வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, July 21, 2010

வருந்துகிறேன்

என் புதிய பதிவு ஜோதிக்கு பின்னூட்டம் விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. நான் மதிக்கும் எப்போதும் எதிர்பார்க்கும் ஜெகநாதனின் விமர்சனமே இந்த வருந்துகிறேனை பதிவு செய்யத்துண்டியது. ஜெகநாதனின் விமர்சனம் கிழே

//
ஜோதி, எண்பதுகளில் வந்த துணுக்குக் கதை போன்ற தொனியில் இருக்கிறது. இதுபோன்ற பாட்டி வைத்திய கதைகள் நிறைய. தாம்பத்யத்தை சாப்பாடு என்ற பேரில் மறைமுகமாக பேசுவது அதர பழசானது. இக்காலத்து பாட்டிகள் கூட காலத்திற்கேற்ப 'அப்டேட்' ஆகிவிடுகிறார்கள்.

இக்காலத்து ஜோதிகள் பற்றி எழுதலாம்.

அப்புறம்.. தலைவி இல்லாவிட்டால் தலைவன் 'வெளியில்' சாப்பிடப் போய்விடுவான், அதைத் 'தடுப்பதற்காகவாவது' தலைவி அடித்துப் பிடித்துக் கொண்டு தலைவனிடம் ஓட வேண்டும் - இதெல்லாம் ஆண்வர்க்க எழுத்து (male text) சுருக்கமாக ஆணாதிக்கச் சிந்தனை என்று கருத வாய்ப்புள்ளது.
//

உண்மையை சொன்னால் இந்த பதிவை எழுதி முடித்தவுடன் இது ஓர் ஆண் ஆதிக்க சிந்தனை சார்ந்ததாக இருக்குமோ என்று. ஆனால் என் நண்பனுடன் விவாதித்தபோது இது ஒரு வாழ்க்கை புரிதலாகவே இருக்கும் என்று தோன்றியது.  

மேலும் நான் எழுதும் எல்லா பதிவிலும் நான் என் சிறு வயதில் பார்த்த கிராமமும் அதன் வாழ்க்கையும் இருக்கிறது. அதன் காரணமே இந்த பதிவிலும் நான் பார்த்த கேட்டே உரையாடலை வாழ்க்கை புரிதலுக்காக  பதிவு செய்தேன்.  மேலும் என் கிராமமும் என் கிராமத்து பெண்களின் வாழ்நிலை இன்னும் மாறவில்லை. மாறவேண்டும் என்பது என் விருப்பம் ஆசை எல்லாம். 

இது ஒரு ஆண் ஆதிக்க சிந்தனை வந்துவிடக்கூடாது என்று கருதியே ஆண் கதாபத்திரம் ஒரு விவாத பொருளாக மட்டுமே வரும். அவன் நல்லவனா? கெட்டவனா? என்று பதிவு செய்யவில்லை.  அப்பத்தாவின் கேள்வியை அவள் எவ்வாறு புரிந்ந்து கொண்டாள் என்பதையும் நான் விரிவாக விவாதிக்க வில்லை. மேலும் இதை வசிக்கும் ஆண் வாசகர்கள் பெண்ணை புரிந்துகொள்ள உதவும். அவர்கள் மேலும் மதிக்கவேண்டும் என்றே பதிவு செய்தேன்.

நிற்க... இந்த விமர்சனத்துக்கு பின்னூட்டத்திலேயே வருத்தம் தெரிவித்து இருக்கலாமே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  பதிவு எழுதிவிட்டு பத்திரிக்கையில் சிறிய கட்டம் கட்டி வருத்தம் தெரிவிப்பதுபோல் தெரிவிக்க விருப்பம் இல்லை காரணம் என் வருத்தம் மன்னிப்பு பதிவு போல் பெரிதாகவே இருக்கட்டும். கட்டம் கட்டி சிறிதாக்க விருப்பவில்லை.

ஜெகநாதன் உங்கள் விமர்சனம் என்னை எப்போதும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல யோசிக்க உதவியது உதவும் என்று ஆழமாக நம்புகிறேன்.  நான் நிச்சயம் மிகவும் கவனமாக இருப்பேன். அதை உறுதியாகவே சொல்லிக்கொள்கிறேன்.

முடிவாக... என் பெண் வாசகர்கள் அனைவருக்கும் இது ஆண் ஆதிக்க சிந்தனையில் எழுதியது இல்லை. அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் வருந்துகிறேன். 

