வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, December 1, 2015

விதை நெல் - நெல் ஒன்று.

கல்யாணம் கட்டிட்டு நீ பள்ளிக்கூடம் போகலாமா? வாத்தியார் எதுவும் சொல்லுவாங்கலா? என்றாள் என் ஆத்தா.

ஆத்தா நான் படிக்கிறது பள்ளிக்கூடம் இல்ல கல்லூரி.

ஏதோ ஒன்னு... ஓஞ்சோட்டு பசங்க எல்லாம் கல்யாணம் முடுச்சுடாங்க. நீ எப்ப படிப்பு முடிச்சு..... கல்யாணம் கட்டி... நாங்க எப்ப பேரன் பேத்திய தூக்கி கொஞ்சுறது... சொல்லிக்கொண்டே பருத்திமாறை ஒடித்து விறகு அடுப்புக்குள் தினித்தாள்.

ஆத்தா உனக்கு எது பிரச்சனை நான் கல்யாணம் முடிக்குறதா? இல்ல நீ பேரன் பேத்திய கொஞ்சுறதா?

எனக்கும் வயசாகுது.... முன்ன மாதரி அலைய முடியல... முடிக்காமல் ஊதுகுழ்ழாள் அடுப்பை ஊதினாள்.

ஒனக்கு வீட்டு வேலை செய்ய ஒரு ஆள் வேணும் அப்படித்தான?

அப்படி இல்லடா. கூடமாட ஒத்தாசைக்கு ஒரு ஆள் இருந்தா நல்லது தான சொல்லிக்கொண்டே மூடியிருந்த  தட்டில் ஒட்டியிருந்த பருக்கையை நசுக்கி சோறு வெந்து விட்டதா என்று பார்த்தாள்.

நல்லா ஞாபகம் வச்சுக்க எனக்கு கல்யாணம் முடிச்சா அவ இந்த ஊரல இருக்க மாட்டா அப்பறம் எப்படி உனக்கு ஒத்தாசையா இருப்பா?

இங்க இல்லாம எங்கடா போகப்போறா?

இல்ல ஆத்தா என்னோட படிப்புக்கு மெட்ராஸ்ல தான் வேலை கிடைக்கும்.

அம்முட்டு தூரமெல்லா வேணாம்பா... இங்கேயே பக்கத்துல வாத்தியார் வேல பாத்துக்கிட்டு எங்க கூடவே இருப்பா...

இல்லாத்தா நான் படிக்கிற computer பாடம் பள்ளிக்கூடம் வரைக்கும் இன்னும் வரல. அப்படி வந்து அந்த பாடத்துக்கு வாத்தியார்  வேலை வர இன்னும் நாலு அஞ்சு வருசமாகும்.

வடக்குபட்டி அத்தமகன் கூட மெட்ராஸ்ல தான் இருக்காம். உங்க அப்பா கிட்ட சொல்லி விலாசம் வாங்கி கடிதாசி போட்டு கேளு? என்றவாறு அறுகாமனையில் கத்தரிக்காயை கொழம்புக்கு அரிந்தாள்.

யாரு?

அதான்டா ஒங்க அப்பாவோட ஒன்னுவிட்ட தங்கச்சி மகன்.

அந்த மாமாவ நான் இரண்டு மூனு தடவதான் பாத்தே இருப்பேன். இப்ப நமக்கு வேணும் போது பேசுனா நல்லாவா இருக்கும். 

அந்த தம்பி அப்படி எல்லாம் நெனைக்காது. நீ போனா சந்தோஷப்படத்தான் செய்யும் சொல்லிக்கிட்டே கொழம்பை கூட்டி மற்றொரு அடுப்பில் வேகவைத்தாள்.

அந்த அத்தை நாம ஊருக்கு வரும்போது நம்ம சித்தப்பா வீட்டுக்கு தான் வருவாங்க நம்ம வீட்டுக்கு வந்ததே இல்ல...

அதெல்லாம் இல்ல நேத்துக்கூட நம்ம தோட்டத்துக்கு வந்தாங்க.... கடலை கூட கொடுத்து விட்டேன்.

நான் வேணுமுன்னா மாமாவே போய் பாக்கவா...

யாருடா ?

உங்க அண்ணன் பையன் சொல்லிவிட்டு ஏன்டா சொன்னோம் என்று ஆகிவிட்டது...

ஆத்தா ஒன்றும் சொல்லவில்லை.  நானும் அமைதியாக இருந்தேன்.

அவள் சேலையால் கண்ணை துடைத்தாள்... அழுகிறாள்...

அங்கிருக்க மனமில்லாது மெதுவாக அங்கிருந்து நகர்ந்தேன்.

ஏன் அழுதாள் ? வரும் வாரங்களில் தொடரும்