வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, July 29, 2010

அப்பா - 2

அப்பா ஒரு தொடர். நேராக இங்கு வந்தவர்கள் அப்பா முதல் வாரத்தை படிக்கவும். அப்பா - 1





வெறும் கையேடு வீட்டைவிட்டு வெளியேறினோம் அப்பா சென்னைக்கு வந்ததுபோல. அவள் எதுவும் பேசவில்லை. அப்பாகூட அன்று யாரும் இல்லை. என்னுடன் மற்றொரு ஆத்மா. என்னை மட்டும் நம்பி வந்தவள். அவளுக்கு காத்திருக்க நேரமில்லை, வேறுவழியில்லை. இந்த முடிவை எடுத்தாகவேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்பா புரிந்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். அவர் மீது தவறில்லை. அவர் வாழ்ந்த பார்த்த வாழ்க்கை வேறு. அப்பா மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  

ஆனால் இன்று நிலைமை வேறு. அப்பா வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். என் அண்ணனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு.  அப்பா ஊருக்கு போறாராம் என் நண்பன் போன்பண்ணியிருந்தான். அப்பா ஊருக்கு போகக்கூடாது. அவர் தோற்கக்கூடாது. ஊரில் அவர் பெருமை அப்படியே வாழ்க்கையில் ஜெயித்ததாகவே இருக்க வேண்டும்.

அப்புறம் அப்பாவை ஒரே ஒருமுறை பார்த்தேன். அப்பா குழந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். என் மனைவி மயக்கத்தில் இருந்ததால் அவரை பார்க்கவில்லை. என்னுடனும் அதிகம் பேசவில்லை. என் நண்பன் மூலம் அப்பாவுக்கு சிறு சிறு தேவைகளை செய்து தரச்செய்வேன். நான் செய்வதாக தெரிய வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அப்பா என் உதவியை ஏற்ப்பாரா தெரியாது.  போன் அடித்தது என் மனைவிதான்.

"சொல்லுமா"

"அப்பாவ பாத்திங்களா ?"

"இல்லமா வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்"

"அப்பாவுக்கு பிடுச்ச மொச்சபயிறு கொளம்பு வச்சிருக்கேன். ப்ரிச்ல இருக்கு. நீங்க வந்து ரைஸ் கூகர்ல ரைஸ் வச்சுகங்க. கொளம்பு மைக்ரோவேவ் பண்ணி அப்பாவுக்கு கொடுங்க . நான் பையன ஸ்கூல் இருந்து கூட்டிட்டு வந்திறேன். அப்பறம் சொல்ல மறந்திட்டேன். நீங்க படிக்கிற ரூம்பை அப்பாவுக்கு பெட் ரூமா மாத்திட்டேன். அது அப்பாவுக்கு வெளிச்சமாவும் காத்தோட்டமாவும் இருக்கும்."

"சரிம்மா"  போனை வைத்தேன்.

அப்பாகிட்ட சொல்லணும். என்னை எவ்வளவு பிடிக்குமோ... பையனை எப்படி பிடிக்குமோ... அவ்வளவு உங்களையும் அவளுக்கு பிடிக்கும்ப்பா... நான் காதலிக்கும்போது உங்களை பற்றி உங்கள் வாழ்க்கை பற்றி நிறையே அவளுக்கு சொல்லியிர்க்கேன்ப்பா என்று.

 அப்பா வந்தாரா ? இவனுடன் பேசினாரா ? அவளை பற்றி சொன்னானா? அப்பா வீட்டுக்கு வந்தாரா ? அடுத்தவாரம் பார்க்கலாம்.

Friday, July 23, 2010

அப்பா - 1


தெருமுனை ஆட்டோ ஸ்டண்ட் எதிரிலுள்ள டீ கடையில் அப்பாவுக்காக கடந்த ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன். தெருக்கோடியில்த்தான் அப்பா பார்த்து பார்த்து கட்டிய எங்க வீடு இருக்கு. அப்பா கையை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு போனது... அப்பா சைக்கிள் கத்துக்கொடுத்தபோது கீழே விழுந்தது... நான்கு தெரு தள்ளியிருந்த காதலிக்காக  இதே டீ கடையில் காத்திருந்தது... எல்லாம் இந்தத்தெருவுக்கு தெரியும்.  பத்து வருடம் ஆகிவிட்டது இந்தத்தெருக்கு வந்து எந்த மாற்றமும் இல்லை.

