காந்திருந்தாள் .  

"வைரம்... நீதான் கணக்குல பஸ்ட்டு மார்க்கு. பரிச்சையில தப்பான கணக்கெல்லாம் போட்டுட்டு கட்டாயம் பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னாரு வாத்தியார்"

"யோகி... எங்க ஆத்தா என்ன இனிமே பள்ளிக்கூடமெல்லாம் போகவேனாமுன்னு சொல்லிருச்சு... வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழகிக்கச்சொல்லுச்சு..."

"யோகி...  எனக்கு படிக்கணுமுன்னு ஆசையிருக்குடா... நீ சொன்னா அப்பா கேப்பாரு சொல்லுவியா...?" 

"சரி நான் மாமாகிட்ட கேக்கிறேன்"

4. பின்னிரவு  

பாதித்தூக்கத்தில முழித்துக்கொண்டான் யோகி. ஒரே இருட்டா இருக்கு... இன்னும் விடியல... எப்ப விடியுமோ தெரியல?  விடிய மாமா வந்திருவாரா? மாமா கிட்ட வைரத்த பள்ளிகூடத்துக்கு அனுப்பச்சொல்லி கேக்கணும். உறங்கமில்லாமல் இருட்டுக்குள் காத்திருந்தான் விடியும் என்று?



இது என் ஐம்பதாவது பதிவு. என்னுடன் பள்ளியில் படித்து பாதியில் படிப்பை நிறுத்திய அனைத்து தோழிகளுக்கும் சமர்ப்பணம்.

Monday, July 19, 2010

ஜோதி


புருசனிடம் கோவித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்திருந்த புதுசா கல்யாணமான ஜோதி தான் வாங்கிவந்திருந்த வெற்றிலைய அப்பத்தாவுக்கு கொடுத்தாள்.

"ஏண்டி, சின்ன... சின்ன... விசயத்துக்கெல்லாம் சண்டைபோட்டு இங்க வந்திருர?".

"அப்பத்தா, நாலு நாளைக்கு பட்டினியாக் கெடந்ததான் அவருக்கு புத்தி வரும்".

"உன் புருசன் பட்டினிகிடந்தா  பரவாயில்ல... வெளியில கிடைக்குதுன்னு போயிட்டா என்னடி பண்ணுவா? பாத்துடி... எப்பவுமே புருசன உன் கைபக்குவதிலையே வச்சிருக்கணும்".


ஊரிலிருந்து வந்த மகளுக்கு பிடித்த சுண்டல் கொளம்பு வைத்துக்கொண்டிருந்தாள் ஜோதியின் அம்மா.

"அம்மா, நான் போயிட்டு வரேன்".

"என்னாடி வந்ததும் வராததும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு பறக்கிற, இருந்து சாப்பிட்டு காலையில போகலாமில்ல?".

"இல்லம்மா நான் இப்ப கிளம்பினாத்தான், அவரு தூங்கிறதுக்கு முன்னாடி  வீட்டுக்கு போகமுடியும்".

இதை நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் பொக்கைவாய் அப்பத்தா.

Friday, July 9, 2010

வெள்ளத்தாயி



   என்னாடி காளியம்மா....புள்ளப்பெத்து முழுசா முப்பது நாக்கூட ஆகல அதுக்குள்ள தலையில இடுப்புல கையிலன்னு சொமைய தூக்கிக்கிட்டு காட்டுக்குப்போறே. என்ன என்னாக்கா  பண்ணச்சொல்லிரிங்க அந்த மனுஷன் கோழிகூவுரதுக்கு முன்னையே கலப்பையே தூக்கிக்கிட்டு உழுகப்போயிட்டாரு. அதான் மாட்டுக்கு தண்ணி, நாயுக்கு கஞ்சி,  அவருக்கு சாப்பாடுன்னு  எல்லாத்தையும் நானே எடுத்துக்கிட்டு போறேன். 

