வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, February 10, 2011

அன்பிருக்கா இல்லையா ?


ஆண்: கண்டும் காணாம
             பாசாங்கு செய்யுற

பெண்: உனை காண உன்தெருக்கு
              வந்தும்மா என்னை புரியல

ஆண்: பார்த்தும் பாக்காம
             தவிக்க வைக்கிற

பெண்: நீ இருக்கும் இடமெல்லாம்
             வந்தும்மா அறிய முடியல

ஆண்: ஓரக்கண்ணால் பார்த்து
               உயிர எடுக்குற

பெண்: கண்சாடை காட்டியும்
              அத படிக்க தெரியல

ஆண்: கவனத்த ஈர்த்து
             கவர்ந்து கொல்லுற

பெண்: நீ பாக்குறப்போ கொளந்தைய
              கொஞ்சினேன் அதுகூட புரியல

ஆண்: அன்பிருக்கா இல்லையா
             அறிய முடியல

பெண்: உங்கம்மாவ அத்தேன்னு
              கூப்பிட்டும்மா அன்பு புரியல

வேண்டுகோள்: இந்த கவிதையில் வருவது போல் பெண்கள் எப்ப அடுத்த நிலைக்கு போனார்கள் என்று பாவம் இந்த ஆண்களால் கண்டுபிடக்க முடிவதில்லை. பெண்களே தயவுசெய்து வரும் காதலர் தினத்தில் ஆவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.

Tuesday, February 8, 2011

மலரின் கதறல்


கட்டுண்டு கிடக்கிறாயா ?
கழண்டுவிழத் துடிக்கிறாயா?
மனிதக்கழிவிலும் கறி புகையிலும்
கசிந்த என் உயிரை
துளி துளியாய் துளிர்க்க செய்தாய்
கைமாறு என்ன செய்வேன் ?

தரையெங்கும் இலை மலர் பரப்பி
மறுமுறை மழையாய் விழும்போது
தரைவிழாது என்மடி ஏந்தி
உனக்கும் தரைக்கும் வலிக்காமல்
தரைக்கு மெல்ல தாரைவார்ப்பேன்

சூரியன் கதிர்களால் உன்னை
சுட்டு சுட்டு குடிக்காமல்
கதிர்களை கட்டுபடுத்தி
வெயிலை மட்டுபடுத்துவேன்.

காற்றை தென்றலாக்கி
உன் குளங்களின்
தளமெங்கும் தவலச்செய்வேன்.

உனை கொஞ்சம் உறிஞ்சி
மரங்களின் நாளங்களில்
உதிரமாய் ஓடவிட்டு
நீ உயிராய் நான் உடலாய்
காலம் காலமாய் வாழ்த்துடுவேன்

களங்கமில்லா நாம் காதல்
யுகம் யுகமாய் தொடர
கழிவுகளை மறுபரிசிலனை செய்ய
மனிதகுலத்திடம் மண்டியிடுவேன்.


பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.

Monday, February 7, 2011

உலகமயம்


தீண்ட தீண்டி
தழுவ தழுவி
அவிழ்ந்து அவிழ்த்து
இறுக இறுகி
உருக உருகி
மேலும் கீழா
ஆட ஆடி
கிறங்க கிறங்கி
அடங்க அடங்கி
ஊர்ந்து ஊர்ந்து
உயிர் உடலாகி
கொடி கொடியாய்
தொடர் தொடராய்
காலம் காலமாய்
கிளைவிரித்து விரிந்து
அடர்ந்த பெரும்காடாய்
நாடு நாடாய்
இடைவெளி இல்லாது
பரந்து பரவிகிடக்கு.

Saturday, February 5, 2011

கீதாரி


தலையில வெயிலுக்கு உருமா
முள்ளுக்கு கால்ல கனத்தசெருப்பு
குட்டி ஆடும் தொரடிக்கம்பும்
தோதா தொள்வச்சு
கைய ரெண்டும் கம்புலபோட்டு
ஒரு கையில தூக்குசட்டி கஞ்சி
மறுகையில ஆட்டுக்குட்டியோட காலு
கவனமா புடுச்சுக்கிட்டு
வெரசா எட்டுவச்சு வேகமா
நடக்குராறு கீதாரி.

ஆடு மேக்கிற பையன்
ஊருல கொடன்னு போயிட்டான்
கரட்டுல மேயிற கெடைய
கவனிக்க ஆளில்ல
கரடெல்லாம் முள்ள தவிர
ஆடு மேய புல்லில
ராத்திரி அடைய இடமில்ல
ஊரெல்லாம் வெள்ளாம
எப்ப இது வெளஞ்சு
வெள்ளாம அறுத்து
காடு தறுசாகி
ஆடு தர எறங்கி
நாலு நல்ல புல்லு
தின்னுமே தெரியல

தந்தரையில கெட
அடையுமோ தெரியல
நாலு நல்ல கெட அமத்தி
சியான் வீட்டு சில்லற
பொலங்குமோ தெரியல

நானும் பொண்டாடியோட
இருந்து பொழுதுவிடியிரப்ப
கெடைக்கு போவேனோ தெரியல

குறிப்பு: இதில் நிறைய வட்டாரவழக்கு வார்த்தைகள் உபயோகித்திருக்கிறேன். அதற்கு தனி விளக்கம் கொடுத்தால் அதன் அழகு சிதைந்து விடும் என்பதால் உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்.

Friday, February 4, 2011

இருக்கையின் மனசு



என்ன குறை கண்டாய்
ஏன் எனை விடுத்தது
அங்கு அமர்ந்தாய் ?
தயவுகூர்ந்து சொல்லிப்போ
எனை திருத்தி
இனி வரும் பெண்ணையாவது
ஏந்திக்கொள்கிறேன் என் மடியில்...

Thursday, February 3, 2011

முடியலடி


அப்படி நான் நெனைக்கல
ஓன் ஒத்த வாத்தயில
கெடையப் பிரிஞ்ச
ஆடுகெனக்க மனசு
கெடந்து அலையுதுடி.

தப்பா புருஞ்சுகிட்டிங்க
நீ சொன்னப்ப
கொக்கநோவு வந்த கோழியா
மனசு கெடந்து சொனங்குதுடி.

செநேகம் மட்டுந்தேன்
ஓன் ஒத்தச்சொல்லு
உச்சி வெயிலாட்டம்
சுளிருன்னு சுடுதுடி.

எல்லாத்தையம் மறந்திருங்க
ஓன் பேச்சு
கால்ல முறுஞ்சமுள்ளா
உள்ளுக்குள்ள கடுக்குதுடி.

பழகிய பழக்கமெல்லாம் பொய்யா ?
செஞ்ச அம்பு நெசமில்லையா ?
கடந்த நாக்க கனவா ?
அடுத்தடுத்து பொறந்த
சவலபுள்ள பசியா
மனசு பதறுதுடி.

Wednesday, February 2, 2011

பதிலில்லை பாவம் அவனிடம்.


கடிதம் வாழ்த்துஅட்டை
திரும்ப கேட்டு அழித்தான்.
***
நான் கொடுத்ததை எல்லாம்
கண்முன் காட்டி எரித்தான்.
***
அடையாளங்கள் அழித்தாகிவிட்டது
நமக்குள் எதுவுமில்லை என்றான்.
***
நீ காதல் சொன்னபோது
ஏற்ப்பட்ட சிலிர்ப்பை என்னசெய்ய
பதிலில்லை பாவம் அவனிடம்.
***

பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.