வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, December 28, 2010

அவளருகில்


அவள் அருகாமை எனக்கு பிடித்திருந்தது.

ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் நான் பார்த்ததில்லை.

மிகவும் மங்கலான வெளிச்சம் என் எதிரில் அவள்.

இருவருக்கும் நடுவில் மேசையில் காப்பி.

தொட்டுவிடும் தூரத்தில் அவள் கை.

சிகரங்களை நோக்கி - வைரமுத்து அவள் கையில்.

விரலால் கலைந்த முடியை காதுக்கு பின் தள்ளுகையில் காதுமடலில் சிறு மச்சம் கவனிக்க தவறவில்லை.

என் அம்மாவுக்கு அடுத்து இவள்தான் அழகி என்று தோன்றியது.

இது போல் இதற்கு முன் தோன்றியது இல்லை எந்த பொண்ணை பார்த்தபோதும்.

காப்பியை ஒவ்வொரு துளியாய் ருசித்தேன் அவளை ரசித்துக்கொண்டே.

ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் ஏதும் என் புத்திக்கு எட்டியதாகத் தெரியவில்லை.

இதுபோல் இருந்ததில்லை நான் இதற்கு முன், இதுவும் பிடித்திருந்தது.

மாற்றம் ஏதோ என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்தாய் உணர்ந்தேன்.





என் தலைக்குப்பின் ஏலக்கை டீ வாசனை. நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திருடா  பாட்டியப்  பாக்க ஊருக்கு போகணும் அம்மாவின் குரல் போர்வைக்கு வெளியே.

Monday, December 20, 2010

விடியும் என்று?


 1. காலை 

கணக்கு வாத்தியார் அரைப்பரிச்சை பேப்பருடன் ஆறாம் வகுப்புக்குள் நுழைந்தார்.

"யோகி... வைரம் ஏன்டா பள்ளிக்கூடம் வரல?" கணக்குத்தாள் கொடுத்த வாத்தியார் கேட்டார். 

"வைரத்தோடா அப்பா மாடு வாங்க வத்ராப்பு போயிருக்காரு சார், அதனாலே அவங்க காட்டுல தண்ணிவெலக கூடிட்டு போயிருக்காங்க சார்"  

"வைரம் உங்க மாமா பொண்ணு தானே?"

 "ஆமாங்க... சார்"

"இந்தாடா...  வைரத்தோட கணக்குத்தாள். உங்க மாமாகிட்டச்சொல்லு தேவையில்லாம வைரம் லீவு போடக்கூடாதுன்னு.... சரியா?"

 "சரிங்க... சார்"

2. மதியம் 

வைரமும் அவங்க ஆத்தாளும் மெளகாத்தோட்டத்தில வேலபாத்துகிட்ருந்தாங்க.

"இந்தாடி வைரம் உரத்த  செடித்தூறுல இருந்து   நாலு வெரக்கட தள்ளி வையி. இல்லாட்டி செடி செத்துப்போகும்... சரியா?"

"சரித்தா..."

 "நான் மெளகாநாத்து ஊடுநடவு போடுறேன். நீ  தண்ணியப்பாத்திக்கு அளவா பாச்சு. அப்புறம் வாமடைய  ஒடையாம அடைக்கனும்"

"சரித்தா..."

உரம் வைக்க ஆரம்பித்த வைரத்தின் யோசனை  எல்லாம் பள்ளிக்கூடத்தில் இருந்தது. வாமடையயை வெலக்கி தண்ணியை ஒரு பாத்தியிலிருந்து  அடுத்த பாத்திக்கு விட்ட வைரம் அடிவயித்த பிடித்துக்கொண்டு யத்தே என்று அலறிக்கொண்டே  வரப்பில் உக்கார்ந்தாள். என்னாடி என்று ஓடிவந்த ஆத்தா மகளை பம்புச்செட்டில் குளிக்கவைத்தாள்.

"மரியாத்தா...  இவளுக்காச்சும் நல்ல வழியக்காட்டு" வடக்கு நோக்கி விழுந்து கும்பிடாள்.

