வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, December 28, 2010

அவளருகில்


அவள் அருகாமை எனக்கு பிடித்திருந்தது.

ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் நான் பார்த்ததில்லை.

மிகவும் மங்கலான வெளிச்சம் என் எதிரில் அவள்.

இருவருக்கும் நடுவில் மேசையில் காப்பி.

தொட்டுவிடும் தூரத்தில் அவள் கை.

சிகரங்களை நோக்கி - வைரமுத்து அவள் கையில்.

விரலால் கலைந்த முடியை காதுக்கு பின் தள்ளுகையில் காதுமடலில் சிறு மச்சம் கவனிக்க தவறவில்லை.

என் அம்மாவுக்கு அடுத்து இவள்தான் அழகி என்று தோன்றியது.

இது போல் இதற்கு முன் தோன்றியது இல்லை எந்த பொண்ணை பார்த்தபோதும்.

காப்பியை ஒவ்வொரு துளியாய் ருசித்தேன் அவளை ரசித்துக்கொண்டே.

ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் ஏதும் என் புத்திக்கு எட்டியதாகத் தெரியவில்லை.

இதுபோல் இருந்ததில்லை நான் இதற்கு முன், இதுவும் பிடித்திருந்தது.

மாற்றம் ஏதோ என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்தாய் உணர்ந்தேன்.

என் தலைக்குப்பின் ஏலக்கை டீ வாசனை. நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திருடா  பாட்டியப்  பாக்க ஊருக்கு போகணும் அம்மாவின் குரல் போர்வைக்கு வெளியே.

Monday, December 20, 2010

விடியும் என்று?


 1. காலை 

கணக்கு வாத்தியார் அரைப்பரிச்சை பேப்பருடன் ஆறாம் வகுப்புக்குள் நுழைந்தார்.

"யோகி... வைரம் ஏன்டா பள்ளிக்கூடம் வரல?" கணக்குத்தாள் கொடுத்த வாத்தியார் கேட்டார். 

"வைரத்தோடா அப்பா மாடு வாங்க வத்ராப்பு போயிருக்காரு சார், அதனாலே அவங்க காட்டுல தண்ணிவெலக கூடிட்டு போயிருக்காங்க சார்"  

"வைரம் உங்க மாமா பொண்ணு தானே?"

 "ஆமாங்க... சார்"

"இந்தாடா...  வைரத்தோட கணக்குத்தாள். உங்க மாமாகிட்டச்சொல்லு தேவையில்லாம வைரம் லீவு போடக்கூடாதுன்னு.... சரியா?"

 "சரிங்க... சார்"

2. மதியம் 

வைரமும் அவங்க ஆத்தாளும் மெளகாத்தோட்டத்தில வேலபாத்துகிட்ருந்தாங்க.

"இந்தாடி வைரம் உரத்த  செடித்தூறுல இருந்து   நாலு வெரக்கட தள்ளி வையி. இல்லாட்டி செடி செத்துப்போகும்... சரியா?"

"சரித்தா..."

 "நான் மெளகாநாத்து ஊடுநடவு போடுறேன். நீ  தண்ணியப்பாத்திக்கு அளவா பாச்சு. அப்புறம் வாமடைய  ஒடையாம அடைக்கனும்"

"சரித்தா..."

உரம் வைக்க ஆரம்பித்த வைரத்தின் யோசனை  எல்லாம் பள்ளிக்கூடத்தில் இருந்தது. வாமடையயை வெலக்கி தண்ணியை ஒரு பாத்தியிலிருந்து  அடுத்த பாத்திக்கு விட்ட வைரம் அடிவயித்த பிடித்துக்கொண்டு யத்தே என்று அலறிக்கொண்டே  வரப்பில் உக்கார்ந்தாள். என்னாடி என்று ஓடிவந்த ஆத்தா மகளை பம்புச்செட்டில் குளிக்கவைத்தாள்.

"மரியாத்தா...  இவளுக்காச்சும் நல்ல வழியக்காட்டு" வடக்கு நோக்கி விழுந்து கும்பிடாள்.

"நீ வேப்பமரத்தடியில உக்காரு... ஆத்தா போயி உரத்த எடுத்து ரூம்பில வச்சுட்டு,  மோட்டாரே  நிறுத்திட்டு வரேன் சரியா...?"

3. மாலை 

பள்ளிக்கூடப்பைய வீட்டில வச்சுட்டு வைரத்தின்  கணக்குத்தாளை எடுத்துக்கிட்டு  வைரத்தை பார்க்கப்போனான் யோகி.  வைரம் தாவணி போட்டுக்கிட்டு  வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒக்காந்திருந்தாள் .  

"வைரம்... நீதான் கணக்குல பஸ்ட்டு மார்க்கு. பரிச்சையில தப்பான கணக்கெல்லாம் போட்டுட்டு கட்டாயம் பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னாரு வாத்தியார்"

"யோகி... எங்க ஆத்தா என்ன இனிமே பள்ளிக்கூடமெல்லாம் போகவேனாமுன்னு சொல்லிருச்சு... வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழகிக்கச்சொல்லுச்சு..."

"யோகி...  எனக்கு படிக்கணுமுன்னு ஆசையிருக்குடா... நீ சொன்னா அப்பா கேப்பாரு சொல்லுவியா...?" 

"சரி நான் மாமாகிட்ட கேக்கிறேன்"

4. பின்னிரவு  

பாதித்தூக்கத்தில முழித்துக்கொண்டான் யோகி. ஒரே இருட்டா இருக்கு... இன்னும் விடியல... எப்ப விடியுமோ தெரியல?  விடிய மாமா வந்திருவாரா? மாமா கிட்ட வைரத்த பள்ளிகூடத்துக்கு அனுப்பச்சொல்லி கேக்கணும். உறங்கமில்லாமல் இருட்டுக்குள் காத்திருந்தான் விடியும் என்று?இது என் ஐம்பதாவது பதிவு. என்னுடன் பள்ளியில் படித்து பாதியில் படிப்பை நிறுத்திய அனைத்து தோழிகளுக்கும் சமர்ப்பணம்.

Thursday, December 16, 2010

மாடுநியூ யார்க், இந்தியன் கேரளா உணவகம், மாலை.

"யோகி... அப்படி என்னடா பாக்குற அந்த மெனுவுல ரெம்ப நேரமா? ஏதாவது ஆடர் பண்ணுடா"

"இல்லடா நரேன்... இங்க எது நல்ல இருக்குமுன்னு தெரியலா அதான்..."

"நீ லாஸ் ஏஞசல்ஸ்ல இருந்து என்ன பாக்க வந்திருக்க எது வேண்ணாலும் ஆடர் பண்ணு... இது என்னோட ட்டிரிட்டு..."

"அப்ப சரி... இங்க என்ன நல்ல இருக்குமோ அதுல ஒன்னு  நீயே  எனக்கு ஆடர் பண்ணுடா... நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துறேன்"

"சேட்டா... நாலு பொரோட்டா ஒரு பீப் கறி கொறச்சு காரம்..."

"ரெண்டு பேருக்கு இத்தர மதியா..." என்றர் சர்வர்.

"என்னடா ஆடர் பண்ணியிருக்க?" திரும்பி வந்த யோகி.

"பொரோட்டா... பீப் கறி... நியூ யார்க்லே இந்த கடையில பீப் கறி சூப்பரா இருக்கும்டா"

"சாரிடா நரேன்... நான் பீப் சாப்பிட மாட்டேன்... எனக்கு வேறே ஏதாவது ஆடர் பண்ணுடா"

விருதுநகர், செந்தில்குமார் நாடார் கல்லூரி அலுவலகம், காலை.

"அய்யா பெரியவரே... ரெம்ப நேரமா இங்க நிக்கிறிங்க யாரப்பாக்கணும்?"

"என் பையன் யோகி இங்க தான் படிக்கிறான்... பணம் கட்டனும்முன்னு சொன்னான் அதன் வந்தேன்... அவனுக்கு ஏதோ பரிச்சையம் அதன் முடியட்டுமுன்னு இருக்கேன்"

"அய்யா நான் இந்த காலேஸ்ல ப்யூன்... பணம் கட்ட சொல்லி வந்த லெட்டர் இருந்த கொடுங்க... என்னனு பாத்து நம்மாலே கட்டிரலாம்" என்று பணம் கட்டும் கவுண்டருக்கு கூட்டிச்சென்றார்.

