குயூப் 12B , இருபத்தி ஆறாவது தளம், டெம்பில் டவர் , லாஸ் ஏஞ்சல்ஸ் @ அமெரிக்கா
"அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்க இன்று கடைசி நாள்."
இவ்வாறான ஒரு செய்தியை என் கணினி காலண்டர் நினைவுட்டல் செய்துகொண்டிருந்தது. கிளைன்ட் மீட்டிங் முடிச்சிட்டு வந்த என் மரமண்டைக்கு இப்போதுதான் உறைத்தது. மணிபார்த்தேன் 10.30 am என்றது. இப்ப இந்தியாவுல இரவு 11.00, இன்னும் ஒரு மணி நேரத்துல காப்பீட்டு கம்பெனியோட அக்கவுன்னுக்கு ஒன்பதாயிரம் இந்தியன் ரூபாய் அனுப்பி வைக்கணும். என் இந்தியன் வங்கியின் வலைதளத்துக்குள் நுழைந்த எனக்கு என் அக்கவுண்டின் இருப்பு பதினைந்து ஆயிரம் என்றது. இது வீட்டுக் கடனுக்கு பத்தாம் தேதி கட்ட வேண்டியபணம். இதுல கைவச்சா பத்து நாளைக்குள்ள ஏற்பாடு பண்ணமுடியுமா தெரியல. யோசிக்க நேரம் இல்ல ஏதாவது பண்ணனும்.
எங்க அப்பவேறே ஏன்டா தேவையில்லாம எங்களுக்கு வருஷம் வருஷம் பணம் கட்டுறே. எங்களுக்கு கட்டுன பணத்த சேர்த்து வச்சுருந்தா இந்நேரம் ஒரு லட்சம் சேந்திருக்கும் என்பார். அவருக்கு புரியலே. நான் வேறே ஊர்ல இல்ல... அவங்க ஒடம்புக்கு ஒன்னுனா எங்க போயி பணம் பொரட்டு வாங்க. காப்பீடு இருந்தாலாவது எதையும் எதிர்பார்க்காம ஆஸ்பத்திரியிலாவது சேருவாங்க.
இந்தமாதரியான இக்கட்டுக்கு கைகொடுக்குற ஒரேஆளு அன்பரசு தான். என் பள்ளி நண்பன். சொந்த ஊரிலே வாத்தியார் வேலை பார்க்கிறான். அப்படியா அவன் சொந்த நிலத்துல விவசாயம் செய்யுறான். என் மாதரி அகலக்காலு வைக்காம எல்லாத்தையும் அளவா பண்ணிக்கிட்டிருக்கான். அவனுக்கு பெருசா செலவும் இல்ல. நான் அமெரிக்காவுல இருந்தாலும் என் அவசர தேவைக்கு அவனைத்தான் நாடுவேன். ஆனால் அவன் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்குற ஆளு.
யோசித்துக் கொண்டிருக்கும்போது யூ கே வில் இருக்க என் நண்பன் சதீஷ்யை ஆன் லைனில் பார்த்தேன்.
"டேய் சதீஷ்... எனக்கு அவசரமா ஒன்பதாயிரம் வேனுமுடா"
"சரிடா... நான் அனுப்பி வச்சுட்டு மெயில் அனுப்பிறேன்"
"அவசரம்டா... கட்டாயம் அனுப்பிவைக்கணும்... சரியா"
"சரிடா"
சதீஷ் என்னை மாதரிதான் வீடு காரு நகைன்னு எல்லாக் கடனும் வாங்கியிருக்கான். அவனும் என்னப்போலதான் அக்கவுண்டை தொடச்சுதான் வச்சுருப்பான். என்னமோ நல்லா நேரம் அவன் கிட்ட பணம் இருந்துருக்கு கேட்டவுடனே சரின்னுட்டான். ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது. அடுத்த மீட்டிங் க்கு தேவையான கோப்புகளை கணினியில் வாசிக்க தொடங்கினேன். என் போன் வைபிரேட்ல் மேசையை வட்டம் அடித்து அன்பு... அன்பு... என்றது.
"என்னடா அன்பரசு... இந்நேரம்... நீ தூங்கலையா?"
"பத்தாயிரம் என் அக்கவுண்டுக்கு அனுப்பி வையுடா"
"நீ எப்பவுமே அக்கவுண்டுல ஒரு லட்சம் வச்சிருப்பையில... என்னாச்சு?"
"இல்லடா குமார்... நிலம் ஒன்னு ரெசிஷ்ட்டர் பண்ணினேன் அதான்..."
"சரிடா அனுப்புறேன்... பத்து நிமிஷம் கழிச்சு உன் அக்கவுண்டுல பாருடா...."
போனை துண்டித்தேன். என்னைக்குமே கேக்கமாட்டான். வீட்டுக்கடனுக்குரிய பணத்திலிருந்து பத்தாயிரம் அனுப்பிவைத்தேன்.
சிறிது நேரத்தில் சதீஷ் ஒன்பதாயிரம் அனுப்பியதாக இமெயிலில் உறுதிசெய்திருந்தான். என் அக்கவுண்டுக்கு மறுபடியும் போயி அம்மாவுக்கும் அப்பாவுக்குமான மருத்துவா காப்பீட்டுத்தொகை ஒன்பதாயிரத்தை அனுப்பிவைத்தேன். இப்ப வீட்டுக் கடனுக்கு பணம் ஏற்பாடு பண்ணனும்.
கணினி மேசை, தோட்டவீடு - அன்பகம் , வாடிப்பட்டி @ இந்தியா
"ஏங்க... நடுராத்திரி தூங்காம கம்யூட்டரல என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க" தூக்கம் களைந்து எழுந்த அன்பரசின் மனைவி.
"சதீஷ் பத்தாயிரம் வேணுமுன்னு கேட்டு போன்பண்ணியிருந்தான்... என்கிட்ட இல்ல அதான் குமார்கிட்ட வாங்கி சதிஷ்க்கு அனுப்பினேன்" மனைவிக்கு பதில்ச் சொல்லிக்கொண்டே கணினியை ஆப் செய்தான் அன்பரசு.