"நீ வேப்பமரத்தடியில உக்காரு... ஆத்தா போயி உரத்த எடுத்து ரூம்பில வச்சுட்டு,  மோட்டாரே  நிறுத்திட்டு வரேன் சரியா...?"

3. மாலை 

பள்ளிக்கூடப்பைய வீட்டில வச்சுட்டு வைரத்தின்  கணக்குத்தாளை எடுத்துக்கிட்டு  வைரத்தை பார்க்கப்போனான் யோகி.  வைரம் தாவணி போட்டுக்கிட்டு  வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒக்காந்திருந்தாள் .  

"வைரம்... நீதான் கணக்குல பஸ்ட்டு மார்க்கு. பரிச்சையில தப்பான கணக்கெல்லாம் போட்டுட்டு கட்டாயம் பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னாரு வாத்தியார்"

"யோகி... எங்க ஆத்தா என்ன இனிமே பள்ளிக்கூடமெல்லாம் போகவேனாமுன்னு சொல்லிருச்சு... வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழகிக்கச்சொல்லுச்சு..."

"யோகி...  எனக்கு படிக்கணுமுன்னு ஆசையிருக்குடா... நீ சொன்னா அப்பா கேப்பாரு சொல்லுவியா...?" 

"சரி நான் மாமாகிட்ட கேக்கிறேன்"

4. பின்னிரவு  

பாதித்தூக்கத்தில முழித்துக்கொண்டான் யோகி. ஒரே இருட்டா இருக்கு... இன்னும் விடியல... எப்ப விடியுமோ தெரியல?  விடிய மாமா வந்திருவாரா? மாமா கிட்ட வைரத்த பள்ளிகூடத்துக்கு அனுப்பச்சொல்லி கேக்கணும். உறங்கமில்லாமல் இருட்டுக்குள் காத்திருந்தான் விடியும் என்று?



இது என் ஐம்பதாவது பதிவு. என்னுடன் பள்ளியில் படித்து பாதியில் படிப்பை நிறுத்திய அனைத்து தோழிகளுக்கும் சமர்ப்பணம்.

Thursday, December 16, 2010

மாடு



நியூ யார்க், இந்தியன் கேரளா உணவகம், மாலை.

"யோகி... அப்படி என்னடா பாக்குற அந்த மெனுவுல ரெம்ப நேரமா? ஏதாவது ஆடர் பண்ணுடா"

"இல்லடா நரேன்... இங்க எது நல்ல இருக்குமுன்னு தெரியலா அதான்..."

"நீ லாஸ் ஏஞசல்ஸ்ல இருந்து என்ன பாக்க வந்திருக்க எது வேண்ணாலும் ஆடர் பண்ணு... இது என்னோட ட்டிரிட்டு..."

"அப்ப சரி... இங்க என்ன நல்ல இருக்குமோ அதுல ஒன்னு  நீயே  எனக்கு ஆடர் பண்ணுடா... நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துறேன்"

"சேட்டா... நாலு பொரோட்டா ஒரு பீப் கறி கொறச்சு காரம்..."

"ரெண்டு பேருக்கு இத்தர மதியா..." என்றர் சர்வர்.

"என்னடா ஆடர் பண்ணியிருக்க?" திரும்பி வந்த யோகி.

"பொரோட்டா... பீப் கறி... நியூ யார்க்லே இந்த கடையில பீப் கறி சூப்பரா இருக்கும்டா"

"சாரிடா நரேன்... நான் பீப் சாப்பிட மாட்டேன்... எனக்கு வேறே ஏதாவது ஆடர் பண்ணுடா"

விருதுநகர், செந்தில்குமார் நாடார் கல்லூரி அலுவலகம், காலை.

"அய்யா பெரியவரே... ரெம்ப நேரமா இங்க நிக்கிறிங்க யாரப்பாக்கணும்?"

