வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, December 20, 2010

விடியும் என்று?


 1. காலை 

கணக்கு வாத்தியார் அரைப்பரிச்சை பேப்பருடன் ஆறாம் வகுப்புக்குள் நுழைந்தார்.

"யோகி... வைரம் ஏன்டா பள்ளிக்கூடம் வரல?" கணக்குத்தாள் கொடுத்த வாத்தியார் கேட்டார். 

"வைரத்தோடா அப்பா மாடு வாங்க வத்ராப்பு போயிருக்காரு சார், அதனாலே அவங்க காட்டுல தண்ணிவெலக கூடிட்டு போயிருக்காங்க சார்"  

"வைரம் உங்க மாமா பொண்ணு தானே?"

 "ஆமாங்க... சார்"

"இந்தாடா...  வைரத்தோட கணக்குத்தாள். உங்க மாமாகிட்டச்சொல்லு தேவையில்லாம வைரம் லீவு போடக்கூடாதுன்னு.... சரியா?"

 "சரிங்க... சார்"

2. மதியம் 

வைரமும் அவங்க ஆத்தாளும் மெளகாத்தோட்டத்தில வேலபாத்துகிட்ருந்தாங்க.

"இந்தாடி வைரம் உரத்த  செடித்தூறுல இருந்து   நாலு வெரக்கட தள்ளி வையி. இல்லாட்டி செடி செத்துப்போகும்... சரியா?"

"சரித்தா..."

 "நான் மெளகாநாத்து ஊடுநடவு போடுறேன். நீ  தண்ணியப்பாத்திக்கு அளவா பாச்சு. அப்புறம் வாமடைய  ஒடையாம அடைக்கனும்"

"சரித்தா..."

உரம் வைக்க ஆரம்பித்த வைரத்தின் யோசனை  எல்லாம் பள்ளிக்கூடத்தில் இருந்தது. வாமடையயை வெலக்கி தண்ணியை ஒரு பாத்தியிலிருந்து  அடுத்த பாத்திக்கு விட்ட வைரம் அடிவயித்த பிடித்துக்கொண்டு யத்தே என்று அலறிக்கொண்டே  வரப்பில் உக்கார்ந்தாள். என்னாடி என்று ஓடிவந்த ஆத்தா மகளை பம்புச்செட்டில் குளிக்கவைத்தாள்.

"மரியாத்தா...  இவளுக்காச்சும் நல்ல வழியக்காட்டு" வடக்கு நோக்கி விழுந்து கும்பிடாள்.

"நீ வேப்பமரத்தடியில உக்காரு... ஆத்தா போயி உரத்த எடுத்து ரூம்பில வச்சுட்டு,  மோட்டாரே  நிறுத்திட்டு வரேன் சரியா...?"

3. மாலை 

பள்ளிக்கூடப்பைய வீட்டில வச்சுட்டு வைரத்தின்  கணக்குத்தாளை எடுத்துக்கிட்டு  வைரத்தை பார்க்கப்போனான் யோகி.  வைரம் தாவணி போட்டுக்கிட்டு  வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒக்காந்திருந்தாள் .  

"வைரம்... நீதான் கணக்குல பஸ்ட்டு மார்க்கு. பரிச்சையில தப்பான கணக்கெல்லாம் போட்டுட்டு கட்டாயம் பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னாரு வாத்தியார்"

"யோகி... எங்க ஆத்தா என்ன இனிமே பள்ளிக்கூடமெல்லாம் போகவேனாமுன்னு சொல்லிருச்சு... வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழகிக்கச்சொல்லுச்சு..."

"யோகி...  எனக்கு படிக்கணுமுன்னு ஆசையிருக்குடா... நீ சொன்னா அப்பா கேப்பாரு சொல்லுவியா...?" 

"சரி நான் மாமாகிட்ட கேக்கிறேன்"

4. பின்னிரவு  

பாதித்தூக்கத்தில முழித்துக்கொண்டான் யோகி. ஒரே இருட்டா இருக்கு... இன்னும் விடியல... எப்ப விடியுமோ தெரியல?  விடிய மாமா வந்திருவாரா? மாமா கிட்ட வைரத்த பள்ளிகூடத்துக்கு அனுப்பச்சொல்லி கேக்கணும். உறங்கமில்லாமல் இருட்டுக்குள் காத்திருந்தான் விடியும் என்று?



இது என் ஐம்பதாவது பதிவு. என்னுடன் பள்ளியில் படித்து பாதியில் படிப்பை நிறுத்திய அனைத்து தோழிகளுக்கும் சமர்ப்பணம்.

10 comments:

  1. nice post. 50th post.....

    Congratulations!

    ReplyDelete
  2. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள். நலமா நீங்கள்? ரொம்ப நாள் பதிவு போடல...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் 50 ஆவது பதிவுக்கு.

    இன்னும் கிராமப்பக்கங்களில் இப்படித்தான் இருக்கிறதா?ஆதங்கமான பதிவு !

    ReplyDelete
  4. 50 க்கு வாழ்த்துக்கள் தோழரே.

    ரொம்ப நன்றாக இருந்தது என்றாலும் பிரிச்சி பிரிச்சி படிக்க கொடுக்கும் போது அதன் சுவை குறைந்து விடுவது போல தோன்றுகிறது.

    ReplyDelete
  5. //உறங்கமில்லாமல் இருட்டுக்குள் காத்திருந்தான் விடியும் என்று?//

    வைரத்திற்க்கும் விடியும்னு நம்பறோம்... நல்ல கதை

    வாழ்த்துகள் 50 ஆவது பதிவுக்கு.

    ReplyDelete
  6. அருமை நண்பரே...

    தனித்தனியாகக் கொடுக்காமல் கோர்வையாயிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது...

    :-)

    ReplyDelete
  7. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete