சின்னவன இருக்கையில
வெளையாட்டுல ஒரு ஆளு
என்னை அடுச்சுட்டான்னு
பெரிய ஆளுன்னும் பாக்காம
பளாருன்னு அறஞ்சா எங்காத்தா
பதறிப்போனா அந்தாளு
அவ்வளவு கோவக்காரி எங்காத்தா
ஏம்மகன நீ அடுச்ச
உன்ன நான் அடுச்சேன்
அடிக்கு அடி சரியாபோச்சு
இப்ப சொல்லு என்ன தப்பு
செஞ்சான் ஏம்மகன்?
தப்பு எம்மேலயும் இருக்குன்னு
என்னையும் சாத்து சாத்துன்னு
சாத்துனா எங்காத்தா
அவ்வளவு நாணயக்காரி எங்காத்தா
உமிய அவசேலயில எடுத்து
அவ அடுச்ச தடத்துல
சுடுதண்ணி ஒத்தடம்
கொடுத்து அவமடியில
ஒறங்க வச்சா எங்காத்தா
அவ்வளவு பாசக்காரி எங்காத்தா