"என் பையன் யோகி இங்க தான் படிக்கிறான்... பணம் கட்டனும்முன்னு சொன்னான் அதன் வந்தேன்... அவனுக்கு ஏதோ பரிச்சையம் அதன் முடியட்டுமுன்னு இருக்கேன்"

"அய்யா நான் இந்த காலேஸ்ல ப்யூன்... பணம் கட்ட சொல்லி வந்த லெட்டர் இருந்த கொடுங்க... என்னனு பாத்து நம்மாலே கட்டிரலாம்" என்று பணம் கட்டும் கவுண்டருக்கு கூட்டிச்சென்றார்.

வேட்டியை தூக்கி கால்சட்டை பையில் வைத்திருந்த லெட்டரையும் பணத்தையும் எடுத்துக்கொடுத்தார்.

"அய்யா நூறு கம்மியா இருக்கு..."

"லெட்டர்ல ஏழாயிரமுன்னு தானே போட்ருந்துச்சு"

"சரிதானய்யா... ஸ்பெஷல் பீஸ் போடாமா விட்டுபோயிருக்கு... வேணுமுன்ன அத பின்ன கட்டிக்கோங்க"

"கொஞ்சம் இருங்க... " என்று மாட்டுக்கு தவுடு புண்ணாக்கு வாங்க வச்சுருந்த பணத்தை  எடுத்து கொடுத்தார். மாடவே வித்தாச்சு அப்புறம் தவுடு புண்ணாக்கு யாருக்கு வாங்கணும் விரக்தியில் சிரித்துக்கொண்டார்.

கரட்டுபட்டி, சின்னவெள்ளை வீடு, இரவு

"இதுக்கு ஒன்னும் கோரவுல்ல... இன்னக்கி ஒன்னும் கெடையாது"

"என்னபாத்தா உனக்கு பாவமா இல்லயா?"

"என்னதான் கெஞ்சினாலும் இன்னக்கி கெடையாது"

"என்னடி இப்படி சொல்லுற... நான் ஓன் புருசெண்டி"

"பின்ன என்ன... பஞ்சாயத்துல பங்கு பிரிகிறப்போ... பால் பிச்சுற பசுவ தம்பிக்கு விட்டுக்கொடுத்துட்டு...ரெண்டு சின்னக்  கன்னுக்குட்டிய வாங்கிட்டு வந்துருக்கிங்க... அதுவும் கேடரிகன்னு... இது வளந்து உழவுமாடு ஆகுறதுக்குள்ள விடுஞ்சிரும்"

"பாவமுடி ஏந்தம்பி  ... அவன் பிள்ளைங்க ரெம்ப சிறுசுங்க வீடுல பால் கறக்குற மாடு இருந்த அதுங்களுக்கு உபயோகம இருக்கும் அதான்... இதப்போயி பெருசு பண்ணிக்கிட்டு"

"நாம வீட்டுளையும் தான் சின்னப்  பையன் இருக்கான்"

"யோகி தான் பள்ளிக்கொடம் போக ஆரம்புச்சுடான்ல்லா... அவனுக்கு எதுக்கு பாலு"

"இன்னொரு புள்ள பொறந்தா என்ன பண்ணுவீங்க..."

"நீ தான் இன்னிக்கு முடியாதுன்னு சொல்லிட்டையில... அப்புறம் எப்படி இன்னொன்னு"

"அப்படின்ன ஏன் என்னை கட்டிபுடுச்சுக்கிட்டு இருக்கிங்க... நீங்க வாங்கிட்டு வந்த கன்னுக்குட்டிய கட்டிபுடுச்சுக்கிட்டு தூங்கவேண்டியதுதான" பொய்க்கோவம் காட்டினாள்.

