வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, September 9, 2016

இதழாள்

வாசித்ததில் 
நேசித்தது
இசைந்து 
அவள் தந்த
இதழ்கள்.

Thursday, September 8, 2016

மல்லிகை

அவன் ஊரில் இல்லாதது 
பூக்காரிக்கு கூட புரிந்திருக்கிறது 
மல்லிகை சரம் வைக்காமல்
கதம்பத்தை மட்டும்
கதவில் மாட்டிவிட்டு
போயிருக்கிறாள் சாமிக்கு.

Thursday, September 1, 2016

விதை நெல் - நெல் நான்கு




விதை நெல் - நெல் மூன்று

தலையில் சும்மாடு அதுக்குமேல கூழ்ச்சட்டி இடுப்பில் நார்ப்பெட்டி  நிறைய வெதைத் தானியம் மறுகையில் கன்னுக்குட்டியும் பிடித்துக் கொண்டு புளிமூட்ட மாமா  பின்னாடி கொஞ்சத்தூரத்தில் நடந்து வந்தார் செவனம்மா அத்தை.  

தலையில் கூழ்ச்சட்டி எந்த பிடிமானமும் இல்லாமல் செவனம்மா அத்தை நடந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

நான் எழுந்து என் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு எங்க தோட்டத்தை நோக்கி நடந்தேன். என்னைப்பார்த்த அத்தை பாதையில் இருந்து சிறிது விலகி எனக்கு வழி விட்டு நடந்தாங்க.

"குதுரவள்ளி வெதைக்க போறீங்களா  அத்த" என்றேன்.

"ஆமாம்.... மருமகனே..."  மருமகனே என்னு சொன்னது அவங்களுக்கே கேட்டு இருக்காது அவ்வளவு மெதுவா தலையக்கூட நிமிராமல் கன்னுகுட்டியை பார்த்துக்கொண்டே பதில் சொன்னாங்க. பெறந்த குழந்த கூட அது மருமகன் முறை என்றால் எங்க ஊர் பொம்பளைங்க  கொடுக்கும் மரியாதை எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும்.

தம்பியை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரெண்டு ஆட்டுக்குட்டிய விரட்டிக்கிட்டு "ஆத்தா... மெதுவா போ..." என்று கத்திக்கொண்டே வேகமாக நடந்து வந்தா ஒன்பது வயது மதிக்கத்தக்க அத்தமக.  

நான் அவளை வழி மறித்து நின்றேன்.

"மாமா... வழிவிடுங்க நான் போகனும்" என்றாள்.

"உன் பேரு என்னன்னு சொல்லு... நான் வழி விடுறேன்" என்றேன்.

"செங்கனி" என்றாள்.

"நல்ல பேரு... உன் பேருக்கு என்ன அர்த்தம் ?" என்று வம்புக்கு இழத்தேன்.

"செம்மை கூட்டல் கனி" என்றாள்.

அவள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரிமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணர்வுகளை காட்டிக்கொள்ளாமல் " என்ன படிக்குற..." என்றேன்.

"இப்ப பள்ளிக்கூடம் போகல... நாலாவதோட நின்னுட்டேன்... ஆத்தா வேணாம்னு சொல்லிட்டாங்க... " என்றாள்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.

"பொம்பளப்புள்ள படிச்சு என்ன பண்ணப்போகுது... அதேன் எதுக்குன்னு நிறுத்திட்டோம்..." என்றார் அத்தை.

"அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்த... " என்றேன் வருத்தமாக.

"கூடமாட இருந்து வீட்டு வேல தோட்ட வேல கத்துகிட்டா போற இடத்துல ஒத்தாசைய இருப்பா அதான்...  தம்பி..." என்று இழத்தார் அத்தை.

"பார்த்தா நல்லா படிக்குற பொண்ணு மாதரி இருக்கா... வீட்டுல பொண்ணுங்க தான் படிக்கனும்... அப்பதான் அவங்க பிள்ளைங்க படிக்க உதவியா இருக்கும்" என்றேன். அப்போது ஏனோ குடும்பவிளக்கு பாரதிதாசன் என் நினைவில் வந்து போனார்.

"ஆமாப்பா ஓட்டத்துல கூட மொத இடத்துல வந்து இருக்கா... அவங்க வகுப்புலயே இரண்டாவதாம்" அத்த கண்ணில் ஒரு சிறிய பெருமை வந்து போனதை கவனித்தேன்.

"பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க அத்த..."  என்றேன் சிறிது கெஞ்சலாக.