அப்பா பத்தாவது முடிச்சிட்டு வெறும் கையோட சென்னைக்கு வந்து ரயில்வே கேண்டின்ல சேர்ந்து... ரயில்வே பரிச்சை எழுதி... படிப்படியாக முன்னேறியிருக்கார். நான் ஒரளவுக்கு படிப்பேன். அண்ணன் காலேஜ் பெயில். அப்பா யார் யாரையோ பிடித்து... யாருக்கோ காசு கொடுத்து... மலேசியாவுல அண்ணனுக்கு கார்பன்டர் வேலை வாங்கினார்.   எங்க கிராமத்திலிருந்து வரும் எல்லோரிடமும் பெருமையா சொல்லுவார். பெரியவன் வெளிநாட்டில் இருக்கான். சின்னவன் பி. எட் படிக்கிறான். பொண்ணு டீச்சர் ட்ரைனிங் படிக்குது. எப்படியும் இவங்க ரெண்டுபேருக்கும் வாத்தியார் வேலை வாங்கிருவேன் என்று.

என்னை அப்பாவுக்கு ரெம்ப பிடிக்கும். அவரப்போல மூக்கு எனக்கு இருக்கதாலா...?  ஓரளவு படிகிறதாலா ...? ஒரு விசயத்தில விடப்புடிய இருந்து முடிக்கிறதாலா...?  தெரியாது. இவன் என்னைமாதரி என்று எல்லாரிடமும் பெருமையா சொல்லுவார்.  அவர் எதிர் பார்க்கவில்லை என் காதலியை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவேன் என்று.

இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு அன்று இரவு அப்பா சொன்னது. அவங்களும் நம்மளும் வேறே...வேறே.. ஒத்துவராது. நீ வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது. திருத்துவது மிகச்சிரமம், நீ ரெம்ப கஷ்ட்டப்படுவ. நீ கூடிட்டுப்போயி கல்யாணம் முடிச்சது தெரிந்தா  என் மூத்த பையனுக்கும் என் பொண்ணுக்கும் நான் எங்க போயி பொண்ணு மாப்பிள தேடறது... நீ வீட்டைவிட்டு வெளியே போ.

இவன் வீட்டைவிட்டு வெளியே போனானா? அவள் என்னவானாள்?   எதற்க்காக  அப்பாவை பார்க்க வேண்டும் ? நீங்கள் அடுத்தவாரம் வரை காத்திருக்க வேண்டும்.  ஆம்... இது ஒரு தொடர்... அடுத்தவாரமும் அப்பா வருவார்.

Wednesday, July 21, 2010

வருந்துகிறேன்

என் புதிய பதிவு ஜோதிக்கு பின்னூட்டம் விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. நான் மதிக்கும் எப்போதும் எதிர்பார்க்கும் ஜெகநாதனின் விமர்சனமே இந்த வருந்துகிறேனை பதிவு செய்யத்துண்டியது. ஜெகநாதனின் விமர்சனம் கிழே

//
ஜோதி, எண்பதுகளில் வந்த துணுக்குக் கதை போன்ற தொனியில் இருக்கிறது. இதுபோன்ற பாட்டி வைத்திய கதைகள் நிறைய. தாம்பத்யத்தை சாப்பாடு என்ற பேரில் மறைமுகமாக பேசுவது அதர பழசானது. இக்காலத்து பாட்டிகள் கூட காலத்திற்கேற்ப 'அப்டேட்' ஆகிவிடுகிறார்கள்.

இக்காலத்து ஜோதிகள் பற்றி எழுதலாம்.

அப்புறம்.. தலைவி இல்லாவிட்டால் தலைவன் 'வெளியில்' சாப்பிடப் போய்விடுவான், அதைத் 'தடுப்பதற்காகவாவது' தலைவி அடித்துப் பிடித்துக் கொண்டு தலைவனிடம் ஓட வேண்டும் - இதெல்லாம் ஆண்வர்க்க எழுத்து (male text) சுருக்கமாக ஆணாதிக்கச் சிந்தனை என்று கருத வாய்ப்புள்ளது.
//

உண்மையை சொன்னால் இந்த பதிவை எழுதி முடித்தவுடன் இது ஓர் ஆண் ஆதிக்க சிந்தனை சார்ந்ததாக இருக்குமோ என்று. ஆனால் என் நண்பனுடன் விவாதித்தபோது இது ஒரு வாழ்க்கை புரிதலாகவே இருக்கும் என்று தோன்றியது.  