வேட்டியை தூக்கி கால்சட்டை பையில் வைத்திருந்த லெட்டரையும் பணத்தையும் எடுத்துக்கொடுத்தார்.

"அய்யா நூறு கம்மியா இருக்கு..."

"லெட்டர்ல ஏழாயிரமுன்னு தானே போட்ருந்துச்சு"

"சரிதானய்யா... ஸ்பெஷல் பீஸ் போடாமா விட்டுபோயிருக்கு... வேணுமுன்ன அத பின்ன கட்டிக்கோங்க"

"கொஞ்சம் இருங்க... " என்று மாட்டுக்கு தவுடு புண்ணாக்கு வாங்க வச்சுருந்த பணத்தை  எடுத்து கொடுத்தார். மாடவே வித்தாச்சு அப்புறம் தவுடு புண்ணாக்கு யாருக்கு வாங்கணும் விரக்தியில் சிரித்துக்கொண்டார்.

கரட்டுபட்டி, சின்னவெள்ளை வீடு, இரவு

"இதுக்கு ஒன்னும் கோரவுல்ல... இன்னக்கி ஒன்னும் கெடையாது"

"என்னபாத்தா உனக்கு பாவமா இல்லயா?"

"என்னதான் கெஞ்சினாலும் இன்னக்கி கெடையாது"

"என்னடி இப்படி சொல்லுற... நான் ஓன் புருசெண்டி"

"பின்ன என்ன... பஞ்சாயத்துல பங்கு பிரிகிறப்போ... பால் பிச்சுற பசுவ தம்பிக்கு விட்டுக்கொடுத்துட்டு...ரெண்டு சின்னக்  கன்னுக்குட்டிய வாங்கிட்டு வந்துருக்கிங்க... அதுவும் கேடரிகன்னு... இது வளந்து உழவுமாடு ஆகுறதுக்குள்ள விடுஞ்சிரும்"

"பாவமுடி ஏந்தம்பி  ... அவன் பிள்ளைங்க ரெம்ப சிறுசுங்க வீடுல பால் கறக்குற மாடு இருந்த அதுங்களுக்கு உபயோகம இருக்கும் அதான்... இதப்போயி பெருசு பண்ணிக்கிட்டு"

"நாம வீட்டுளையும் தான் சின்னப்  பையன் இருக்கான்"

"யோகி தான் பள்ளிக்கொடம் போக ஆரம்புச்சுடான்ல்லா... அவனுக்கு எதுக்கு பாலு"

"இன்னொரு புள்ள பொறந்தா என்ன பண்ணுவீங்க..."

"நீ தான் இன்னிக்கு முடியாதுன்னு சொல்லிட்டையில... அப்புறம் எப்படி இன்னொன்னு"

"அப்படின்ன ஏன் என்னை கட்டிபுடுச்சுக்கிட்டு இருக்கிங்க... நீங்க வாங்கிட்டு வந்த கன்னுக்குட்டிய கட்டிபுடுச்சுக்கிட்டு தூங்கவேண்டியதுதான" பொய்க்கோவம் காட்டினாள்.

கல்லுப்பட்டி, மாட்டுச்சந்தை, மதியம்

"என்னய்யா தரகரே... இந்த ரெண்டு மாட்டையும் கேரளா வண்டியில ஏத்துற"

"மாடுக்கு எல்லா பல்லும் போட்டுருச்சு... வயசான இந்த மாட்ட எந்த விவசாயி வாங்குவான்... அதான் நல்ல வெலைக்கு  வந்துச்சு கேரளாவுக்கு ஏத்துறேன்"

"அந்த ஆளு சின்னவெள்ள... இந்த மாட்ட பிள்ள போல சின்னக் கண்ணுக்குட்டியில இருந்து வளத்தாரு... ஏதோ மகனுக்கு காலேஸ்ல பணம் கட்டணுமுன்னு தான் வித்தாரு"

"அதுக்கு நான் என்ன பண்றது"

"உன்கிட்ட கேட்டாருல்ல... இது விவசாயத்துக்கு தான வாங்கிரிங்களான்னு"

"எந்த விவசாயி சொந்த மாட்டா அடிமாட்டுக்கு விப்பான்... அதான் பொய் சொன்னேன்... நீ ஓன் தரக வாங்கிட்டு பேசாம போ"

"ஓன் தரகு யாருக்கு வேணும்... இந்த மாட்டுப்பாவம் உன்ன சும்மா விடாது" துண்டை ஒதறி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்த கிளம்பினார் இடைத்தரகர்.

கரட்டுபட்டி, சின்னவெள்ளை வீடு, காலை

"யம்மா... அய்யாவுக்கு லெட்டர் வந்திருக்கு" போஸ்ட்மேன்.
"நீங்களே... ஒடச்சு படிங்க தம்பி"

அன்புள்ள அம்மா அப்பாவுக்கு, நான் நலம். தாங்கள் மற்றும் தம்பி நலமா? நான் நல்ல முறையில் படிக்கிறேன். தோட்டத்துல நெல்லு, பருத்தி, கடலை எல்லாம் நல்ல இருக்கா? நெல்லுக்கு இரண்டாவது களை எடுத்து விட்டிர்களா ? தம்பி அப்பாவுக்கு உதவியாக வேலை செய்கிறானா?


நான் மாலை வகுப்பாக கம்யூட்டர் சேரலாம் என்று இருக்கிறேன். அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று எங்கள் வாத்தியார் சொன்னார். அதுக்கு சேர கொஞ்சம் பணம் செலவாகும். ஆனால் வேலை கிடைக்கும். அப்பாவிடம் சொல்லுங்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் சேர வேண்டும். பணம் ஏழாயிரம் கட்டவேண்டும். இதை தந்திபோல் பாவித்து சீக்கிரம் பணத்திற்கு ஏற்பாடு செய்யவும்.


அப்புறம் கேட்பதற்கு மறந்துவிட்டேன். நாம்ம மாடு கால்ல விறகுகுத்தி நொண்டி நொண்டி நடந்தது. இப்பொழுது கால் புண் ஆறிவிட்டதா? கால் ஊன்றி நன்றாக நடக்கிறதா மாடு?


                                                                                                                        இப்படிக்கு
                                                                                                              தாங்கள் அன்புமகன்
                                                                                                                      சி. யோகி

பின்குறிப்பு: Christopher Nolan ன் Inception, Memento, Following, The Prestige படம் அடுத்தடுத்து பார்த்து. இவரின் திரைக்கதையின் பாதிப்பில் என் கதையின் ஓட்டமும் ஒரு நேர்கோட்டில் இல்லாது முன்பின் மாறியிருக்கிறது. காட்சியின் இடமாற்றம் கதையின் புரிதலை பாதிக்கவில்லை என்றே நம்புகிறேன்.

Friday, December 10, 2010

மகாநதி ஒரு பயணம்


இது ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டத்தை சொல்வதலோ என்னவோ கதை நாயகனின் வாழ்க்கையும் அதன் சார்ந்த நிகழ்வுகளும் நதியின் கரையிலும் அது சார்ந்த பகுதியிலும் நிகழ்வதாக காட்டப்பட்டிருக்கும். கதை காவரியில் (திருநாகேஸ்வரம்) தொடக்கி கூவத்தில் (சென்னை)  பயணப்பட்டு கூக்கிலியில் (கல்கத்தா) விரிந்து கூவத்திற்கு திரும்பி பின் காவேரியில் ஆரம்பித்த இடத்திலே அவன் வாழ்க்கை அமைதியாக தொடர்வதாக சொல்லப்பட்டிருக்கும். 

கதையில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர் நதியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கும். கதையின் மையநாயகனின் பெயர் கிருஷ்ணா. நாயகியின் பெயர் யமுனா. நாயகனின் முதல் மனைவின் பெயர் நர்மதா. நாயகன் குழந்தைகளின் பெயர் காவேரி மற்றும் பரணி. மகாநதி இதுவம் நதியின் பெயர். படத்தின் தலைப்பு நதியின் வலைவுகளாலும் கோடுகளாலும் எழுதப்பட்டிருக்கும். படத்தின் முதல் காட்சியும் கடைசிக்காட்சியும் நதியில் ஆரம்பித்து நதியில் முடியும்.