   சரி புள்ளய எங்கடி? அதுக்கு பாலக்குடுத்து உறங்க வச்சுட்டு வந்திருக்கேன்.  கொஞ்ச நேரம் கழிச்சு எங்க ஆத்தா தூக்கிட்டு வரும். சரிக்கா... காட்டுல நாலுபேறு கள எடுக்குராங்க. தலச்சொம வேறே கனக்குது நான் வரேன் என்று பெரிய எட்டு வச்சு நடந்தா  காளியம்மா.  

   கோரப்புல்லும் நெல்லுப்பயிரும் பாக்க ஒண்ணுபோல  இருக்கும் கோரப்புல்ல புடுங்கிரதுக்கு பதிலா நெல்ல புடிங்கி போட்டுராதிங்க என்று சொல்லிக்கொண்டே காட்டுக்குள் நொலஞ்சா  காளியம்மா.  கொண்டுவந்த தண்ணிய மாட்டுக்குழுதானியில ஊத்திட்டு, கஞ்சிய நாய்க்கல்லுல ஊத்திட்டு, சாப்பாட்ட தாவாரத்து கம்புல தொங்கவிட்டா. சும்மாடு கூட்டியிருந்த சேலையில புள்ள வந்தா தூங்குறதுக்கு பூவரசமரத்தில தொட்டில் கட்டிட்டு வயல்ல இறங்கி கோரப்புல்ல புடுங்கத்  தொடங்கினாள்.

   நீ ஊரக்கூட கடந்திருக்க மாட்டா அதுக்குள்ள அழுக  ஆரம்பிச்சிட்டான் ஒம்புள்ள. புள்ளயவாங்கி பசியமத்தி ஆத்தாகிட்ட கொடுத்து தொட்டியில போடச்சொன்னா காளியம்மா. வெயில்த்தெரியாம இருக்க ஊர்க்கத பேசிக்கொண்டே தன்னோட நெரையில இருக்கும் புல்லைப்புடுங்க ஆரம்பித்தார்கள்.

   அந்த மனுஷன் உழது முடிசுட்டாரு. ஏரேக்கலட்டி மாட்டக்கட்ரதுக்குள்ள சாப்பாடு எடுத்து வக்காட்டி மூக்குமேல கோவம்வரும் புள்ள அழுதா பாத்துக்க வெள்ளத்தாயி  என்று புருசனுக்கு சாப்பாடு போடப்போனாள் காளியம்மா.  தலமறையிரதுக்குள்ள புள்ள அழுக ஆரம்பித்தான். புல்லுப்புடுங்கின கையக்கழுவிட்டு புள்ளயத்தூக்கி பசியமத்த ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி.

   ஏண்டி புள்ள அழுகுறது கூடத்தெரியாம அப்படி என்னடி பேச்சு புருசன்கூட என்றாள் களயெடுத்துக்கொண்டிருந்த கெழவி. அப்பத்தா உனக்கு தெரியாததா... அவ புள்ள செத்து இருபது நாக்கூட ஆகல பால்கட்டிக்கிட்டு கஷ்ட்டபடுறா அதான் அவ எம்புள்ளைக்கு பால்க்குடுக்கட்டுமுன்னு விட்டுடேன் என்றாள் காளியம்மாள்.

"அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டால .....
மாமா  அடிச்சாரே மல்லியப்பூ செண்டால .....
அடிச்சரே சொல்லியழு....ஆராரோ...ஆரிராரோ..."

தாலாட்டு பாடிக்கொண்டிருந்தாள் வெள்ளத்தாயி.