மேலும் நான் எழுதும் எல்லா பதிவிலும் நான் என் சிறு வயதில் பார்த்த கிராமமும் அதன் வாழ்க்கையும் இருக்கிறது. அதன் காரணமே இந்த பதிவிலும் நான் பார்த்த கேட்டே உரையாடலை வாழ்க்கை புரிதலுக்காக  பதிவு செய்தேன்.  மேலும் என் கிராமமும் என் கிராமத்து பெண்களின் வாழ்நிலை இன்னும் மாறவில்லை. மாறவேண்டும் என்பது என் விருப்பம் ஆசை எல்லாம். 

இது ஒரு ஆண் ஆதிக்க சிந்தனை வந்துவிடக்கூடாது என்று கருதியே ஆண் கதாபத்திரம் ஒரு விவாத பொருளாக மட்டுமே வரும். அவன் நல்லவனா? கெட்டவனா? என்று பதிவு செய்யவில்லை.  அப்பத்தாவின் கேள்வியை அவள் எவ்வாறு புரிந்ந்து கொண்டாள் என்பதையும் நான் விரிவாக விவாதிக்க வில்லை. மேலும் இதை வசிக்கும் ஆண் வாசகர்கள் பெண்ணை புரிந்துகொள்ள உதவும். அவர்கள் மேலும் மதிக்கவேண்டும் என்றே பதிவு செய்தேன்.

நிற்க... இந்த விமர்சனத்துக்கு பின்னூட்டத்திலேயே வருத்தம் தெரிவித்து இருக்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  பதிவு எழுதிவிட்டு பத்திரிக்கையில் சிறிய கட்டம் கட்டி வருத்தம் தெரிவிப்பதுபோல் தெரிவிக்க விருப்பம் இல்லை காரணம் என் வருத்தம் மன்னிப்பு பதிவு போல் பெரிதாகவே இருக்கட்டும். கட்டம் கட்டி சிறிதாக்க விருப்பவில்லை.

ஜெகநாதன் உங்கள் விமர்சனம் என்னை எப்போதும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல யோசிக்க உதவியது உதவும் என்று ஆழமாக நம்புகிறேன்.  நான் நிச்சயம் மிகவும் கவனமாக இருப்பேன். அதை உறுதியாகவே சொல்லிக்கொள்கிறேன்.

முடிவாக... என் பெண் வாசகர்கள் அனைவருக்கும் இது ஆண் ஆதிக்க சிந்தனையில் எழுதியது இல்லை. அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் வருந்துகிறேன். 

Monday, July 19, 2010

ஜோதி


புருசனிடம் கோவித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்திருந்த புதுசா கல்யாணமான ஜோதி தான் வாங்கிவந்திருந்த வெற்றிலைய அப்பத்தாவுக்கு கொடுத்தாள்.

"ஏண்டி, சின்ன... சின்ன... விசயத்துக்கெல்லாம் சண்டைபோட்டு இங்க வந்திருர?".

"அப்பத்தா, நாலு நாளைக்கு பட்டினியாக் கெடந்ததான் அவருக்கு புத்தி வரும்".

"உன் புருசன் பட்டினிகிடந்தா  பரவாயில்ல... வெளியில கிடைக்குதுன்னு போயிட்டா என்னடி பண்ணுவா? பாத்துடி... எப்பவுமே புருசன உன் கைபக்குவதிலையே வச்சிருக்கணும்".


ஊரிலிருந்து வந்த மகளுக்கு பிடித்த சுண்டல் கொளம்பு வைத்துக்கொண்டிருந்தாள் ஜோதியின் அம்மா.

"அம்மா, நான் போயிட்டு வரேன்".

"என்னாடி வந்ததும் வராததும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு பறக்கிற, இருந்து சாப்பிட்டு காலையில போகலாமில்ல?".

"இல்லம்மா நான் இப்ப கிளம்பினாத்தான், அவரு தூங்கிறதுக்கு முன்னாடி  வீட்டுக்கு போகமுடியும்".

இதை நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் பொக்கைவாய் அப்பத்தா.

Friday, July 16, 2010

புளியமரமும் பொம்பளப்பேயும்


ஊருக்கு போகும் கடைசிப்பஸில் ஏறி அமர்ந்தான் சுப்பு என்ற சுப்பிரமணி. பஸ் கிளம்ப இன்னும் அரை மணிநேரம் இருந்தது. சுப்பு படிக்கட்டையே வெறித்துக்கொண்டு யாருக்கோ காத்திருப்பது போல் கவலை ரேகை படிய கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்தான். 