கதாநாயகன் சிறையில் இருக்கும் போது ஏதோ ஒன்று அவனை அவன் பழைய நினைவுகளை தூண்டவேண்டும். சிறையில் இருப்பவனுக்கு நான்கு பக்கம் சுவர் மட்டுமே இருக்கும் எது அவன் பழைய நினைவை தூண்டமுடியும்? இங்கே கதாசிரியர் மிகவும் சிறப்பாக ஒன்றை உபயோகித்திருப்பார். அதுதான் சென்னை மத்திய சிறைசாலையின் பின்ன ஓடும் ரயில் சப்தம் நாயகனின் வீட்டிற்கு பக்கத்தில் ஓடும் ரயில் சப்தம் போல் இருப்பதால் அவன் நினைவு சிறையில் இருந்து சப்தத்துடன் பயணப்பட்டு அவன் பழைய வாழ்க்கை திரையில் விரிவதாக காட்டபட்டிருக்கும்.

மற்றொரு கவிதையான காட்சி. நாயகன் சிறையில் இருப்பன். வழக்கமாக முதலில் ஓடிவரும் மகள் அன்று மறைந்திருந்து தலையை மட்டும் நீட்டி கம்பிக்கு பின் இருக்கும் அப்பாவை பார்ப்பாள். அத்தை முறை உடைய வயதான கிழவி நாயகனின் அருகில் இருக்க மகளை நாயகன் கைகாட்டி அழைக்க அவள் மெதுவாக மறைவில் இருந்து தாவணியுடன் வெளிப்படுவாள்.  நாயகன் விழிகள் இரண்டும் கண்ணீர் கோர்க்க மனசு வெடித்து பேச வார்த்தைகள் இன்றி தலை ஆட்டி கேட்பான். உங்கள பாத்துட்டுபோன அன்னிக்கி மாப்புள்ள என்பாள் கெழவி. கெழவியோ அத்தை முறை, போது இடம்  பேத்தி வயதுக்கு வந்தது குறித்து பேச இயலாது. நல்ல படிக்கிற என்று பேச்சை மாற்றுவாள் கெழவி.  நாயகனோ சிரத்தை இல்லாமல் தலையாட்டுவான் கம்பிக்கு பின் கண்ணிருடன். மகளோ தந்தை காலில் விழுவாள் கம்பிக்கு இந்தபக்கம்.

மகன் கதாபத்திரத்தை விளக்கும் காட்சிகளாக... நாயகனின் பையன் ஏதாவது வித்தியாசமான பொருள் கண்டால் எடுபதுபோல் படத்தில் காட்சிகள் வரும் லண்டன் நண்பன் வாங்கிவந்த பொருள், அவன் கார் சாவி, கோவில் அருகில் நாய் குட்டி, வில்லனின் விசிடிங் கார்டு. இந்த விசிடிங் கார்டுயை வைத்துத்தான். நாயகனின் மகளும் மகனும் அவனை பார்க்கப்போய் அங்கிருந்து சீரளிக்கபடுவாள் மகள். மகன் நாய் பின் ஓடி கலைக் கூத்தாடியிடம் சேர்வான். அவள் சீரழிக்கபடுவதற்கு முந்தய காட்சியில் அவளின் வீணை தெருவில் ஒருவன் கால்படுவது போல் காட்டி யானை வரப்போவதை மணியோசை செய்திருப்பான் கதாசிரியன்.

ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. மகளை நாயகன் பார்க்க கூடாத இடத்தில் பார்த்து மீட்டிக்கொண்டு வரும்போது மஞ்சத்துணியால் போர்த்துவதும் ஒரு சிறுமி அவளுக்கு குங்குமம் இடுவதும் அங்கிருந்து அவர்கள் கூக்கிலி நதியில் பயணப்படுவதுபோல் காட்டி அவள் புனிதபட்டதுபோல் காட்சி அமைத்திருப்பார்கள். அதே காட்சியில் மகளில் அறையில் அப்பாவின் புகைப்படும் இருப்பதும் என அவள் மனதில் அப்பா இருப்பதை கவிதையாய்  காட்டப்பட்டிருக்கும்.

வசனக்கர்த்தாவின் பங்காக சில நல்ல காட்ச்கிகள்.  சாராயம்,சிகிரெட் விற்க கூப்பிடும் போலீஸ்யைப்பார்த்து "இது தப்புசென்சவங்க திருந்துற இடமுன்னு வெளியில இருக்கவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க... நானும் அப்படித்தான் நினச்சுக்கிட்டுருக்கேன்... நீ காக்கிசட்டபோட்ட குற்றவாளி... எனக்கு அது இல்ல" என்பன் கைதி நாயகன். 

கெட்டவர்களை தெய்வம் தண்டிக்கும் என்று சொல்லும் அய்யருக்கு பதிலாக  "நின்னு கொல்லர தெய்வமும் சும்மா இருக்கு... அன்னு கொல்லர சட்டமும் சும்மா இருக்கு" என்பன் நாயகன்.

நேர்மையான எனக்கு ஏன் இந்த தண்டனை என்று பழிவாங்க துடிக்கும் நாயகனிடம் "நேர்மையானவன்னு ஒருத்தனும் கெடையாது... என்னைவிட அயோக்கின்னு வேணுமுன்ன சொல்லலாம்.... பிளக்குல டிக்கெட் வாங்கலையா.... வேட்டியும் சேலையும்  வாங்கிட்டு ஓட்டு போடலையா... சாக்கடியில இறங்கி சுத்தம் பண்றத விட்டுட்டு... சாக்கட நம்ம மேலே படாம ஒதுங்கிப்போரதுதான் உத்தமம்..." என்பதாய் ராஜேஷ் (போலீஸ்) விவாதம் போகும்.

அதேபோல் மகள் கதாபாத்திரம் தூக்கத்தில் உளறுவதுபோல் கதை முன்பகுதியில் இருஇடங்களில் காட்டப்பட்டு. அதன் தொடர்ச்சியாய் அவள் கல்கத்தாவிலிருந்து மீட்டிவந்த பின் அந்தப்பெண் "விடுங்கட தேவிடியா பசங்களா...ஒரு நாளைக்கு எத்தன கஷ்டமர்ஷ் நான் என்ன மெசினா..." என்று தூக்கத்தில் உளறுவதுபோல் காட்சியை   பார்த்த நாயகன் தந்தை வெம்பி வெகுண்டு வில்லன்களை கொல்லாப்புறபடுவான்.

ஜெயிலில் ராஜேஷ்(போலீஸ்) நாயகனுக்கு பாரதி புத்தகம் கொடுக்கும்போது அப்புத்தகத்தின் பிளாஷ்டிக் அட்டையில் சூரிய ஒளிபட்டு நாயகன் முகத்தில் படுவதாக காடப்பட்டு, "பல வேடிக்கை மனிதரைப்போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று பாரதி கவிதையுடன் நாயகன் பழிவாங்கல் முடியும்.

இந்த படம் ஒரு வாழ்க்கை அனுபவம். வாழ்க்கையின் முக்கிய முடிவை அவசரப்பட்டு மிகப்பெரிய ஆசையால் சலனத்துடன் முடிவெடுத்தால் அதன் விளைவு மகாநதி.

Friday, September 24, 2010

வண்டிக்காரன் பாகம் 5

நரிவிரட்டியை வீட்டுக்கு வந்து தன்னை பார்க்க சொல்லி ஆள் அனுப்பினார் இன்ஸ்பெக்டர்.  இந்த கேஸ்யை ஸ்டேசனில் வச்சு விசாரிக்க முடியாது. தன் சொந்த விருப்பத்தின் பேரிலும் தன் நண்பனின் அம்மாவுக்காகவும் விசாரிப்பது. வண்டிக்காரன் கடைசியா ஏதாவது சொன்னாரா என்று கேட்கவே இந்த விசாரணை. நரிவிரடியிடம் விசாரணையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ன கேட்பது எதை முதலில் கேட்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார் இன்ஸ்பெக்டர். 

"டொக்...டொக்... சார்...சார்..."  யோசனையில் இருந்து விடுபட்ட இன்ஸ்பெக்டர் நரிவிரட்டி ஒரு பையுடன் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டுருப்பதை பார்த்தார்.

"சார் வரச்சொன்னிங்கலாம்...."