"எங்க அப்பா கூட பள்ளிக்கூடம் தான் போகச் சொல்லுராங்க மாமா... ஆனா..." என்று தம்பியை இறக்கிவிட்டு அம்மாவை ஏறயிறங்க பார்த்தாள் செங்கனி.

"நான் அம்மா, அப்பாகிட்ட சொல்லிக்கிறேன். நீ பள்ளிக்கூடம் போறயா? " என்றேன்.

"சரிங்க மாமா " என்று ஆட்டுக்குட்டியை பிடிக்க துள்ளிகுதித்து ஓடினாள் செங்கனி.

செங்கனியை பார்த்தபோது என் தேன்மொழி தான் ஞாபகத்துல வந்தா? மனது பாரமானது... நல்லா மூச்சு இழந்துவிட்டேன் மனபாரம் குறையும் என்று.  ஆனால் பாரம் கூடவே செய்தது.


யார் அந்த தேன்மொழி?  ஏன் இவன் கவலையானான் தேன்மொழியை நினைத்து? தேன்மொழிக்கு என்ன ஆயிற்று?

வளரும்....

புகைப்படம்

எப்போதும் கேமராவுடன் திரிந்தாள்
எல்லோரையும் படம் பிடித்தாள்
கிளிக் கிளிக் சத்தத்துடன்
எதிர்வந்த எவரையும் விடவில்லை
பதறி விலகினர் அவளை பார்த்து
கேமராவை ஒழித்துவைத்தான் அண்ணன்
அடம்பிடிக்க எடுத்து தந்தாள் அம்மா
போஸ் கொடுக்க மறுத்தாள் அக்கா
தன்னை தானே எடுத்துக்கொண்டாள்
நாயை வளைத்து வளைத்து எடுத்தாள்
பட்டாம்பூச்சி படம்பிடிக்க ஓடினாள்
அவள் கேட்டகும் போதெல்லாம்
அப்பா சளைக்காமல் சிரித்தார்
குட்டிப்பெண் பொம்மைகேமராவுக்கு.

விடியா இரவு

நிலவு இல்லாத வானம்
இருட்டு தின்னும் இரவு
மழைவிட்டும் தூறும் மரம்
அணைய துடிக்கும் தெருவிளக்கு

எமனுக்காக காத்திருக்கும் கிழவி
தூரத்தில் குரைக்கும் நாய்
தனியே கத்தும் தவளை
உறக்கம் இல்லா புழுக்கத்தில்
பேரிளம்பெண்.

Saturday, August 27, 2016

விதை நெல் - நெல் மூன்று



விதை நெல் - நெல் ஒன்று.

விதை நெல் - நெல் இரண்டு

"என்ன மாப்புள்ள காலங்காத்தால கோயில் மரத்தடியில ஒக்காந்து இருக்க" மாட்டைப் பிடித்துக்கொண்டு ஒழவுக்கு போன புளிமூட்ட மாமா கேட்டார்.

"வயிரு சரியில்ல வெளிப்பக்கம் வந்தேன்.... அப்படியே குளிச்சுட்டு வீட்டுக்கு போகனும் மாமா" என்று சமாளித்தேன்.

பயிர மாடு மேயக்கூடாதுன்னு வாக்கூடு  போட்டு உழவு கலப்பைய கோட்ஏறு பூட்டி தும்பகயிறை இழுத்துப்பிடித்து மாடுக்கு ஈடு கொடுத்து நடந்தார் பளிமூட்ட மாமா.

நெல் நடாத இடங்களில் குதுரவள்ளி விதைக்க மாமா போறாரன்னு நினைக்கிறேன்.

நான் சின்னப்பையனா இருந்தப்போ ஊர்முழுக்க குதுரவள்ளி தான் வெதப்பாங்க... இப்ப எல்லாரும் நெல்லுக்கு மாறிட்டாங்க.  நெல்லு நட முடியாத இடங்கள்ள மட்டும் இப்ப குதுரவள்ளி வெதைக்கிறாங்க. குதுரவள்ளிக்கு அவ்வளவாக தண்ணி தேவையில்ல. கருசகாட்டுல வானம்பாறியக்கூட வெதைக்கலாம்.

நெல்லுக்கு மூனு களை எடுக்கனும் ரெண்டு மருந்து அடிக்கனும் ஆனா குதுரவள்ளி வெதச்சா போதும் களையோ எடுக்கவோ மருந்தோ அடிக்கவோ வேணாம்.

குதுரவள்ளிச்சோறு கருவாட்டு கொளம்பு ருசி வாயில இன்னும் அப்படியே இருக்கு. ஏன் எல்லாரும் நெல்லுக்கு மாறினாங்கா தெரியல.