அவன் யோசனையில் இருந்து விடுபடும் முன் அவனை பற்றி ஒரு சிறிய விளக்கம். சுப்பு சொந்தஊருலேயே +2 வரைக்கும் படிச்சுட்டு காலேஸ் முதல் ஆண்டு சேர்ந்திருக்கிறான். அவனைப்பத்தி சொல்லிட்டு ஊரப்பத்தி சொல்லன்னா பேயாட்டம் போடுவான். ஏற்க்கனவே சாரு பயங்கரமா கவலையில இருக்காரு.   

கரட்டுப்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள   ஒரு அழகிய கிராமம். அக்கிரமத்தின் மூன்று பக்கமும் கரடு  ஓர் அரண்போல் இருக்கும்.   கரட்டுப்பட்டிக்கு பஸ் கிடையாது. கரட்டுக்குப் பக்கத்தில இறங்கி ஒரு கிலோ மீட்டர் நடந்துதான் ஊருக்கு போகணும். ஊர்க்கு போற வழில ஓடையும் ஓடையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்த புதரும் மரமும் இருக்கும். ஓடையில் வருஷம் ஆறு மாசம் தண்ணி இருக்கும் பார்ப்பதற்க்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். வண்டுகளின் ரீங்காரமும் தவளையின் கொர்...கொர்...சப்தமும் எப்போதும் கேட்க்கும். இந்த ரம்மியம் எல்லாம் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ தான். அப்படியே மேலே விவரித்த காட்சிகள் நடுஇரவில் எப்படியிருக்கும். தனியா கரட்டுக்கு பக்கத்துல பஸ்ல இறங்கி ஓடவழியா நடந்து ஊருக்கு போன எப்படியிருக்கும் மனத்திரையில் ஓடவிடுங்க அப்பறம் புரியும் நம்மாளு ஏன் கவலையா கன்னத்துல கையவச்சுக்கிட்டு இருக்காருன்னு.

அவன் ஊரைச்சேர்ந்த ஒருத்தரும் வராமலே பஸ் கிளம்பியது அவன் கவலை குறித்து எந்த கவலையும் இல்லாமல். அவன் சிறுவயதில் கேட்ட பேய், பிசாசு, கொல்லிவாயு, பேயோட்டுனது, ஓட்டுன பேய் புளியமரத்து ஆணியில அடிச்சுது எல்லாம் ஞாபகத்தில் வந்தது.  பஸ் அவனை கரட்டின் அடிவாரத்தில் இறக்கிவிட்டு பஸ் வெளிச்சம் புள்ளியாகி பின் மறைந்தது. ஒரே இருட்டு அவன் மனசைப்போல.

மனசுல எல்லாச்சாமியையும் நினைத்துக்கொண்டு ஓடையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். ஓடையக்கடந்தா அவங்க தோட்டம். அங்க யாராவது இருப்பாங்க குறைந்தபச்சம் நாயாவது இருக்கும். தைரியத்தை வரவழைத்துகொண்டு நடந்தான். பேயோட்டுன  புளியமரத்தையும்,  பொம்பள விழுந்து செத்த கிணற்றையும்   கடந்துதான் அவன் தோட்டத்துக்கு போகமுடியும்னு நினைத்தபோது வந்தா தைரியம் காணமல் போனது.

பொம்பள செத்த கிணத்திலிருந்து தண்ணி வாய்க்கால் வழியாகப் போகும் சப்தம். நெருங்க நெருங்க யாரோ நக்கி நக்கி தண்ணி குடிக்கும் சப்தம்.  பொம்பள பேயி, கன்னிப்பையன் வேறு, இருட்டில் தண்ணிகுடிக்கும் இடத்திலிருந்து இரண்டு கண்கள் அவனையே பார்த்தது. தைரியத்தை வரவழைத்து வேகம் கூட்டினான். அந்த உருவம் அவன் மீது தாவி அவன் முகத்தை நக்கியது. பெரும் குரலெடுத்து அலறினான். கண்ணை திறந்தால் அவன் தோட்டத்து  நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவனை சுற்றி வந்தது.