"ஆமா உள்ள வாங்க..." என்று உக்கார சேர் நகத்திபோட்டார் இன்ஸ்பெக்டர். 

"என்ன விஷயமா என்ன வரச்சொன்னிங்க சார்..."
"நான் நேரே விசயத்துக்கு வரேன்... ஏன் வண்டிக்காரன கொலை பண்ணிங்க... எதுக்கு பண்ணிங்க... எப்படி பண்ணிங்க..."

"உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்... அதுக்கும் முன்னாடி எனக்கு நீங்க ஒரு உண்மையச்சொல்லனும்..."

"கேளுங்க..."

"நீங்க நம்ம பழைய பிரசிடன்ட் வெள்ளைசாமியோட பையனா ?"

"ஆமாம்..." இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று ஒத்துகொண்டார் இன்ஸ்பெக்டர்.

"அப்ப சரி தம்பி... உங்க அப்பா இந்த கிராமத்துக்கு எவ்வளவோ நல்லது பண்ணியிருக்காரு... உங்க அப்பா பிரசிடன்டா இருந்தப்பதான் நாம ஊரு கம்மா வெட்டுனது... பள்ளிக்கொடம் வந்தது... ஏன் கரண்டு இழுத்து நாம ஊருக்கு வெளுச்சம் போட்டதே உங்க அப்பாதான்... நீங்களும் நல்லவராத்தான் இருப்பிங்க தம்பி... உங்கள நம்பி நடந்த உண்மையெல்லாம் சொல்றேன்... நல்லது கெட்டது நீங்களே பாத்து செய்யுங்க..."

"முதல நடந்தது என்னனு சொல்லுங்க... நல்லது கெட்டது பின்ன பாக்கலாம்..."

"வண்டிக்காரனை பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல... உங்களுக்கே அவன் செஞ்சது எல்லாம் தெருஞ்சிருக்கும்..."

"ஏன் கொலை பண்ணனுமுன்னு முடிவேடுத்திங்க..."

"அவன் சாராயம் காச்சுறதுக்கு என்னோட தோட்டத்துல இருந்துதன் தண்ணி எடுத்தான்... எடுக்கவிடாட்டி என்கூட சண்டைபோடுவான்... அவன் போலீஸ்ல பிடிபடும் போதெல்லாம்... விசாரணைன்னு போலீஸ் என்னை தெனமும் நடக்க விட்டாங்க... அப்ப போலீஸ் ஸ்டேஷன் வேறே சாப்டூர்லே இருந்துச்சு... போக வர பத்து மையில் நடக்கணும்... அவனால நான் ரெம்ப பாதிக்கப்பட்டேன்... ஆனாலும் சொந்த ஊருக்காரன்னு முடுஞ்ச வரைக்கும் எனக்கு எதுவும் தெரியாதுன்னுதான் சொன்னேன்... சாட்சி இல்லாம போலீஸ் அவனை உள்ள தள்ள முடியாம கஷ்ட்டப்பட்டாங்க... அவன் உள்ளேயும் போகம... சாராயம் காச்சுறதையும் நிறுத்தாம... அவனாலே நான் ரெம்ப கஷ்டப்பட்டேன்..."

"இதுதான் கொலைசெய்யா காரணமா ?"

"இதுமட்டும் இல்ல தம்பி... ஊருல அவனுக்கும் என் பொண்டாடிக்கும் தொடர்புன்னு என் காது படவே பேசிக்கிட்டாங்க... நான் நம்பல.. ஆனா போலீஸ் சொல்லுச்சு... அவனுக்கும் என் பொண்டாடிக்கும் தொடர்பு இருக்காதனாலே தான்... நான் அவன்கிட்ட காசு வாங்கிட்டு உண்மையே சொல்லன்னு சொன்னங்க... அப்பதான் முடிவு பண்ணுனேன் வண்டிக்காரன கொலைபன்னனுமுன்னு..."

"சரி எப்படி கொலை பன்னேங்க..."

"அவனோட கொலையே ரெம்ப நிதானமா... யாரும் கண்டுபிடிக்க முடியாத மாதரி செய்யானுமுன்னு முடிவு செஞ்சேன்... அதுக்காக புதுசா அருவா வேல்கம்பு கதியெல்லாம் அடுச்சேன்... ஏன்னா என்னோட கசப்பு கடையில இருக்க அருவ கத்திய வச்சு கொலை செஞ்சா எங்க போலீஸ் மோப்பநாய் கண்டுபிடுச்சுருமொன்ன பயம்... அந்த புது அருவ கத்திய அவனுக்கு தெரியாம அவன் சாராயம் காச்சுற எடத்துக்கு பக்கத்துலேயே ஒரு மரபோந்துல ஒலுச்சு வெச்சேன்..."

"கொலையா எப்ப பன்னேங்க..."

"ஒரு முழுநிலா இருக்குற பவுர்ணமியில கொலை பண்றதுன்னு முடிவு பண்ணினேன்... அவன் அன்னிக்கு கட்டாயம் சாராயம் காச்சா வருவான்... அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் செஞ்சேன்... நானா எனக்கு பெதிபோரதுக்கு மருந்து சாப்பிட்டுட்டு எழுமலை கவர்மெண்டு ஆஸ்பத்திரியில ரெண்டு நாளைக்கு முன்னாடியே அட்மிட் ஆனேன். கொலை செய்யணுமுன்னு முடிவெடுத்தா அன்னிக்கு யாருக்கும் தெரியாம ஆஸ்பத்திரியில இருந்து அவன் சாராயம் காச்சுற கரட்டுக்கு வந்தேன்... ஒரு பெரிய பானையில இருந்து டுயூப் வழியா சின்ன பானைக்கு சாராயம் சொட்டு சொட்ட போயிக்கிட்டு இருந்துச்சு... அவன் தூங்கிக்கிட்டு இருந்தான்... இதுதான் சரியான சமயமுன்னு...  சாராயம் காச்சுறதுக்கு நேரே மேலே ஒரு பெரிய பறையில மறஞ்சிருந்த நான் தூங்கிக்கிட்டு இருந்த அவன் கழுத்த குறிபார்த்து வேல்கம்ப எறிஞ்சேன்... அது கரக்டா அவன் கழுத்துல பாஞ்சது... அவனிடம் ஒரு அசைவும் இல்ல...சரின்னு கீழ எறங்கிப்போனேன்..." 

"அப்புறம் என்ன பன்னேங்க..."

"அவன் வலியால் துடிக்கலே...கால் கை அசையலே...  மெதுவா பக்கத்துல போயி உடம்ப தொட்டு பாத்தா ஒடம்பு ஜில்லுன்னு இருந்துச்சு... எனக்கு தூக்கிவாரி போட்டுருச்சு... எனக்கு தெருஞ்சு அவன் நாலு அஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடியே செத்து போயிட்டன்..."

வண்டிக்காரன நரிவிரட்டி கொலை செய்யவில்லை என்றால் அவன் எவ்வாறு இறந்தான்?அவன் ஏன் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டான்? அவன் தலை மட்டும் எரிக்கப்பட்டது ஏன்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, September 17, 2010

வண்டிக்காரன் பாகம் 4

வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் 

கராணங்கள் எல்லாம் சரியாகத்தான் ஆனால் நரிவிரட்டியை அணுகுவதில் சிறிய சிக்கல். அவருக்கு நான் யார் என்பது தெரிந்துவிட்டது என்பது என் யூகம். காரணம் அவரின் முதல் பார்வை அவர் கேட்ட கேள்விகள். நானும் இதே ஊரைச்  சேர்ந்தவன்தான். நானும் வண்டிக்காரன் மகன் அசோக்கும் நல்ல நண்பர்கள் சிறுவயதில். நான் அந்த ஊரிலே உள்ள முக்கிய மனிதரின் பிள்ளை. என் அப்பாவுக்கு அசோக்குடன் சேர்வது பிடிக்கவில்லை இருந்தும் எங்கள் நட்பு தொடர்ந்தது. 


