வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, August 15, 2010

பாத்திரம் அறிந்து


யோகா வகுப்பறை முப்பது பேர் இருக்கும் நான் ஒருத்தன் தான் இந்தியன். யோகா என்னமோ நம்ம ஊரு விஷயமா இருந்தாலும் இங்கதான்  நெறைய பேர் யோகா செய்யுறாங்க. லாஸ் ஏஞ்சல்ஸ்ல பிக்ரம் யோகா மட்டும் பத்து இடத்துல இருக்கும். யோகா டீச்சர் சைனாக்காரி அமெரிக்காவிலே பிறந்தவளா இருக்கணும் அழகான ஆங்கிலத்தில் வகுப்பெடுத்தாள். "பாலா... யோகா புக் நாளைக்கு கொண்டுவரயா? " என்றாள் என்னுடன் யோகா படிக்கும் மாணவி. சரி என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன் ரயிலை பிடிக்க.

கிராண்ட் அவின்யுவின் சந்திப்பில் சாலையை கடப்பதற்கான விளக்குக்கு காத்திருந்தேன். என்னை நோக்கி ஒரு கறுப்பினக்கிழவர் வந்தார். கருப்பினதவரை சாலையில் தனியாக சந்திப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. காசு கேட்பார்கள் தரவில்லை என்றால் மொத்தப்பரம்பரையும் திட்டுவார்கள். சாலைவிளக்கு வரும்வரை காத்திருக்கவேண்டிய கட்டாயம். ஆனால் அவரோ  என்னை கடந்து சென்று அங்கிருந்த குப்பைத்தொட்டியில் பாட்டில்களை சேகரிக்கலானார். ஒரு பாட்டில் ஐந்து சென்ட் இருபது பாட்டில் சேர்த்தால் ஒரு டாலாக்கு மெக்டானலில் பர்கர் வாங்கிச்சாப்பிடலாம். பச்சை வந்ததால் சாலையில் இறங்கி நடந்தேன்.

சிவிக் ரயில் நிலையத்தில் யூனியன் ஸ்டேஷன் செல்லும் ரெட் லைன் ரயிலுக்கு காத்திருந்தேன். அங்கு வந்த நடுத்தரவயது கிழவி அவள் நெஞ்சில் கைவைத்து "இந்தியன்..." என்றும். என்னை காட்டி "இந்தியன்?" என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டாள். நான் தலையசைத்து ஆமோதித்தேன்.  "ஆர்டிசியா?" அங்குதான் போறியா என்பது போல் கேட்டாள். இல்லை என்பதாய் தலையசைத்தேன். மெச்சிக்கோ நாட்டுக்காரி என்று அவள் ஆங்கிலத்தில் இருந்தே தெரிந்தது. கூரையயை நோக்கி கையைக்காட்டி தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டாள். ரயில் அட்டவணை அறிவிப்பு மின்திரையை நோக்கினேன் அவளை தவிர்ப்பதற்காக.  அவள் என்னை தொட்டு "நோ ஹோம்... ஒன் டாலர்" என்று கேட்டாள். அதற்குள் ரயில் வந்தததால் ரயிலில் ஏறினேன் அவளுக்கு பணம் கொடுக்காது.

யூனியன் ஸ்டேஷனில் இறங்கி பெசடினா சொல்லும் கோல்ட் லைன் ரயில் பிளாட்பார்மை நோக்கி நடந்தேன். என்னை ஒரு இளம்வயதுக்காரி இடைமறித்தாள். அவள் நிறைய இடத்தில் கிழிந்த ஒரு பனியனும், முழங்காலுக்கு கீழே இரண்டு இடத்திலும் மேலே ஒரு இடத்திலும் கிழிந்த ஜின்ஸ் அணிந்திருந்தாள். இங்கு கிழிந்த ஆடை அணிவது ஒரு பேஷன். ஒன் டாலர் பிப்டி சென்ட் ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றாள். பர்சில் தேடி இருந்த என்பது சென்டைக்கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