கல்லுப்பட்டி, மாட்டுச்சந்தை, மதியம்

"என்னய்யா தரகரே... இந்த ரெண்டு மாட்டையும் கேரளா வண்டியில ஏத்துற"

"மாடுக்கு எல்லா பல்லும் போட்டுருச்சு... வயசான இந்த மாட்ட எந்த விவசாயி வாங்குவான்... அதான் நல்ல வெலைக்கு  வந்துச்சு கேரளாவுக்கு ஏத்துறேன்"

"அந்த ஆளு சின்னவெள்ள... இந்த மாட்ட பிள்ள போல சின்னக் கண்ணுக்குட்டியில இருந்து வளத்தாரு... ஏதோ மகனுக்கு காலேஸ்ல பணம் கட்டணுமுன்னு தான் வித்தாரு"

"அதுக்கு நான் என்ன பண்றது"

"உன்கிட்ட கேட்டாருல்ல... இது விவசாயத்துக்கு தான வாங்கிரிங்களான்னு"

"எந்த விவசாயி சொந்த மாட்டா அடிமாட்டுக்கு விப்பான்... அதான் பொய் சொன்னேன்... நீ ஓன் தரக வாங்கிட்டு பேசாம போ"

"ஓன் தரகு யாருக்கு வேணும்... இந்த மாட்டுப்பாவம் உன்ன சும்மா விடாது" துண்டை ஒதறி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்த கிளம்பினார் இடைத்தரகர்.

கரட்டுபட்டி, சின்னவெள்ளை வீடு, காலை

"யம்மா... அய்யாவுக்கு லெட்டர் வந்திருக்கு" போஸ்ட்மேன்.
"நீங்களே... ஒடச்சு படிங்க தம்பி"

அன்புள்ள அம்மா அப்பாவுக்கு, நான் நலம். தாங்கள் மற்றும் தம்பி நலமா? நான் நல்ல முறையில் படிக்கிறேன். தோட்டத்துல நெல்லு, பருத்தி, கடலை எல்லாம் நல்ல இருக்கா? நெல்லுக்கு இரண்டாவது களை எடுத்து விட்டிர்களா ? தம்பி அப்பாவுக்கு உதவியாக வேலை செய்கிறானா?


நான் மாலை வகுப்பாக கம்யூட்டர் சேரலாம் என்று இருக்கிறேன். அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று எங்கள் வாத்தியார் சொன்னார். அதுக்கு சேர கொஞ்சம் பணம் செலவாகும். ஆனால் வேலை கிடைக்கும். அப்பாவிடம் சொல்லுங்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் சேர வேண்டும். பணம் ஏழாயிரம் கட்டவேண்டும். இதை தந்திபோல் பாவித்து சீக்கிரம் பணத்திற்கு ஏற்பாடு செய்யவும்.


அப்புறம் கேட்பதற்கு மறந்துவிட்டேன். நாம்ம மாடு கால்ல விறகுகுத்தி நொண்டி நொண்டி நடந்தது. இப்பொழுது கால் புண் ஆறிவிட்டதா? கால் ஊன்றி நன்றாக நடக்கிறதா மாடு?


                                                                                                                        இப்படிக்கு
                                                                                                              தாங்கள் அன்புமகன்
                                                                                                                      சி. யோகி

பின்குறிப்பு: Christopher Nolan ன் Inception, Memento, Following, The Prestige படம் அடுத்தடுத்து பார்த்து. இவரின் திரைக்கதையின் பாதிப்பில் என் கதையின் ஓட்டமும் ஒரு நேர்கோட்டில் இல்லாது முன்பின் மாறியிருக்கிறது. காட்சியின் இடமாற்றம் கதையின் புரிதலை பாதிக்கவில்லை என்றே நம்புகிறேன்.

Friday, December 10, 2010

மகாநதி ஒரு பயணம்


இது ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டத்தை சொல்வதலோ என்னவோ கதை நாயகனின் வாழ்க்கையும் அதன் சார்ந்த நிகழ்வுகளும் நதியின் கரையிலும் அது சார்ந்த பகுதியிலும் நிகழ்வதாக காட்டப்பட்டிருக்கும். கதை காவரியில் (திருநாகேஸ்வரம்) தொடக்கி கூவத்தில் (சென்னை)  பயணப்பட்டு கூக்கிலியில் (கல்கத்தா) விரிந்து கூவத்திற்கு திரும்பி பின் காவேரியில் ஆரம்பித்த இடத்திலே அவன் வாழ்க்கை அமைதியாக தொடர்வதாக சொல்லப்பட்டிருக்கும். 