வண்டிக்காரன் இறப்பால் என் நட்பை இழந்தேன். பின் நானும் ஆறாவது வெளியூரில் படிக்க மெல்ல என் குடும்பமும் நகரத்தை நோக்கி நகர தொடர்பு இல்லாமல் போனது. மறுபடியும் மாற்றலாகி இப்பொழுது இங்கே. இந்த இடமாற்றம் நான் விரும்பி கேட்டது. என் நண்பனின் அம்மாவுக்காக. நான் இந்த ஊர்க்காரன்... என் அப்பாவின் முகச்சாயல் இதைவைத்து நரிவிரட்டி என்னை கண்டுகொண்டார். நான் போலீஸ் என்று தெரிந்த அவர் என்னை மேலும் கேள்வி கேட்க்காது அங்கிருந்து நகர்ந்தது என் சந்தேகத்தை உறுதிபடுத்தியது.


நடுவில் அசோக்கை பார்க்க முயற்சித்து முடியவில்லை. ஒருமுறை அவரின் அம்மாவின் ஊர்க்கு போனேன். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. அசோக் அம்மா அவனை படிக்க வைப்பதற்காக சென்னையில் ஏதோ சிறிய வேலையில் சேர்ந்து அவர்கள் அங்கு சென்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். பாவம் அசோக்கும் அவன் அம்மாவும். 

அசோக் அம்மா அந்த காலத்திலேயே பத்தாவது படித்தவர்கள். எப்படி வண்டிக்காரனை காதலித்து கல்யாணம்... என்னால் நினைத்து பார்க்கமுடியவில்லை அதுவும் சாராயம் காச்சுரவனை.  ஆனால் வண்டிக்காரன் ஒரு சகலகலா வல்லவன்... நல்ல பாடுவான்... நல்ல மாடு அனைவன் சல்லிக்கட்டில்... நல்ல வண்டி ஓட்டுவான்... ஏதோ ஒரு ஊர்க்கு நாடகம் போடப்போனபோது கண்மணி அம்மா இவனை நல்லவன் என்று நம்பி ஏமாந்திருக்கிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு எவ்வளவோ முயன்றும் திருத்தமுடியவில்லை. பாவம் நிறைய கஷ்ட்டப்பட்டர்கள் பல காரணங்களுக்காக. அவன் செய்யும் எல்லா தவறுக்கும் இவரும் அசோக்கும் பதிக்கபட்டனர்.

வேலையில் சேர்ந்தபிறகு அசோக்கை தேடுவதைத் தீவிரப்படுத்தினேன். இருபது வருடங்களுக்கு முன் என்னுடன் கிராமத்தில் படித்த நண்பனை கண்டுபிடிப்பதில் சற்று சிரமமாக இருந்தது. என் நண்பர்கள் சொல்லி எல்லா சோசியல் நெட்வொர்க் இணையதளத்தில் சேர்ந்தேன். பின் அசோக்கை இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது. காரணம் அவன் wild life photographer ஆகிருந்தான். எல்லா இணையத்திலும் இருந்தான். அவனை தொடர்பு கொண்டு ஒரு முறை கண்மணி அம்மாவையும் அவனையும் பார்க்க போயிருந்தேன். 

அவன் முழுவது மாறிப்போயிருந்தான் அவன் உலகம் குறித்த பார்வை மாறிப்போயிருந்தது. அவன் அவன் அப்பா வண்டிக்காரனை முழுவதும் மறந்துபோயிருந்தான். உண்மைதான் அவன் அப்பா குறித்தா எந்த நல்ல நினைவுகளும் அவனுக்கு இருந்திருக்க வாய்ப்பு குறைவே. அவன் மிகவும் வறுமை கஷ்டம் மட்டுமே பார்த்திருந்தான் இந்த ஊரில் இருந்தபோது. அவன் அம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவனை மிகவும் நல்லவனா வளர்த்திருந்தார். நான் சும்மா கேட்டேன் உன் அப்பாவை கொலை செய்தவரை கொண்டுபிடிக்க வேண்டுமா என்று. அது வீண் முயற்சி மேலும் அவர் ஒன்றும் நல்லவர் இல்லை. அவர் பல குடும்பங்களை கெடுத்தவர் தண்டனை அடைய வேண்டியவரே என்று. எனக்கு ஆச்சிரியத்தை தந்தது.

என் போலீஸ் புத்தியும் என் ஆர்வமும் சும்மா இருக்கவில்லை. கண்மணி அம்மாவிடம் பேசினேன் அசோக் இல்லாதபோது. அவர்கள் சொன்னது என்னை தினுக்குற வைத்தது. நரிவிரட்டிதான் கொலைகாரன் என்றும் ஆனால் என் புருசன் தண்டிக்க படவேண்டியவர். அவரால் நரிவிரட்டியின் குடும்பம் மற்றும் பல குடும்பம் பதிக்க பட்டது. நான் அவரை திருத்த பல முயற்சி எடுத்து தோற்றுவிட்டேன். அதன் நான் நரிவிரட்டின் மேல் கேஸ் கொடுக்கவில்லை. அப்போது எனக்கு என் மகன் அவன் எதிர்காலம் முக்கியம் என்று பட்டது. அதனால் அக்கிராமத்தில் இருந்து நகர்ந்த விட்டேன் என்றார்.

நரிவிரட்டிதான் கொலை செய்தார் என்று எப்படி உறுதியாக சொல்ரிங்கம்மா என்றதற்கு. கொலை நடந்த இடத்தில் கிடைத்ததாக அவர்கள் கொடுத்தது தன் இந்த நரிவிரடியின் நரிபல் தாயித்து. நான் தான் போலீஸ் இடமிருந்து மறைத்து விட்டேன். பாவம் இனிமேலாவது நரிவிரட்டி நல்ல இருக்கட்டும் என்று. இது எதும் அசோக்கிற்கு தெரியாது என்றார்.

என் புருசன் தண்டிக்கபடவேண்டியவர் தான் ஆனால் அவரின் கடைசியில் என்ன நினைத்தார் என்ன பேசினார் அவரின் ஆசை என்னவாக இருந்தது தெரியல அதன் கஷ்டமா இருக்கு என்றார். அதன் நான் இங்கே.

அடுத்த பதிவில் நரிவிரடியிடம் கேக்கலாம் எப்படி கொலை செய்தார் என்று. வண்டிக்காரன் எதாவது சொன்னனா என்று.

Friday, September 10, 2010

வண்டிக்காரன் பாகம் 3
வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் 

"சார் டீ..." டீ பையன் டேபிளில் டீ டம்ளர் வைத்த சத்தத்தில் யோசனையில் இருந்து விடுபட்டார் இன்ஸ்பெக்டர்.

வண்டிக்காரன் கொலை செய்யப்பட்டபோது எனக்கு இந்த டீ பையன் வயசுதான் இருக்கும். எனக்கு கொலைக்கான காரணம் புரியாவிட்டாலும் இழுப்பும் அதன் வேதனையும் புரிந்தது.  வயசு ஆக ஆக கொலை யார் செய்திருக்க கூடும் என்ற கேள்வியும் அது சார்ந்த விசாரணையும் என்னுள் வேறு வேறு கோணங்களில் விரியத் தொடங்கியது அதன் முடிவு நரிவிரட்டி. நரிவிரட்டிதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று நான் நம்ப காரணங்கள் உண்டு.

காரணம் 1 
இந்த ஊரிலே அருவ வேல்கம்பு வேட்டை என்று ஆயுதங்களுடன் பரிச்சயம் உள்ளவர் நரிவிரட்டி. நரிவிரட்டி மலைக்கு வேட்டைக்கு போவதுண்டு. புதரில் ஒளிந்திருந்து எந்த மிருகத்தையும் வேட்டையாடுவதில் கில்லாடி. வேட்டைக்கு போனபோது நரியை வேல்கம்பை கொண்டே குத்தி கொன்றதால்தான் அவருக்கு இந்த பெயர். 

காரணம் 2 
வண்டிக்காரன் ஒரு வீரன் அவனை ஒதைக்குஒத்தை சண்டையிட்டு விழ்த்துவது கடினம். எனக்கு தெரிந்து வண்டிக்காரன் போதைமயக்கதில் இருந்தபோது புதரில் மறைந்திருந்து வேல்கம்பால் நரிவிரட்டி குத்தி சாய்த்திருக்க வேண்டும். பின் வண்டிக்காரனை வெட்டி கூறு போட்டிருக்க வேண்டும். நரிவிரட்டி  காசாப்பு கடை வைத்திருப்பதால் எப்படி ஒரு உடலை துண்டாக்குவது என்று தெரியும். வண்டிக்காரனை துண்டு துண்டாக வெட்டும் அறிவும் தைரியமும் நரிவிரட்டிக்கு மட்டுமே சாத்தியம்.