ஒருவேளை நெல்லு பணப்பயிர் அதனால் தான் எல்லாரும் மாறினாங்களா என்னவோ. ஆனா நெல்லுக்கு மூனு ஒழவு அப்பறம்  கொளமிதிக்கனும் பரம்படிக்கணும் ஒரு ஏக்கருக்கு ஆறு ஏழு பொம்பள ஆளு நடவு கூலி இருக்கு, நடவுக்கு முன்ன களப்புஉரம் போடனும், மூனு களை எடுக்கனும்.  அதுகூட பரவாயில்ல நித்தம் தண்ணி பாச்சனும் தண்ணி கரண்டு பில்லு அப்படி இப்படின்னு வரவு செலவு கணக்கு பண்ணாங்கனா எனக்கு என்னமோ குதுரவள்ளி லாபகரமான விவசாயமாக தெரிந்தது. நெல்லுக்கு நடவு, அறுவடை, களை எடுக்க கூலி. மருந்து, உரம் எல்லாம் சேர்த்தால் ஒன்றுமே மிஞ்சாது.

சாமை, கம்பு, செவப்பு சோளம், கேப்பை, தினை, வெள்ள சோளம் எல்லாம் அரிதாகிக் கொண்டிருந்தது. இது எல்லாம் இந்த நிலத்தோட பயிர். நெல்லு தஞ்சாவூர், திருச்சி, சின்னமனூர் மாதரி ஆத்து பாசனம் உள்ள இடங்கள்ள போட வேண்டிய பயிர். அங்க நெல்ல தவிர மத்த வெள்ளம போட முடியாது. அவங்கள பாத்து இவங்க ஏன் மாறினாங்களோ தெரியல.

கேப்பை எல்லாம் கார்த்திகை மாதம் நட்டா மார்கழி பனியில வளர்ந்து குறுத்தள்ளியிரும் ஒரு தண்ணியில பயிர அறுக்கலாம். கம்பு, சோளம் எல்லாம் ஆடி மாசம் வெதச்சா அதுவா வளரும். அறுக்க மட்டும் காட்டுக்கு போனா போதும். சரியா தொன்னூறு நாள் புரட்டாசி மழைக்கு முன்னாடி கதிர் அறுக்களாம்.

மாரியம்மன், முத்தாலம்மன்  கோயில் திருவிழாவுக்கு தினை மாவு இடுச்சு மாவிளக்கு எடுப்பாங்க. தினைமாவு அவ்வளவு ருசியா இருக்கும். வெள்ளம் கலக்காம தின்னாலே இனிப்பா இருக்கும்.

"தேனும் தினைமாவும் கலந்துனக்கு நான் தருவேன் சங்கத்தமிழ் மூன்றும்"  அவ்வை பாட்டி பாடுனாங்க.

தேனும் தினைமாவும் எல்லா வைட்டமின் இருக்காம்.... குழந்தைகளுக்கு அவ்வளவு நல்ல உணவாம். ஆன உலகம் ஹார்லிக்ஸ் பூஸ்ட்ன்னு போயிக்கிட்டு இருக்கு.

நம்ம ஏதாவது சொன்ன படிச்சவன் பாட்ட கொடுத்தான்..... எழுதுனவன் ஏட்டக்கெடுத்தான்னு ஏளனம் செய்வார்கள். எங்கப்பாவே என்ன ஒதப்பபாரு.

இப்ப யாரும் தினை மாவு இடிக்கிறது இல்ல.. எல்லாரும் அரிசி மாவு தான். எல்லாத்துலையும் அரிசி. கேப்பக்களி, வெள்ளச்சோளச்சோறு, குதுரவள்ளி சோறு, கம்மங்கூழு. அரிசி எல்லத்தையும்  புறம்தள்ளியது. வீடுகளை விட்டு பல உணவு வெளியேறியது. அரிசி ஒரு பெருமையின் அடையாளமாக மாறத்தொடங்கியது. அதுல என்ன பெருமையோ தெரியல.

வரும் வாரங்களில் நெல் வளரும்....

Friday, August 19, 2016

விதை நெல் - நெல் இரண்டு

விதை நெல் - நெல் ஒன்று.

அங்கிருந்து நகர்ந்த நான் காலாற நடந்தேன். நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. எனக்கு கண்டிப்பாக தெரியும். அந்த கேள்வி ஆத்தாளை கஷ்டப்படுத்தும் என்று இருந்தும் ஏன் கேட்டேன். வருத்தமாக இருந்தது.