இரவு எட்டுமணிக்கு மேல் ஆனதால் அடுத்து பத்து நிமிடம் கழித்து தான் என் ரயில் வரும். பாட்டு கேட்கலாம் என்று MP3 பிளையரை லேப்டாப் பேக்கில் தேடினேன். லேப்டாப் பேக்கில் இருந்த பிப்டி சென்டை கொடுக்கலாம் என்று அவளை தேடிப்போனேன். அவள் அங்கு இல்லை. எதிரே இருந்த ஸ்டார் பக்ஸ் கடையில் சாப்பிட டோநட்ஸ் வாங்கிகொண்டிருந்தாள். திரும்பி பிளட்பாமிர்க்குள் நுழைந்தபோது ரயில் கதவு அடைப்பதற்கான அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருந்தது ஓடி ரயிலில் ஏறினேன். ரயில் கதவு என் முதுகுக்குப் பின் அடைத்தது.

ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் ரயிலை தவற  விட்டிருப்பேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கண்ணை மூடினேன். ஏனோ அந்த வீடில்லாத மெக்சிக்கன் பிச்சைக்காரக்கிழவி என் மனதில் வந்து போனாள்.

11 comments:

  1. கதை பிரமாதம், ஆனால் ஒரு டுவிஸ்ட் தேவை.. பேசும்போது சொல்கிறேன்..

    நடை கைகூடிவிட்டது... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. பிரிவோம் சந்திப்போம் சுஜாதா எழுதியதை படிப்பது போல் உங்கள் தகவல்கள் ரொம்ப பிடித்து உள்ளது.

    ReplyDelete
  3. அமெரிக்காவும் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கு என்பதை இந்த பதிவு தெளிவாக சொல்லுகிறது அல்லது பிச்சைகாரர்கள் இந்தியாவில் மட்டும் இல்லை என்பதை தெளிவாக சொல்லுகிறது இந்த பதிவு ....

    ReplyDelete
  4. கதையா? அனுபவம்போல் எழுதிவிட்டீர்கள், ஆனால் நல்ல எழுத்து (அதாவது, வாசிக்க எளிமையும் விறுவிறுப்பும்).

    கதை என்றால், தொடக்கக் காட்சியிலேயே முடிவுச் சிக்கலுக்குள் இழுத்துப்போடும் இக்கட்டுக்குள் விழுந்துவிட வேண்டும் (எடுத்துக்காட்டாக, உடற்பசி உறுத்துவதாய்). கடைசி வண்டியைத் தவறவிடுகிற நிலைமையின் பரபரப்பை முன்கூட்டியே வாசகர்களுக்குத் தொற்றவைக்கவும் வேண்டும். இளம்பெண்ணுக்கு முதலில் கொடுத்த எண்பது சென்ட் இயல்பாக நேர்வது; பிறகு கொடுக்கப் போவது வலிந்த ஒரு முடிவோடு செயல்படுவது அல்லவா, அந்தப் புள்ளியில்தான் அவன் வண்டியைத் தவறவிடப் போகிற விதி விளையாடவேண்டும். அக்கணம், மெக்சிகன் பிச்சைக்காரக் கிழவியின் முகம் நினைவில் மோதி விழிப்புத்தட்ட, வண்டிக்குள் சாடவேண்டும்.

    எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அதிகப் பிரசங்கமாகத் தெரிந்தால் மன்னிக்க.

    ReplyDelete
  5. எழுத்து தரம் கூடுது!! இன்னும் வாசகனை கதைக்குள் உள்நுழைக்க கதைசொல்லும் விதத்தை இன்னும் மெருகூட்டலாம். வாழ்த்துக்கள் தொடரட்டும்

    ReplyDelete
  6. கதை நல்லா இருக்குதுங்க.... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. நல்லா எழுதியிருக்கீங்க..

    இது கதையா இருந்தாலும், நிஜத்திலும் நாம செய்ற உதவி சரியான ஆளுங்களுக்கு எப்பவுமே போறதில்லை..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ராஜசுந்தர்ராஜன் சார் உங்க குடில் பக்கம் வந்து ஆலோசனை சொல்லிருக்கார். வாழ்த்துகள்!

    ஐயா சொல்வதை காது கொடுத்து கேட்டுக்கொள்ளுங்கள் நண்பரே!

    ReplyDelete