காரணம் 3 
மேல சொன்னா இரண்டும் நரிவிரடியின் தைரியம் சார்ந்தது. ஆனால் இது கொலைக்கான காரணம். நரிவிரட்டியின் தோட்டம் வண்டிக்காரன் சாராயம் காச்சும் கரட்டின் அடிவாரத்தில் தான் உள்ளது. அதனால் நரிவிரடிக்கு தேவையில்லாத தொல்லைகள். வண்டிக்காரன் போலீசில் மாட்டும்போது எல்லாம் நரிவிரட்டி சாட்சி என்ற பெயரில் அலக்கழிக்கபடுவது வாடிக்கை. அதனால் நரிவிரட்டியின் அன்றாடம் வாழ்க்கை வண்டிக்காரனால் பதிக்கபட்டிருந்தது.

காரணம் 4
இந்த காரணம் தான் நரிவிரட்டி வண்டிக்காரனை கொலை செய்ய முக்கியம் என்று நான் நம்புவது. வண்டிக்காரனின் தொடுப்பு மேகலா நரிவிரட்டியின் மனைவி. நரிவிரட்டிக்கு அவர்கள் தொடர்பு தெரியவந்தா என்பதில் எனக்கு சந்தேகமுண்டு. அப்படி தெரிந்திருந்தால் இது கொலைக்கான வலுவான காரணம் என்று நான் நம்புவது சரியாக இருக்ககூடும்.

இது தவிர என்னிடம் வேறு ஒரு ஆதாரமும் சிக்கியுள்ளது நரிப்பல்லு. நரிவிரட்டி கொன்ன நரியோட பல்ல தாயித்து மாதரி செஞ்சு கழுத்துல அணிந்திருப்பார். அது வண்டிக்காரன் கொலைக்கு அப்புறம் காணவில்லை. அது என்னிடம் சிக்கியுள்ளது. 

ஏன் இந்த ஆதாரங்களை தேடி அப்போது போலீஸ் போகவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமே. வண்டிக்காரனால் போலீஸ்க்கு பல தொல்லை அதனால் கேஸ்யை அவசர அவசரமாக முடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

போலீஸ்க்கு அன்று சிக்காத நரிப்பல்லு எவ்வாறு இன்ஸ்பெக்டரிடம் வந்தது? பார்க்கலாம்.
 

Wednesday, September 1, 2010

வண்டிக்காரன் (பாகம் 2)

வண்டிக்காரன் ஒரு தொடர்.... இதன் முந்தைய பதிவுகள் சிறிது நேரத்தில் பெருசுக்கு மயக்கம் தெளிந்தது. ஆஸ்பத்திரிக்கு போகனுமா என்றதற்கு பெருசு மறுத்தது. ஏதாவது வாங்கிசாப்புடுங்க என்று இன்ஸ்பெக்டர் கொடுத்த  ஐம்பது ரூபாயை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு முதல்முறையாக வாயை திறந்தது பெருசு.

"உங்கள நான் இந்த ஊருல பார்த்ததில்லையே.... நீங்க யாரு?"

யோசித்த இன்ஸ்பெக்டர் "ப்ரெண்டு  ஒருத்தர பார்க்கவந்தேன்" என்றார்.

"உங்கள எங்கேயோ பாத்திருக்கேன்... உங்க முகம் என் மனசுல அப்படியே ஆணி அடிச்சதுபோல பதுஞ்சுருக்கு" தாடையை தடவி யோசிக்க ஆரம்பித்தது பெருசு.

பெருசு கண்டுபிடுச்சுரும்போல என்று ஒரு நிமிஷம் ஆடிப்போனார் இன்ஸ்பெக்டர். என்ன சொல்லலாம் என்று யோசிக்கும்போதே அடுத்த கேள்வி கேட்டது பெருசு.

"என்ன போலீஸ்காரர் வண்டி போல இருக்கு. நீங்க இந்த ஊருக்கு புதுசா வந்த போலீசா ?"

"ஆமாங்க பெருசு... நான் தான் புதுசா இந்த ஊருக்கு வந்திருக்க போலீஸ்..." இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று ஒத்து கொண்டார் இன்ஸ்பெக்டர்.

கேஸ் பத்தி கேக்கலாமா? கேட்டாலும் எந்த உண்மையும் வரப்போறது இல்லை சரியான நேரத்தில் சரியான முறையில் விசாரிக்கலாம் என்று ஒரு நிமிஷம் யோசித்து வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டார். பெருசு எழுந்து நடக்க ஆரம்பிக்க இன்ஸ்பெக்டரும் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினார்.

கொஞ்சதூரம் போயி திரும்பிபார்த்த பெருசு. என் கணக்கு சரியா இருந்தா இந்த போலீஸ் கிட்ட கொஞ்சம் சாக்கரதையா இருக்கணும். இவரு இந்த ஊருக்கு வந்த நோக்கம் என்ன தெரியனும். இவர் வந்த நோக்கம் வண்டிக்காரன் கொலையாளி என்றால்? கொலைகாரன் தப்பிப்பது கஷ்ட்டம். வீட்டுக்கு வெரசா நடந்தார் பெருசு.

பைக்கை ஸ்டாண்டு போட்டுவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த இன்ஸ்பெக்டர் கேஸ் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார். என் யுகங்கள் சரியானால் பெருசு தான் கொலையாளி. ஆனால் அதை எவ்வாறு ஊர்சிதப்படுத்துவது... அதில் நிறைய சிக்கல் இருக்கு. தான் யார் என்று தெரிந்தாலும் கேஸ் மேல் நோக்கி எடுத்து செல்வதிலும் சிக்கல். இது ஒரு மூடிய கேஸ் அரசாங்கமோ மேல்அதிகாரியோ விசாரிக்க சொல்லவில்லை. என்னை பல வருடங்களாக மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம். கட்டாயம் கண்டுபிடிக்கணும். சட்டத்தின் முன் நிறுத்தனுமா? வண்டிக்காரன் கொலை செய்யப்படவேண்டியவனா ? என்னக்கே பல கேள்விகள் உண்டு. ஆனால் எனக்காக... என் ஆத்மா திருப்திக்காக கண்டுபிடிக்கணும். 

எவ்வாறு நரிவிரட்டியாய் மடக்குவது என்று யோசித்தார். நரிவிரட்டி அதுதான் பெருசின் பெயர்.

இந்த இன்ஸ்பெக்டர் யார் ? இந்த நரிவிரட்டி என்ற பெருசு யார்? ஏன் நரிவிரட்டி  வண்டிக்காரனை கொலை செய்ததாக இன்ஸ்பெக்டர் நம்புகிறார்? இன்ஸ்பெக்டருக்கு ஏன் மூடிய கேஸ் மீது அக்கறை?
என பல கேள்விகள் உண்டு உங்களை போல் எனக்கும்.... வண்டி வரும் வரை காத்திருப்போம் ...... ????  

Friday, August 27, 2010

வண்டிக்காரன் (பாகம் 1)
"வண்டிக்காரன் கேஸ் கட்டு எடுத்துட்டு வாங்க ஏட்டு" புதுசா வந்த இன்ஸ்பெக்டர்.

"அய்யா...அந்த கேஸ்ச குளோஸ் பண்ணி இருபது வருசத்துக்கு மேல ஆச்சு... இப்பபோய்..." என்று இழுத்தார் ஏட்டு.

"தெரியும்...போயி எடுத்துட்டு வாங்க..."

கேஸ் கட்டு இருக்கும் அறையில் தேடி கண்டுபிடித்து வந்து கொடுத்தார் ஏட்டு.  இருபதுக்கு மேற்பட்ட வழுக்குகள் அவன் மேல் பதிவாகிருந்தது. கோழி திருடினது... படப்புல தீவச்சது... சாராயம் காச்சுனது... வித்தது... அடுத்தவன் பொண்டாட்டிகூட தொடுப்பு... என்று  சகலவிதமான வழக்கும் அவன் மேல் பதிவாகிருந்தது.  

"ஏட்டு... எவ்வளவு நாளா இந்த ஸ்டேசன்ல இருகீங்க... இந்த கேஸ் பத்தி ஏதாவது தெரியுமா ?"