Monday, July 5, 2010

ஆதலால் காதல் செய்தேன்

   எத்தருணத்தில் என்னுள் அவன் வந்தான் விளங்கவில்லை. தமிழ் வாத்தியார் குறள் வாசிக்கச் சொன்னபோது 

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல" 

என்று  தலை சாய்த்து ஒரு  சிறுபுன்னகை உதிர்த்தானே அப்போதா?  எப்போதும் கண்களைப்  பார்த்து மனதோடு பேசுவானே அதனாலா? இதுவரை எனை யாரும் இவ்வளவு ஆழமாக பார்த்ததில்லை அதனாலா? புன்னகை தவழ எப்போதும் மெதுவாக பேசுவானே அதனாலா? எதனால் இன்றுவரை புரியவில்லை. ஈர்த்தானா? ஈர்க்கப்பட்டேனா? எல்லாம் ஒன்றுதான். பேருந்து நெரிசலில்  அவன் மட்டும் எங்கிருந்தாலும் என்கண்ணில் பட்டானே ஏன்? துளித்துளியாய் நனைத்தானா? அலையாய் அடித்தானா? எதுவானாலும் நான் நனைந்தது உண்மை. 

   அவனை எனக்கு எவ்வளவு பிடிக்கும். மழை அளவுக்கு. தூங்கறப்ப அம்மாவின் தாளிக்கும் வாசனை அளவுக்கு.  அவனுக்கு பிடித்ததெல்லாம் எனக்கும் பிடித்ததானதே அந்த அளவுக்கு. சாமியக்கூட பரிச்சைக்கு முன்தான் நினைத்துக்கொள்வேன். அவனை மட்டும்தான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். நான் குறைவாக பேசியதும் அவனோடுதான். பேசாமேலே அதிகம் பேசிக்கொண்டதும் அவனோடுதான்.

   அவன் காதல் சொன்னதில்லை....காதல் குறித்தும் பேசியதில்லை. காதல் செய்தான். மழையை காதலித்தான் தூறல் ஆனேன். காட்டை காதலித்தான் இலையானேன். விலங்குகளை காதலித்தான் பூனையாய் தவழ்ந்தேன். பறவையை காதலித்தான்  பட்டாம்பூச்சியாய் பறந்தேன்.  அவனால் என் பார்வையின் நீளஅகலம் கூடியது மனம் விசாலமானது.  ஆதலால் காதல் செய்தேனா?

   காதல்... மனசா? வயதா? உடம்பா?  எதுவானாலும் உணர்வு உண்மை. காதல் தப்புன்னு சொன்னாக்கூட காதல் குறித்த எண்ணம் அன்பு வருத்தம்  அழுகை சந்தோசம் எல்லாம் என் உணர்வு. அது எப்போதும் என்னுடன் இருப்பது. அது எப்படி பொய்யாக முடியும்.  சரி... தவறு... யார் முடிவு செய்தது? சாமியா? சாமியாரா? சாமியும் சாமியாரும் கூட பொய்யாகலாம். சாமி சாமியார் காதல் கொண்டது உண்மை. 

   அவன் எனக்கானவன் எதனால் முடிவுசெய்தேன். கடிதங்கள் எழுதியபோதா? கடிதங்களுக்காக காத்திருந்தபோதா? இல்லை அவன் கடிதங்களை படித்துக்கொண்டே அவனோடும் அவன் நினைவுகளோடும் உறங்கினேனே அப்போதா? அவன் வாசித்த புத்தகத்தை வசித்தபோதா? வரிகளுக்கு நடுவே கண்ணை மூடி இதை அவனும் வாசித்திருப்பான் என்று என்னைமறந்து இழுந்து சிரித்தேனே அப்போதா?

   அவன்மேல் எப்போதும் கோபம் வரவில்லை ஏன்? என் காதலை மறுத்தபோதுகூட. எனக்கு விருப்பு வெறுப்பு இல்லாத அன்பு  சொல்லிக்கொடுத்ததாலா?  எதிர்பார்ப்பில்லாத அன்பு அவன்தானே சொல்லிக்கொடுத்தான். எப்படி எதிர்பார்த்தேன்? அவன் மறுத்ததால் அன்பு செய்வது நிற்க்கப்போவதில்லை. மழையின்  துளியாய்... காட்டின்  இலையாய்... பறவையின் சிறகாய்... மண்ணின் வாசனையாய்... எதிர்பார்ப்பு இல்லாத காதல் எல்லா இடத்தும் செய்வேன்.


Saturday, June 12, 2010

அமெரிக்கரயிலில் தமிழ்ப்பெண்

       குளித்து முடித்து கண்ணாடி பார்த்து தலை வாரிக்கொண்டிருந்தேன். குளியல் அறைக்கதவை ஆள் நெருங்கும் சப்தம். கதவு தட்டும்முன் திறந்தேன் துண்டுடன் நண்பன். எனக்கு அகநானூரில் வரும் கதவானாள் என்ற சொல் நினைவுக்கு வந்தது. பத்து நிமிடம் லேட்  என்றான் நண்பன். அலமாரி திறந்து எதோ ஒரு சட்டையும் பேண்டும் எடுத்து போட்டுக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தேன்.


    கொஞ்சநாளா நேரம் இல்லாததால் காலை உணவுக்குப்பதில் ஹோர்லிக்ஸ்க்கு   மாறியிருந்தேன். ஹோர்லிக்ஸ்யை உறிஞ்சிக்கொண்டு நண்பனுக்கு காத்திருந்தேன். டிவியில் சக்தி டவுன்லோட் செய்து கொடுத்த இளையராஜா பாடல் ஓடிக்கொண்டிருந்தது.  "காத்தடிச்சா தாங்காதடி மல்லியப்பூ  மாராப்பு" என்று நாயகியை சீண்டிக்கொண்டிருந்தான் நாயகன். "கையிருக்கு காவலுக்கு" என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் நாயகி. 


      நேரமே ஆபீஸ்க்கு போகணும் மீட்டிங் இருக்கு. குளியல் அறை நோக்கி போனேன் உள்ளே நண்பன் புதிய எ ஆர் ரஹ்மான் பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தான். பாடலை விட எனக்கு தண்ணியின் சத்தம் அதிகமாக கேட்டது.  அதுவும் நன்றாகவே இருந்தது. கதவு தட்டி நான் முன்னே போகிறேன் மீட்டிங் இருக்கு என்றேன் சரி என்றான் நண்பன். 


     மூன்று சிக்னலில் காத்திருந்து ரயில் நிலையம் அடைந்தபோது தூரத்தில் ரயில் வந்துகொண்டிருந்தது. உள்ளே முழுதும் மூடிய அமெரிக்க ஆண்களும் கொஞ்சமே மூடிய  அமெரிக்க பெண்களும் கலந்து அமர்ந்திருந்தனர். நண்பனுடன் வந்தால் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு செல்வோம்.  நண்பன் இல்லாததால் மூவர் அமரும் இருக்கையில் இரண்டவதாக அமர்ந்தேன் நடுவில் இடம்விட்டு.  இந்த இருக்கையில் ஒரு வசதி மூன்றாவதாக யாரும் அமர்வதில்லை. தூங்கினாலும் அடுத்தவர் மீது விழத்தேவையில்லை.


      இங்கு ரயிலில் யாரும் பேசி பார்த்தது இல்லை இந்திய லைப்ரரியைவிட அமைதியாக இருக்கும். இங்கு எல்லோரும் iPod - ல் பாட்டு கேட்டுக்கொண்டோ அல்லது புத்தகம் வாசித்துக்கொண்டோ இருப்பார்கள். எனக்கு பேச ஆளில்லாததால் தூங்கிப்போனேன்.  தமிழில் பேசும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். 


      என் அருகே மூன்றாவதாய் ஒரு தமிழ்ப்பெண் போனில் பேசிகொண்டிருந்தாள் .  அவள் ஊரில் இருந்து வந்து கொஞ்சநாள் தான் ஆகியிருக்கவேண்டும். புருவம் திருத்தியிருக்கவில்லை. முடியை நேராக்கி விரித்துப்போட்டு கழுத்துவரை குட்டையக்கிருக்கவில்லை. உடலோடு ஒட்டிய பனியனோ ஜீன்ஸோ அல்லாது சுடிதார் அணிந்திருந்தாள்.  அந்த பெட்டியில் அவள் மட்டும் தனித்திருந்தாள்.  நான் ஒரு விநாடி ஊருக்குபோய் திரும்பியிருந்தேன்.