Friday, July 9, 2010

வெள்ளத்தாயி



   என்னாடி காளியம்மா....புள்ளப்பெத்து முழுசா முப்பது நாக்கூட ஆகல அதுக்குள்ள தலையில இடுப்புல கையிலன்னு சொமைய தூக்கிக்கிட்டு காட்டுக்குப்போறே. என்ன என்னாக்கா  பண்ணச்சொல்லிரிங்க அந்த மனுஷன் கோழிகூவுரதுக்கு முன்னையே கலப்பையே தூக்கிக்கிட்டு உழுகப்போயிட்டாரு. அதான் மாட்டுக்கு தண்ணி, நாயுக்கு கஞ்சி,  அவருக்கு சாப்பாடுன்னு  எல்லாத்தையும் நானே எடுத்துக்கிட்டு போறேன். 

   சரி புள்ளய எங்கடி? அதுக்கு பாலக்குடுத்து உறங்க வச்சுட்டு வந்திருக்கேன்.  கொஞ்ச நேரம் கழிச்சு எங்க ஆத்தா தூக்கிட்டு வரும். சரிக்கா... காட்டுல நாலுபேறு கள எடுக்குராங்க. தலச்சொம வேறே கனக்குது நான் வரேன் என்று பெரிய எட்டு வச்சு நடந்தா  காளியம்மா.  

   கோரப்புல்லும் நெல்லுப்பயிரும் பாக்க ஒண்ணுபோல  இருக்கும் கோரப்புல்ல புடுங்கிரதுக்கு பதிலா நெல்ல புடிங்கி போட்டுராதிங்க என்று சொல்லிக்கொண்டே காட்டுக்குள் நொலஞ்சா  காளியம்மா.  கொண்டுவந்த தண்ணிய மாட்டுக்குழுதானியில ஊத்திட்டு, கஞ்சிய நாய்க்கல்லுல ஊத்திட்டு, சாப்பாட்ட தாவாரத்து கம்புல தொங்கவிட்டா. சும்மாடு கூட்டியிருந்த சேலையில புள்ள வந்தா தூங்குறதுக்கு பூவரசமரத்தில தொட்டில் கட்டிட்டு வயல்ல இறங்கி கோரப்புல்ல புடுங்கத்  தொடங்கினாள்.

   நீ ஊரக்கூட கடந்திருக்க மாட்டா அதுக்குள்ள அழுக  ஆரம்பிச்சிட்டான் ஒம்புள்ள. புள்ளயவாங்கி பசியமத்தி ஆத்தாகிட்ட கொடுத்து தொட்டியில போடச்சொன்னா காளியம்மா. வெயில்த்தெரியாம இருக்க ஊர்க்கத பேசிக்கொண்டே தன்னோட நெரையில இருக்கும் புல்லைப்புடுங்க ஆரம்பித்தார்கள்.

   அந்த மனுஷன் உழது முடிசுட்டாரு. ஏரேக்கலட்டி மாட்டக்கட்ரதுக்குள்ள சாப்பாடு எடுத்து வக்காட்டி மூக்குமேல கோவம்வரும் புள்ள அழுதா பாத்துக்க வெள்ளத்தாயி  என்று புருசனுக்கு சாப்பாடு போடப்போனாள் காளியம்மா.  தலமறையிரதுக்குள்ள புள்ள அழுக ஆரம்பித்தான். புல்லுப்புடுங்கின கையக்கழுவிட்டு புள்ளயத்தூக்கி பசியமத்த ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி.

   ஏண்டி புள்ள அழுகுறது கூடத்தெரியாம அப்படி என்னடி பேச்சு புருசன்கூட என்றாள் களயெடுத்துக்கொண்டிருந்த கெழவி. அப்பத்தா உனக்கு தெரியாததா... அவ புள்ள செத்து இருபது நாக்கூட ஆகல பால்கட்டிக்கிட்டு கஷ்ட்டபடுறா அதான் அவ எம்புள்ளைக்கு பால்க்குடுக்கட்டுமுன்னு விட்டுடேன் என்றாள் காளியம்மாள்.

"அத்தை அடிச்சாளோ அரளிப்பூ செண்டால .....
மாமா  அடிச்சாரே மல்லியப்பூ செண்டால .....
அடிச்சரே சொல்லியழு....ஆராரோ...ஆரிராரோ..."

தாலாட்டு பாடிக்கொண்டிருந்தாள் வெள்ளத்தாயி.