"நான் கொஞ்சநாளாத்தான் இருக்கேன்... ஆனா இந்த கேஸ் பத்தி ஊர்லே எல்லாரும் பேசிகிட்டுத்தான் இருக்காங்க"

"அப்படி என்னதான் சொல்றங்க இந்த கேஸ் பத்தி?"

"வண்டிக்காரன் ரெம்ப மோசமானவன்... அவன் செத்தது ஊருக்கே புண்ணியமுன்னு சொல்றங்க..."

"அவன யாரு கொன்னாங்கனு யாருக்காவது தெரியுமா ?"

"அவன மலையிலா கண்டம் துண்டமா வெட்டி ஒரு ஓலப்பாயில காட்டி போட்டிருக்காங்க... ஒரு வாரம் கழிச்சுதான் மலையில ஆடு மேக்கிரவன் பாத்து சொல்லி பொணத்த அடையாளம் கண்டு பிடுச்சுருக்காக... அதுல கூட அவன் தலையை கொண்டு போயி தனியா எரிச்சு கம்மாயில கரச்சுடாங்க...அதனால இத காணாப்பொனம்முனு நம்ம டிப்பார்ட்மண்டுளையும் கேஸ்ச குளோஸ் பண்ணிட்டாங்க"

"இந்த கேஸ் பத்தி தெருஞ்சவங்க யாரவது இப்ப இந்த ஊருல இருங்காங்களா ?"

"சார்... வண்டிக்காரன் செத்தவுடன் அவன் பொண்டாட்டி கொளந்தையக் கூட்டிக்கிட்டு பொறந்த ஊருக்கே போயிட்டாங்க... அவங்களாப் பாத்தி எந்த விவரமும் இல்ல... ஆனா அவனப்பத்தி தெருஞ்ச அவனோடு பழகுனவங்க நாலஞ்சு பேரு இப்ப உயிரோடு இருக்காங்க"

"நான் அவங்களா பார்க்கணும் கூட்டிட்டு போகமுடியுமா?" என்று மப்டியில் கிளம்பினார் புதிய இன்ஸ்பெக்டர் யாருக்கும் போலீஸ் என்று தெரிய வேண்டாம் என்று.

"சார் நம்ம இப்ப பாக்கபோறது வண்டிக்காரனோட தொடுப்பு... பேரு மேகல" என்று ஒரு எழுபது என்பது வயது மதிக்கதக்க மூதாட்டியிடம் கூட்டிசென்றார் ஏட்டு.

"யாத்தா... வண்டிக்காரனப்பத்தி உங்களுக்கு தெருஞ்சத சொல்லுங்க... இவருக்கு  அவரப்பத்தி தெரியணுமாம்" ஏட்டு.

"அவரு மகராசன்... எல்லா விசயத்திலயும் நல்ல கெட்டிக்காறாரு..." பெருமூச்சு விட்ட கெழவி தொடர்ந்தாள்.  

"அவரு நல்ல பலசாலி... அவரே ஒத்தைக்கு ஒத்த சந்திக்க முடியாத யாரோ ஒரு பொட்டப்பைய  அவரு போதையில இருக்கப்ப கொன்னுட்டான்... அவனுக்கு நல்ல சாவே வராது"  வண்டிக்காரன் நினைவில் தரையைத் தடவினாள் கெழவி. 

ஏட்டு இன்ஸ்பெட்டரும் அங்கிருந்து நகர்ந்தனர். சார் உங்கள நான் வேணுமுன்னா வண்டிக்காரனோட எடுபுடி பேட்ரி கிட்ட கூட்டிட்டு போறேன் பேசிப்பாக்கலாம் ஏதாவது விஷயம் கிடைக்கும்.

"என்னய்யா பேரு இது பேட்ரி... டார்ச்சு லைட்டுன்னு..."

"சார் இவன் வண்டிக்காரன் சாராயம் காச்சுரதுக்கு அதுல கலக்க பழய பெட்ரி எல்லாம் பொறிக்கி மருந்து உண்டாக்குவானாம் அதான் இந்த பேரு. இந்த ஊர்ல பாதி பேருக்கு அவங்க சொந்த பேரே மறந்துபோச்சு. எல்லாரையும் அவங்க பட்ட பேரு வச்சுதான் கூப்பிடுறாங்க... இப்ப பாருங்க இந்த வண்டிக்காரனோட உண்மையான பேரு யாருக்கும் தெரியால" என்ற ஏட்டு இன்ஸ்பெக்டெரை பேட்ரிகிட்ட கூட்டிச்சென்றார்.

"ராஜா மாதரி இருந்தேன்... கையில எந்நேரமும் காசு இருக்கும்... எங்கள பாத்த எல்லாரும் பயப்புடுவாணுக...ஊர்ல ஒரு கெத்து இருந்துச்சு... வண்டிக்காரண்ணன் செத்தபோரவு ஒரு நாய் கூட மதிக்குறது இல்ல... அட போங்க சார்... அதப்பேசி இப்ப என்ன புண்ணியம்..."  என்று இடத்தை காலி செஞ்சான் பேட்ரி.

"சார் அப்ப நான் வீட்டுக்கு போயி சாப்புட்டுட்டு வரேன் நீங்க ஸ்டேசனுக்கு போங்க"

"வேற யாருக்காவது இந்த கேஸ் பத்தி தெருஞ்சா கேட்டுபாருங்க" வண்டியை கிளப்பினார் இன்ஸ்பெக்டர்.

வண்டிக்காரன் ஞாபகத்திலே வண்டியை ஓட்டிய இன்ஸ்பெக்டர் ஒரு பெருசு மீது மோதி விழுந்தார். ரெண்டு பேருக்கும் பெருசா காயம் இல்ல ஆனாலும் டாஸ்மா சரக்க உள்ள தள்ளியிருந்த பெருசு தான் கீழே விழுந்ததில் மயங்கியிருந்தார்.

பெருசுக்கு மயக்கம் தெளிந்ததா? வண்டிக்காரனை யார் கொலை செய்தது? வேறு எதாவது துப்பு கிடைத்ததா? அடுத்த பதிவில்...
   

Wednesday, August 25, 2010

இந்தியனும் இந்தியாவும்

இதபத்தி எழுத ஒன்னும் இல்ல....கட்டாயம் பாருங்கா....இந்தியனும் இந்தியாவும் வருங்காலம் புரியும்.


http://www.ted.com/talks/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html

Sunday, August 22, 2010

கதை உருவான கதை

இப்பதிவுக்கு நேரே வருவவர்கள் முடிவே முதலாய் படிக்கவும்.

"முடிவே முதலாய்" உருவான கதை கதையை விட சுவாரிசியமானது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்.

முதலில் உண்மையில் என்ன நடந்தது என்றால் என் நண்பர் (1) ஒரு நாள் காலை இன்னும் முப்பது நிமிடத்துக்குள் பத்தாயிரம் என் வங்கி கணக்குக்கு அனுப்ப முடியுமா? என்று ஈமெயில் செய்து கேட்டிருந்தார், நான் என்னிடம் இல்லாததால் என் நண்பனிடம் (2) அனுப்பச்சொல்லி நண்பனுக்கு (1) அனுப்பினேன். இது எல்லாம் நடந்தது பத்து நிமிடங்களுக்குள். இது நடந்து முடிந்தபின்  பேசியே போதுதான் தெரிந்தது என் நண்பன் (2) அவன் வீட்டுக்வங்கி கடனுக்கு உரிய பணத்தை அனுப்பி வைத்தான் என்று. இதில் என்ன கொடுமை என்றால் என்னிடமும் என் நண்பரிடமும்(1) வீட்டுக் கடனுக்கு உரிய பணம் வங்கியில் இருந்தது. ஆனால் என் நண்பனோ (2) அவன் வீடுக் கடனுக்குரிய பணத்தை அனுப்பியிருந்தான் ஏன் என்று கூடக்  கேட்காமல்.