சுயநினைவு வந்தபொது வெகுதூரம் வந்திருந்தேன். ஊருக்கு வெளியே இருந்த சிறிய ஓடையின் கரையில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தேன் மறுகரையை பார்த்துக்கொகொண்டு. உடனே வீட்டுக்கு போக மனம் வரவில்லை. அந்த ஓடைக்கு நடுவே ஒரு அய்யனார் கோவில் இருக்கு. அங்கு போய் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் போல இருந்தது. கரையில் இருந்து இறங்கி கோவிலை நோக்கி நடந்தேன்.

அது ஆற்றுக்கு நடுவே இருக்கும் கோவில். இந்த ஆற்றில் தண்ணீர் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மட்டும் ஓடும். அதும் கெண்டைக்கால் அளவுக்குத்தான் ஓடும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருக்கும். இது மார்கழி மாதம் ஓடையில் தண்ணீர் இல்லை ஆனால் மணல் ஈரமாக இருந்துது. ஒரு இரண்டு அடி தோண்டுனா தண்ணீ வரும். செருப்ப கழட்டி கையில் எடுத்துக் கொண்டு வெறும் காலில் நடந்தேன். வெறும் காலில் நடக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதே ஓடையில் நாள் முழுக்க வெளையாண்டு இருக்கேன். இன்னக்கி ஒரு பத்து அடி வெறும் காலில் நடக்க முடியல. இத்தனைக்கும் பண்ணிரெண்டாவது படிக்குற வரைக்கும் செருப்பு போட்டது இல்ல இந்த மூணு வருசம் தான் செருப்பு போடுறேன். அதுக்குள்ள பாதம் தாங்கல.

கோவிலை ஒட்டிய ஆலமரத்தடியில் அமர்ந்தேன். ஆலமரத்தில் மணியும் அறுவாலும் நேர்த்திக்கடனுக்கு அடித்து தொங்க விட்டிருந்தனர். உபயமும் பேரும் துறு ஏறி இருந்தது. மேற்கூரை இல்லாத சுற்றுச்சுவர் மட்டும் உள்ள கோவில். செங்கலால் அடுக்கப்பபட்டு மண் பூசியமேடை அதில் ஒரு சிறிய அலமாறி எண்ணெய் விளக்கு ஏற்ற. வெளியே இரண்டு பெரிய குதிரை நிற்க உள்ள கம்பிரமாக ஒரு கையில் வெட்ட அருவா மறுகையில் ஆளுயர வேல்கம்பு முறுக்கிய மீசை கனல் தெறிக்கும் கண்ணுமாய் ஊரைக் காக்கும் அய்யனார் நின்றுகொண்டிருந்தார். ஊரைக் காக்கும் அய்யனார் அவரை காக்க ஒரு கூரையில்லை. ஆடி காத்திலும் பங்குனி வெயிலும் கார்த்திகை மழையிலும் ஊரை காத்து நின்றார் அய்யனார்.

என் இந்த வேறுபாடு கடவுள்களுக்குள் என்று தோன்றியது. யோசித்து பார்த்ததில் எந்த காவல் தெய்வத்திற்கும் கோவிலில் கூரையில்லை. நித்தியகால பூசையில்லை. வருடத்தில் ஒரு தடவை பொங்கல் படையலுடன் முடித்துக்கொள்வர். அப்புறம் பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. யாராவது வெளியூர் போனா எல்லையில் இருக்கும் சாமிக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு செல்வார்கள். அய்யனார் கூடவே சென்று பத்தரமா திரும்பி கொண்டு வருவதாக நம்பிக்கை. ஒருவேளை எங்க மாமாவின் மகன் தேங்காய் உடைக்காமல் சென்னைக்கு போயிருப்பாரோ? அதான் ஊருக்கு திரும்பி வரவே இல்லையோ?

திரும்பவும் ஆத்தாவும்... ஆத்தாவின் அழுகை மனதுக்குள் வந்தது. வருடங்கள் சில உருண்டு ஓடிவிட்டது இருந்தும் அவள் அழுகை மட்டும் ஓய்ந்த பாடில்லை. மாமாவின் மேல் கோவமும் வருத்தமும் மாறி மாறி வந்தது எனக்கு.

எங்க தோட்டத்துக்கு இந்த கோவில கடந்து தான் போகணும். அப்ப நான் சின்னபையன் நானும் எங்க ஆத்தா கூட தோட்டத்துக்கு போவேன். கோவிலை கடக்கும் போதெல்லாம் எங்க ஆத்தா "ஊர காத்த அய்யனாரே என் பிள்ளைகளுக்கு கை கால் சொகத்த கொடு... என் மகள என் அண்ண வீட்டுல வெளக்கெத்த வையு" வேண்டிக்கொள்வாள். ஊரைக் காக்கும் அய்யனார் என் ஆத்தாவின் நேத்திக்கடனை காக்க முடியவில்லை.

தொடரும்......