Monday, July 5, 2010

ஆதலால் காதல் செய்தேன்

   எத்தருணத்தில் என்னுள் அவன் வந்தான் விளங்கவில்லை. தமிழ் வாத்தியார் குறள் வாசிக்கச் சொன்னபோது 

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

என்று  தலை சாய்த்து ஒரு  சிறுபுன்னகை உதிர்த்தானே அப்போதா?  எப்போதும் கண்களைப்  பார்த்து மனதோடு பேசுவானே அதனாலா? இதுவரை எனை யாரும் இவ்வளவு ஆழமாக பார்த்ததில்லை அதனாலா? புன்னகை தவழ எப்போதும் மெதுவாக பேசுவானே அதனாலா? எதனால் இன்றுவரை புரியவில்லை. ஈர்த்தானா? ஈர்க்கப்பட்டேனா? எல்லாம் ஒன்றுதான். பேருந்து நெரிசலில்  அவன் மட்டும் எங்கிருந்தாலும் என்கண்ணில் பட்டானே ஏன்? துளித்துளியாய் நனைத்தானா? அலையாய் அடித்தானா? எதுவானாலும் நான் நனைந்தது உண்மை. 

   அவனை எனக்கு எவ்வளவு பிடிக்கும். மழை அளவுக்கு. தூங்கறப்ப அம்மாவின் தாளிக்கும் வாசனை அளவுக்கு.  அவனுக்கு பிடித்ததெல்லாம் எனக்கும் பிடித்ததானதே அந்த அளவுக்கு. சாமியக்கூட பரிச்சைக்கு முன்தான் நினைத்துக்கொள்வேன். அவனை மட்டும்தான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். நான் குறைவாக பேசியதும் அவனோடுதான். பேசாமேலே அதிகம் பேசிக்கொண்டதும் அவனோடுதான்.

   அவன் காதல் சொன்னதில்லை....காதல் குறித்தும் பேசியதில்லை. காதல் செய்தான். மழையை காதலித்தான் தூறல் ஆனேன். காட்டை காதலித்தான் இலையானேன். விலங்குகளை காதலித்தான் பூனையாய் தவழ்ந்தேன். பறவையை காதலித்தான்  பட்டாம்பூச்சியாய் பறந்தேன்.  அவனால் என் பார்வையின் நீளஅகலம் கூடியது மனம் விசாலமானது.  ஆதலால் காதல் செய்தேனா?

   காதல்... மனசா? வயதா? உடம்பா?  எதுவானாலும் உணர்வு உண்மை. காதல் தப்புன்னு சொன்னாக்கூட காதல் குறித்த எண்ணம் அன்பு வருத்தம்  அழுகை சந்தோசம் எல்லாம் என் உணர்வு. அது எப்போதும் என்னுடன் இருப்பது. அது எப்படி பொய்யாக முடியும்.  சரி... தவறு... யார் முடிவு செய்தது? சாமியா? சாமியாரா? சாமியும் சாமியாரும் கூட பொய்யாகலாம். சாமி சாமியார் காதல் கொண்டது உண்மை. 

   அவன் எனக்கானவன் எதனால் முடிவுசெய்தேன். கடிதங்கள் எழுதியபோதா? கடிதங்களுக்காக காத்திருந்தபோதா? இல்லை அவன் கடிதங்களை படித்துக்கொண்டே அவனோடும் அவன் நினைவுகளோடும் உறங்கினேனே அப்போதா? அவன் வாசித்த புத்தகத்தை வசித்தபோதா? வரிகளுக்கு நடுவே கண்ணை மூடி இதை அவனும் வாசித்திருப்பான் என்று என்னைமறந்து இழுந்து சிரித்தேனே அப்போதா?

   அவன்மேல் எப்போதும் கோபம் வரவில்லை ஏன்? என் காதலை மறுத்தபோதுகூட. எனக்கு விருப்பு வெறுப்பு இல்லாத அன்பு  சொல்லிக்கொடுத்ததாலா?  எதிர்பார்ப்பில்லாத அன்பு அவன்தானே சொல்லிக்கொடுத்தான். எப்படி எதிர்பார்த்தேன்? அவன் மறுத்ததால் அன்பு செய்வது நிற்க்கப்போவதில்லை. மழையின்  துளியாய்... காட்டின்  இலையாய்... பறவையின் சிறகாய்... மண்ணின் வாசனையாய்... எதிர்பார்ப்பு இல்லாத காதல் எல்லா இடத்தும் செய்வேன்.