6 comments:

 1. முனியாண்டி..*ஜோதி* பதிவில் முழுமையான ஆணாதிக்கம் இல்லை.ஜெகாவும் அப்படியானவர் இல்லை.பாட்டி சொன்ன விஷயத்தில் அன்பும் குடும்ப இறுக்கமுமே இருக்கிறது.பயம் காட்டிச் சாமி கும்பிடச் சொல்கிற ஒரு குழந்தை போல ஒரு பாத்திரம்தான் ஜோதி !

  ReplyDelete
 2. சரியான புரிதலுக்கு நன்றி ஹேமா. ஜெகா நன்கு அறிவேன். என் எழுத்தின் மாற்றத்திற்கு அவரும் ஒரு காரணம். இது என் நிலைப்பாடு குறித்த விளக்கமே. அன்புக்கு நன்றி.

  ReplyDelete
 3. நானும் படித்தேன் அந்த பதிவை.. ஆனால் அதில் எந்த ஆணாதிக்கமும் இருப்பதாக தெரியவில்லையே..

  ReplyDelete
 4. இதில் வித்தியாசமா சொல்ல ஒன்னுமில்லை முனி. இது பொதுவா பெண்களுக்கு இருக்கக்கூடிய பயம்தான் .பாசந்தான் .

  ReplyDelete
 5. அது ஒரு புனைவு.. அதற்கு இவ்வளவு முக்கியமான பின்னூட்டம் தேவையில்லை..
  இதையெலாம் தவிர்த்துவிட்டு அடுத்த கதை எழுதுங்கள் நண்பா...

  ReplyDelete
 6. அன்பு முனியாண்டி,
  தங்களுக்கும் இது (ஜோதி) ஆண்சார் சிந்தனையை கொண்டிருக்கிறது என்ற எண்ணம் பதிவிடும்போதே இருந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி!
  எழுத்து மேலான வசீகரம் சிலதருணங்களில் தர்க்கரீதியான கோட்பாட்டுகளை ஒதுக்கி வைக்க வைத்துவிடுகிறது. படைப்பை வெளியிடுவதே முக்கியமாக நிறுவலாக தோன்றுகிறது. இது படைப்பாளியின் ஒரு முகம்தான்.
  நாம் வாழும் காலத்தை, நடப்புகளை, புது நிமித்தங்களை, அனுபவங்களை எந்த பாகுபாடுமில்லாமல் பதிவிடும் வசதியுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். இது முன்னெப்போதும் இல்லாதது. படைப்பு சுதந்திரம் ஆகாசமாயிருக்கிறது இங்கு. நம்மை நிறுவுவது நாம் எழுதும் எழுத்துதான். எழுத்துவெளியில் நம் இயல்பு எப்படியிருக்கிறதோ அப்படியே நாமும் ஆகிவிடுகிறோம். நாம் உள்வாங்கிய அனுபவத்தை அப்படியே பதிவது ஒருவகை - அது செய்தித்தனமான எழுத்து.
  அந்த அனுபவத்தோடு பிற அனுபவங்கள், வாசிப்புகள், சுயதர்க்கம் போன்றவற்றோடு பின்னிப் பிணைந்து எழுவது கலைப்படைப்பாக வெளிவருகிறது. இது போன்ற பரீட்சார்த்த வகை எழுத்துக்களை நீங்கள் செய்யலாம்.

  ஜோதி படைப்பில் பெண்ணை (ஜோதியை)அடையாளப்படுத்துவது எது?
  - ஜோதி என்ற பெயர், புருஷனிடம் கோவித்தால் பிறந்த வீடு போகுபவள், பாட்டிக்கு வெற்றிலை வாங்கி வருபவள் மற்றும் புருஷனின் தனிமைக்கு பயப்பவள். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். இதன் மூலம் ஒரு செய்தியை மட்டும் பகிர்ந்துகொள்ளாமல் (அல்லது புருஷனிடம் மனைவிகள் கோவித்துக் கொள்ளக்கூடாது; அப்படியே கோவித்தாலும் அவனை விட்டுப் பிரியக் கூடாது என்ற உள்ளுறை உபதேசம்) அதோடு நம் திணிபுகள், கருத்துக்களையும் சேர்த்து நடைமுறைக்கு தகுந்த ஒரு கருத்தை சொல்லியிருக்கலாமோ?

  இன்னும் சில காலம் கழித்து ஜோதி வேறு மாதிரி யோசிப்பாள் என்று நம்புகிறேன். ஜோதி என்ற பெயர் பால்வேறுபாடு காணமுடியாதது என்பதால் ஜோதிகள் ஆண்களா இருக்கும் பட்சத்தில் ஆண் ஜோதிகளும் மாற்றி யோசிப்பார்கள் என நம்பலாம் :))

  புரிதலுக்கு நன்றி முனி!

  ReplyDelete