கதையில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர் நதியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கும். கதையின் மையநாயகனின் பெயர் கிருஷ்ணா. நாயகியின் பெயர் யமுனா. நாயகனின் முதல் மனைவின் பெயர் நர்மதா. நாயகன் குழந்தைகளின் பெயர் காவேரி மற்றும் பரணி. மகாநதி இதுவம் நதியின் பெயர். படத்தின் தலைப்பு நதியின் வலைவுகளாலும் கோடுகளாலும் எழுதப்பட்டிருக்கும். படத்தின் முதல் காட்சியும் கடைசிக்காட்சியும் நதியில் ஆரம்பித்து நதியில் முடியும்.

கதாநாயகன் சிறையில் இருக்கும் போது ஏதோ ஒன்று அவனை அவன் பழைய நினைவுகளை தூண்டவேண்டும். சிறையில் இருப்பவனுக்கு நான்கு பக்கம் சுவர் மட்டுமே இருக்கும் எது அவன் பழைய நினைவை தூண்டமுடியும்? இங்கே கதாசிரியர் மிகவும் சிறப்பாக ஒன்றை உபயோகித்திருப்பார். அதுதான் சென்னை மத்திய சிறைசாலையின் பின்ன ஓடும் ரயில் சப்தம் நாயகனின் வீட்டிற்கு பக்கத்தில் ஓடும் ரயில் சப்தம் போல் இருப்பதால் அவன் நினைவு சிறையில் இருந்து சப்தத்துடன் பயணப்பட்டு அவன் பழைய வாழ்க்கை திரையில் விரிவதாக காட்டபட்டிருக்கும்.

மற்றொரு கவிதையான காட்சி. நாயகன் சிறையில் இருப்பன். வழக்கமாக முதலில் ஓடிவரும் மகள் அன்று மறைந்திருந்து தலையை மட்டும் நீட்டி கம்பிக்கு பின் இருக்கும் அப்பாவை பார்ப்பாள். அத்தை முறை உடைய வயதான கிழவி நாயகனின் அருகில் இருக்க மகளை நாயகன் கைகாட்டி அழைக்க அவள் மெதுவாக மறைவில் இருந்து தாவணியுடன் வெளிப்படுவாள்.  நாயகன் விழிகள் இரண்டும் கண்ணீர் கோர்க்க மனசு வெடித்து பேச வார்த்தைகள் இன்றி தலை ஆட்டி கேட்பான். உங்கள பாத்துட்டுபோன அன்னிக்கி மாப்புள்ள என்பாள் கெழவி. கெழவியோ அத்தை முறை, போது இடம்  பேத்தி வயதுக்கு வந்தது குறித்து பேச இயலாது. நல்ல படிக்கிற என்று பேச்சை மாற்றுவாள் கெழவி.  நாயகனோ சிரத்தை இல்லாமல் தலையாட்டுவான் கம்பிக்கு பின் கண்ணிருடன். மகளோ தந்தை காலில் விழுவாள் கம்பிக்கு இந்தபக்கம்.

மகன் கதாபத்திரத்தை விளக்கும் காட்சிகளாக... நாயகனின் பையன் ஏதாவது வித்தியாசமான பொருள் கண்டால் எடுபதுபோல் படத்தில் காட்சிகள் வரும் லண்டன் நண்பன் வாங்கிவந்த பொருள், அவன் கார் சாவி, கோவில் அருகில் நாய் குட்டி, வில்லனின் விசிடிங் கார்டு. இந்த விசிடிங் கார்டுயை வைத்துத்தான். நாயகனின் மகளும் மகனும் அவனை பார்க்கப்போய் அங்கிருந்து சீரளிக்கபடுவாள் மகள். மகன் நாய் பின் ஓடி கலைக் கூத்தாடியிடம் சேர்வான். அவள் சீரழிக்கபடுவதற்கு முந்தய காட்சியில் அவளின் வீணை தெருவில் ஒருவன் கால்படுவது போல் காட்டி யானை வரப்போவதை மணியோசை செய்திருப்பான் கதாசிரியன்.

ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. மகளை நாயகன் பார்க்க கூடாத இடத்தில் பார்த்து மீட்டிக்கொண்டு வரும்போது மஞ்சத்துணியால் போர்த்துவதும் ஒரு சிறுமி அவளுக்கு குங்குமம் இடுவதும் அங்கிருந்து அவர்கள் கூக்கிலி நதியில் பயணப்படுவதுபோல் காட்டி அவள் புனிதபட்டதுபோல் காட்சி அமைத்திருப்பார்கள். அதே காட்சியில் மகளில் அறையில் அப்பாவின் புகைப்படும் இருப்பதும் என அவள் மனதில் அப்பா இருப்பதை கவிதையாய்  காட்டப்பட்டிருக்கும்.

வசனக்கர்த்தாவின் பங்காக சில நல்ல காட்ச்கிகள்.  சாராயம்,சிகிரெட் விற்க கூப்பிடும் போலீஸ்யைப்பார்த்து "இது தப்புசென்சவங்க திருந்துற இடமுன்னு வெளியில இருக்கவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க... நானும் அப்படித்தான் நினச்சுக்கிட்டுருக்கேன்... நீ காக்கிசட்டபோட்ட குற்றவாளி... எனக்கு அது இல்ல" என்பன் கைதி நாயகன். 

கெட்டவர்களை தெய்வம் தண்டிக்கும் என்று சொல்லும் அய்யருக்கு பதிலாக  "நின்னு கொல்லர தெய்வமும் சும்மா இருக்கு... அன்னு கொல்லர சட்டமும் சும்மா இருக்கு" என்பன் நாயகன்.

நேர்மையான எனக்கு ஏன் இந்த தண்டனை என்று பழிவாங்க துடிக்கும் நாயகனிடம் "நேர்மையானவன்னு ஒருத்தனும் கெடையாது... என்னைவிட அயோக்கின்னு வேணுமுன்ன சொல்லலாம்.... பிளக்குல டிக்கெட் வாங்கலையா.... வேட்டியும் சேலையும்  வாங்கிட்டு ஓட்டு போடலையா... சாக்கடியில இறங்கி சுத்தம் பண்றத விட்டுட்டு... சாக்கட நம்ம மேலே படாம ஒதுங்கிப்போரதுதான் உத்தமம்..." என்பதாய் ராஜேஷ் (போலீஸ்) விவாதம் போகும்.

அதேபோல் மகள் கதாபாத்திரம் தூக்கத்தில் உளறுவதுபோல் கதை முன்பகுதியில் இருஇடங்களில் காட்டப்பட்டு. அதன் தொடர்ச்சியாய் அவள் கல்கத்தாவிலிருந்து மீட்டிவந்த பின் அந்தப்பெண் "விடுங்கட தேவிடியா பசங்களா...ஒரு நாளைக்கு எத்தன கஷ்டமர்ஷ் நான் என்ன மெசினா..." என்று தூக்கத்தில் உளறுவதுபோல் காட்சியை   பார்த்த நாயகன் தந்தை வெம்பி வெகுண்டு வில்லன்களை கொல்லாப்புறபடுவான்.

ஜெயிலில் ராஜேஷ்(போலீஸ்) நாயகனுக்கு பாரதி புத்தகம் கொடுக்கும்போது அப்புத்தகத்தின் பிளாஷ்டிக் அட்டையில் சூரிய ஒளிபட்டு நாயகன் முகத்தில் படுவதாக காடப்பட்டு, "பல வேடிக்கை மனிதரைப்போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று பாரதி கவிதையுடன் நாயகன் பழிவாங்கல் முடியும்.

இந்த படம் ஒரு வாழ்க்கை அனுபவம். வாழ்க்கையின் முக்கிய முடிவை அவசரப்பட்டு மிகப்பெரிய ஆசையால் சலனத்துடன் முடிவெடுத்தால் அதன் விளைவு மகாநதி.