இப்போது கதைக்கு வருகிறேன். இதை கதையாக்க  வேண்டும் என்று நினைத்தேன். கே ஆர் பி செந்தில் வேறு கதையில் ஒரு டுவிஸ்ட்டு வையுங்கள் என்றதால் அதில் சிறிது சுவாரிசியத்தை கூட்ட கதையில் வரும் நாயகன் குமாரின் பணமே அன்பரசின் வழியாக சதீஷ் குமாருக்கே அனுப்புவதுபோல் அமைத்தேன். இந்த முடிவை எழுத மூன்று விதமான முடிவு எழுதி எதுவும் திருப்தியில்லாததால் நான்காவதான ஒரு முடிவை எழுதினேன். அதுதான் இப்போது கதையில் உள்ளது.  கதையில் நண்பர்கள் பெயர் இருக்கும் இடம் எல்லாம் மாற்றினேன். அப்புறம் வெளிநாட்டில் இருக்கும் இருவர் இந்தியாவில் இருக்கும் நண்பனை சுற்றி வருவதாய் கதையை எழுதினேன். கதையில் வருவதுபோல் இந்திய இளஞர் தன்னிறைவு வாழ்வு  என் ஆசை அல்லது நான் என் முதுமையில் வாழவிரும்பும் வாழ்க்கை.

இக்கதைக்கு முதலில் "அதே பணம்" என்று ஒரு தலைப்பு வைத்தேன். முடுச்சு படிக்கும்போதே வாசகர்கள் யூகிக்கக்கூடும் என்று தலைப்பை "முடிவே முதலாய்" என்று மாற்றினேன். மேலும் முதல் என்றாள் வழக்கில் முதலிடு... பணம்..செல்வம் என்று ஒரு பொருள்...இக்கதையிலும் பணம் ஒரு மையப்பொருள் மற்றும் அந்தப் பணம் ஆரம்பிக்கும் இடத்தை திரும்பி வந்து அடைவதால் இது பொருந்தும் என்று நினைத்தேன்.

நான் ஒரு பதிவராக எழுதிய கதையின் முடுச்சைவிட நட்பே கதையில் மேலோங்கியிருந்ததை பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முடிவாக கே ஆர் பி செந்திலுக்கு, உங்களுடன் பேசியபோது பணம் தொடர் உருவானதும் அதற்காக உங்கள் தேடலும் என்னை மலைக்க வைத்தது. பணம் தொடர் உருவான பின்புலத்தை ஒரு தனிப் பதிவாக்க வேண்டுகிறேன்.

Thursday, August 19, 2010

முடிவே முதலாய் !

குயூப் 12B , இருபத்தி ஆறாவது தளம், டெம்பில் டவர்  , லாஸ் ஏஞ்சல்ஸ் @ அமெரிக்கா  

"அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்க இன்று கடைசி நாள்."

இவ்வாறான ஒரு செய்தியை என் கணினி காலண்டர் நினைவுட்டல் செய்துகொண்டிருந்தது. கிளைன்ட் மீட்டிங் முடிச்சிட்டு வந்த என் மரமண்டைக்கு இப்போதுதான் உறைத்தது. மணிபார்த்தேன் 10.30 am என்றது. இப்ப இந்தியாவுல இரவு 11.00, இன்னும் ஒரு மணி நேரத்துல காப்பீட்டு கம்பெனியோட அக்கவுன்னுக்கு ஒன்பதாயிரம் இந்தியன் ரூபாய் அனுப்பி வைக்கணும். என் இந்தியன் வங்கியின் வலைதளத்துக்குள் நுழைந்த எனக்கு என் அக்கவுண்டின் இருப்பு பதினைந்து ஆயிரம் என்றது. இது வீட்டுக்  கடனுக்கு பத்தாம் தேதி கட்ட வேண்டியபணம். இதுல கைவச்சா பத்து நாளைக்குள்ள ஏற்பாடு பண்ணமுடியுமா தெரியல. யோசிக்க நேரம் இல்ல ஏதாவது பண்ணனும்.

எங்க அப்பவேறே ஏன்டா தேவையில்லாம எங்களுக்கு வருஷம் வருஷம் பணம் கட்டுறே. எங்களுக்கு கட்டுன பணத்த சேர்த்து வச்சுருந்தா இந்நேரம் ஒரு லட்சம் சேந்திருக்கும் என்பார். அவருக்கு புரியலே. நான் வேறே ஊர்ல இல்ல... அவங்க ஒடம்புக்கு ஒன்னுனா எங்க போயி பணம் பொரட்டு வாங்க. காப்பீடு இருந்தாலாவது எதையும் எதிர்பார்க்காம ஆஸ்பத்திரியிலாவது சேருவாங்க.

இந்தமாதரியான இக்கட்டுக்கு கைகொடுக்குற ஒரேஆளு அன்பரசு தான். என் பள்ளி நண்பன். சொந்த ஊரிலே வாத்தியார் வேலை பார்க்கிறான். அப்படியா அவன் சொந்த நிலத்துல விவசாயம் செய்யுறான். என் மாதரி அகலக்காலு வைக்காம எல்லாத்தையும் அளவா பண்ணிக்கிட்டிருக்கான். அவனுக்கு பெருசா செலவும் இல்ல. நான் அமெரிக்காவுல இருந்தாலும் என் அவசர தேவைக்கு அவனைத்தான் நாடுவேன். ஆனால் அவன் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்குற ஆளு.  

யோசித்துக் கொண்டிருக்கும்போது யூ கே  வில்  இருக்க என் நண்பன் சதீஷ்யை ஆன் லைனில் பார்த்தேன்.

"டேய் சதீஷ்... எனக்கு அவசரமா ஒன்பதாயிரம் வேனுமுடா"

"சரிடா... நான் அனுப்பி வச்சுட்டு மெயில் அனுப்பிறேன்"

"அவசரம்டா...  கட்டாயம் அனுப்பிவைக்கணும்... சரியா"

"சரிடா"

சதீஷ் என்னை மாதரிதான் வீடு காரு நகைன்னு எல்லாக்  கடனும் வாங்கியிருக்கான். அவனும் என்னப்போலதான் அக்கவுண்டை தொடச்சுதான் வச்சுருப்பான். என்னமோ நல்லா நேரம்  அவன் கிட்ட பணம் இருந்துருக்கு கேட்டவுடனே சரின்னுட்டான்.  ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது. அடுத்த மீட்டிங்  க்கு தேவையான கோப்புகளை கணினியில் வாசிக்க தொடங்கினேன். என் போன் வைபிரேட்ல் மேசையை வட்டம் அடித்து அன்பு... அன்பு... என்றது. 

"என்னடா அன்பரசு... இந்நேரம்... நீ  தூங்கலையா?"

"பத்தாயிரம் என் அக்கவுண்டுக்கு அனுப்பி வையுடா"

"நீ எப்பவுமே அக்கவுண்டுல ஒரு லட்சம் வச்சிருப்பையில... என்னாச்சு?"

"இல்லடா குமார்... நிலம் ஒன்னு ரெசிஷ்ட்டர் பண்ணினேன் அதான்..."

"சரிடா அனுப்புறேன்... பத்து நிமிஷம் கழிச்சு உன் அக்கவுண்டுல பாருடா...."

போனை துண்டித்தேன். என்னைக்குமே கேக்கமாட்டான். வீட்டுக்கடனுக்குரிய பணத்திலிருந்து பத்தாயிரம் அனுப்பிவைத்தேன். 

சிறிது நேரத்தில் சதீஷ் ஒன்பதாயிரம் அனுப்பியதாக இமெயிலில் உறுதிசெய்திருந்தான். என் அக்கவுண்டுக்கு மறுபடியும் போயி அம்மாவுக்கும் அப்பாவுக்குமான மருத்துவா காப்பீட்டுத்தொகை  ஒன்பதாயிரத்தை அனுப்பிவைத்தேன். இப்ப வீட்டுக் கடனுக்கு பணம் ஏற்பாடு பண்ணனும்.

கணினி மேசை, தோட்டவீடு - அன்பகம் ,  வாடிப்பட்டி @ இந்தியா

"ஏங்க... நடுராத்திரி தூங்காம கம்யூட்டரல என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க" தூக்கம் களைந்து எழுந்த அன்பரசின் மனைவி.

"சதீஷ் பத்தாயிரம் வேணுமுன்னு கேட்டு போன்பண்ணியிருந்தான்... என்கிட்ட இல்ல அதான் குமார்கிட்ட வாங்கி சதிஷ்க்கு அனுப்பினேன்"  மனைவிக்கு பதில்ச் சொல்லிக்கொண்டே கணினியை ஆப் செய்தான் அன்பரசு.