விதை நெல் - நெல் ஒன்று.
விதை நெல் - நெல் இரண்டு
"என்ன மாப்புள்ள காலங்காத்தால கோயில் மரத்தடியில ஒக்காந்து இருக்க" மாட்டைப் பிடித்துக்கொண்டு ஒழவுக்கு போன புளிமூட்ட மாமா கேட்டார்.
"வயிரு சரியில்ல வெளிப்பக்கம் வந்தேன்.... அப்படியே குளிச்சுட்டு வீட்டுக்கு போகனும் மாமா" என்று சமாளித்தேன்.
பயிர மாடு மேயக்கூடாதுன்னு வாக்கூடு போட்டு உழவு கலப்பைய கோட்ஏறு பூட்டி தும்பகயிறை இழுத்துப்பிடித்து மாடுக்கு ஈடு கொடுத்து நடந்தார் பளிமூட்ட மாமா.
நெல் நடாத இடங்களில் குதுரவள்ளி விதைக்க மாமா போறாரன்னு நினைக்கிறேன்.
நான் சின்னப்பையனா இருந்தப்போ ஊர்முழுக்க குதுரவள்ளி தான் வெதப்பாங்க... இப்ப எல்லாரும் நெல்லுக்கு மாறிட்டாங்க. நெல்லு நட முடியாத இடங்கள்ள மட்டும் இப்ப குதுரவள்ளி வெதைக்கிறாங்க. குதுரவள்ளிக்கு அவ்வளவாக தண்ணி தேவையில்ல. கருசகாட்டுல வானம்பாறியக்கூட வெதைக்கலாம்.
நெல்லுக்கு மூனு களை எடுக்கனும் ரெண்டு மருந்து அடிக்கனும் ஆனா குதுரவள்ளி வெதச்சா போதும் களையோ எடுக்கவோ மருந்தோ அடிக்கவோ வேணாம்.
குதுரவள்ளிச்சோறு கருவாட்டு கொளம்பு ருசி வாயில இன்னும் அப்படியே இருக்கு. ஏன் எல்லாரும் நெல்லுக்கு மாறினாங்கா தெரியல.
ஒருவேளை நெல்லு பணப்பயிர் அதனால் தான் எல்லாரும் மாறினாங்களா என்னவோ. ஆனா நெல்லுக்கு மூனு ஒழவு அப்பறம் கொளமிதிக்கனும் பரம்படிக்கணும் ஒரு ஏக்கருக்கு ஆறு ஏழு பொம்பள ஆளு நடவு கூலி இருக்கு, நடவுக்கு முன்ன களப்புஉரம் போடனும், மூனு களை எடுக்கனும். அதுகூட பரவாயில்ல நித்தம் தண்ணி பாச்சனும் தண்ணி கரண்டு பில்லு அப்படி இப்படின்னு வரவு செலவு கணக்கு பண்ணாங்கனா எனக்கு என்னமோ குதுரவள்ளி லாபகரமான விவசாயமாக தெரிந்தது. நெல்லுக்கு நடவு, அறுவடை, களை எடுக்க கூலி. மருந்து, உரம் எல்லாம் சேர்த்தால் ஒன்றுமே மிஞ்சாது.
சாமை, கம்பு, செவப்பு சோளம், கேப்பை, தினை, வெள்ள சோளம் எல்லாம் அரிதாகிக் கொண்டிருந்தது. இது எல்லாம் இந்த நிலத்தோட பயிர். நெல்லு தஞ்சாவூர், திருச்சி, சின்னமனூர் மாதரி ஆத்து பாசனம் உள்ள இடங்கள்ள போட வேண்டிய பயிர். அங்க நெல்ல தவிர மத்த வெள்ளம போட முடியாது. அவங்கள பாத்து இவங்க ஏன் மாறினாங்களோ தெரியல.
கேப்பை எல்லாம் கார்த்திகை மாதம் நட்டா மார்கழி பனியில வளர்ந்து குறுத்தள்ளியிரும் ஒரு தண்ணியில பயிர அறுக்கலாம். கம்பு, சோளம் எல்லாம் ஆடி மாசம் வெதச்சா அதுவா வளரும். அறுக்க மட்டும் காட்டுக்கு போனா போதும். சரியா தொன்னூறு நாள் புரட்டாசி மழைக்கு முன்னாடி கதிர் அறுக்களாம்.
மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழாவுக்கு தினை மாவு இடுச்சு மாவிளக்கு எடுப்பாங்க. தினைமாவு அவ்வளவு ருசியா இருக்கும். வெள்ளம் கலக்காம தின்னாலே இனிப்பா இருக்கும்.
"தேனும் தினைமாவும் கலந்துனக்கு நான் தருவேன் சங்கத்தமிழ் மூன்றும்" அவ்வை பாட்டி பாடுனாங்க.
தேனும் தினைமாவும் எல்லா வைட்டமின் இருக்காம்.... குழந்தைகளுக்கு அவ்வளவு நல்ல உணவாம். ஆன உலகம் ஹார்லிக்ஸ் பூஸ்ட்ன்னு போயிக்கிட்டு இருக்கு.
நம்ம ஏதாவது சொன்ன படிச்சவன் பாட்ட கொடுத்தான்..... எழுதுனவன் ஏட்டக்கெடுத்தான்னு ஏளனம் செய்வார்கள். எங்கப்பாவே என்ன ஒதப்பபாரு.
இப்ப யாரும் தினை மாவு இடிக்கிறது இல்ல.. எல்லாரும் அரிசி மாவு தான். எல்லாத்துலையும் அரிசி. கேப்பக்களி, வெள்ளச்சோளச்சோறு, குதுரவள்ளி சோறு, கம்மங்கூழு. அரிசி எல்லத்தையும் புறம்தள்ளியது. வீடுகளை விட்டு பல உணவு வெளியேறியது. அரிசி ஒரு பெருமையின் அடையாளமாக மாறத்தொடங்கியது. அதுல என்ன பெருமையோ தெரியல.
வரும் வாரங்களில் நெல் வளரும்....