"அய்யா...அந்த கேஸ்ச குளோஸ் பண்ணி இருபது வருசத்துக்கு மேல ஆச்சு... இப்பபோய்..." என்று இழுத்தார் ஏட்டு.
"தெரியும்...போயி எடுத்துட்டு வாங்க..."
கேஸ் கட்டு இருக்கும் அறையில் தேடி கண்டுபிடித்து வந்து கொடுத்தார் ஏட்டு. இருபதுக்கு மேற்பட்ட வழுக்குகள் அவன் மேல் பதிவாகிருந்தது. கோழி திருடினது... படப்புல தீவச்சது... சாராயம் காச்சுனது... வித்தது... அடுத்தவன் பொண்டாட்டிகூட தொடுப்பு... என்று சகலவிதமான வழக்கும் அவன் மேல் பதிவாகிருந்தது.
"ஏட்டு... எவ்வளவு நாளா இந்த ஸ்டேசன்ல இருகீங்க... இந்த கேஸ் பத்தி ஏதாவது தெரியுமா ?"
"நான் கொஞ்சநாளாத்தான் இருக்கேன்... ஆனா இந்த கேஸ் பத்தி ஊர்லே எல்லாரும் பேசிகிட்டுத்தான் இருக்காங்க"
"அப்படி என்னதான் சொல்றங்க இந்த கேஸ் பத்தி?"
"வண்டிக்காரன் ரெம்ப மோசமானவன்... அவன் செத்தது ஊருக்கே புண்ணியமுன்னு சொல்றங்க..."
"அவன யாரு கொன்னாங்கனு யாருக்காவது தெரியுமா ?"
"அவன மலையிலா கண்டம் துண்டமா வெட்டி ஒரு ஓலப்பாயில காட்டி போட்டிருக்காங்க... ஒரு வாரம் கழிச்சுதான் மலையில ஆடு மேக்கிரவன் பாத்து சொல்லி பொணத்த அடையாளம் கண்டு பிடுச்சுருக்காக... அதுல கூட அவன் தலையை கொண்டு போயி தனியா எரிச்சு கம்மாயில கரச்சுடாங்க...அதனால இத காணாப்பொனம்முனு நம்ம டிப்பார்ட்மண்டுளையும் கேஸ்ச குளோஸ் பண்ணிட்டாங்க"
"இந்த கேஸ் பத்தி தெருஞ்சவங்க யாரவது இப்ப இந்த ஊருல இருங்காங்களா ?"
"சார்... வண்டிக்காரன் செத்தவுடன் அவன் பொண்டாட்டி கொளந்தையக் கூட்டிக்கிட்டு பொறந்த ஊருக்கே போயிட்டாங்க... அவங்களாப் பாத்தி எந்த விவரமும் இல்ல... ஆனா அவனப்பத்தி தெருஞ்ச அவனோடு பழகுனவங்க நாலஞ்சு பேரு இப்ப உயிரோடு இருக்காங்க"
"நான் அவங்களா பார்க்கணும் கூட்டிட்டு போகமுடியுமா?" என்று மப்டியில் கிளம்பினார் புதிய இன்ஸ்பெக்டர் யாருக்கும் போலீஸ் என்று தெரிய வேண்டாம் என்று.
"சார் நம்ம இப்ப பாக்கபோறது வண்டிக்காரனோட தொடுப்பு... பேரு மேகல" என்று ஒரு எழுபது என்பது வயது மதிக்கதக்க மூதாட்டியிடம் கூட்டிசென்றார் ஏட்டு.
"யாத்தா... வண்டிக்காரனப்பத்தி உங்களுக்கு தெருஞ்சத சொல்லுங்க... இவருக்கு அவரப்பத்தி தெரியணுமாம்" ஏட்டு.
"அவரு மகராசன்... எல்லா விசயத்திலயும் நல்ல கெட்டிக்காறாரு..." பெருமூச்சு விட்ட கெழவி தொடர்ந்தாள்.
"அவரு நல்ல பலசாலி... அவரே ஒத்தைக்கு ஒத்த சந்திக்க முடியாத யாரோ ஒரு பொட்டப்பைய அவரு போதையில இருக்கப்ப கொன்னுட்டான்... அவனுக்கு நல்ல சாவே வராது" வண்டிக்காரன் நினைவில் தரையைத் தடவினாள் கெழவி.
ஏட்டு இன்ஸ்பெட்டரும் அங்கிருந்து நகர்ந்தனர். சார் உங்கள நான் வேணுமுன்னா வண்டிக்காரனோட எடுபுடி பேட்ரி கிட்ட கூட்டிட்டு போறேன் பேசிப்பாக்கலாம் ஏதாவது விஷயம் கிடைக்கும்.
"என்னய்யா பேரு இது பேட்ரி... டார்ச்சு லைட்டுன்னு..."
"சார் இவன் வண்டிக்காரன் சாராயம் காச்சுரதுக்கு அதுல கலக்க பழய பெட்ரி எல்லாம் பொறிக்கி மருந்து உண்டாக்குவானாம் அதான் இந்த பேரு. இந்த ஊர்ல பாதி பேருக்கு அவங்க சொந்த பேரே மறந்துபோச்சு. எல்லாரையும் அவங்க பட்ட பேரு வச்சுதான் கூப்பிடுறாங்க... இப்ப பாருங்க இந்த வண்டிக்காரனோட உண்மையான பேரு யாருக்கும் தெரியால" என்ற ஏட்டு இன்ஸ்பெக்டெரை பேட்ரிகிட்ட கூட்டிச்சென்றார்.
"ராஜா மாதரி இருந்தேன்... கையில எந்நேரமும் காசு இருக்கும்... எங்கள பாத்த எல்லாரும் பயப்புடுவாணுக...ஊர்ல ஒரு கெத்து இருந்துச்சு... வண்டிக்காரண்ணன் செத்தபோரவு ஒரு நாய் கூட மதிக்குறது இல்ல... அட போங்க சார்... அதப்பேசி இப்ப என்ன புண்ணியம்..." என்று இடத்தை காலி செஞ்சான் பேட்ரி.
"சார் அப்ப நான் வீட்டுக்கு போயி சாப்புட்டுட்டு வரேன் நீங்க ஸ்டேசனுக்கு போங்க"
"வேற யாருக்காவது இந்த கேஸ் பத்தி தெருஞ்சா கேட்டுபாருங்க" வண்டியை கிளப்பினார் இன்ஸ்பெக்டர்.
வண்டிக்காரன் ஞாபகத்திலே வண்டியை ஓட்டிய இன்ஸ்பெக்டர் ஒரு பெருசு மீது மோதி விழுந்தார். ரெண்டு பேருக்கும் பெருசா காயம் இல்ல ஆனாலும் டாஸ்மா சரக்க உள்ள தள்ளியிருந்த பெருசு தான் கீழே விழுந்ததில் மயங்கியிருந்தார்.
பெருசுக்கு மயக்கம் தெளிந்ததா? வண்டிக்காரனை யார் கொலை செய்தது? வேறு எதாவது துப்பு கிடைத்ததா? அடுத்த பதிவில்...