நியூ யார்க், இந்தியன் கேரளா உணவகம், மாலை.
"யோகி... அப்படி என்னடா பாக்குற அந்த மெனுவுல ரெம்ப நேரமா? ஏதாவது ஆடர் பண்ணுடா"
"இல்லடா நரேன்... இங்க எது நல்ல இருக்குமுன்னு தெரியலா அதான்..."
"நீ லாஸ் ஏஞசல்ஸ்ல இருந்து என்ன பாக்க வந்திருக்க எது வேண்ணாலும் ஆடர் பண்ணு... இது என்னோட ட்டிரிட்டு..."
"அப்ப சரி... இங்க என்ன நல்ல இருக்குமோ அதுல ஒன்னு நீயே எனக்கு ஆடர் பண்ணுடா... நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துறேன்"
"சேட்டா... நாலு பொரோட்டா ஒரு பீப் கறி கொறச்சு காரம்..."
"ரெண்டு பேருக்கு இத்தர மதியா..." என்றர் சர்வர்.
"என்னடா ஆடர் பண்ணியிருக்க?" திரும்பி வந்த யோகி.
"பொரோட்டா... பீப் கறி... நியூ யார்க்லே இந்த கடையில பீப் கறி சூப்பரா இருக்கும்டா"
"சாரிடா நரேன்... நான் பீப் சாப்பிட மாட்டேன்... எனக்கு வேறே ஏதாவது ஆடர் பண்ணுடா"
விருதுநகர், செந்தில்குமார் நாடார் கல்லூரி அலுவலகம், காலை.
"அய்யா பெரியவரே... ரெம்ப நேரமா இங்க நிக்கிறிங்க யாரப்பாக்கணும்?"
"என் பையன் யோகி இங்க தான் படிக்கிறான்... பணம் கட்டனும்முன்னு சொன்னான் அதன் வந்தேன்... அவனுக்கு ஏதோ பரிச்சையம் அதன் முடியட்டுமுன்னு இருக்கேன்"
"அய்யா நான் இந்த காலேஸ்ல ப்யூன்... பணம் கட்ட சொல்லி வந்த லெட்டர் இருந்த கொடுங்க... என்னனு பாத்து நம்மாலே கட்டிரலாம்" என்று பணம் கட்டும் கவுண்டருக்கு கூட்டிச்சென்றார்.
வேட்டியை தூக்கி கால்சட்டை பையில் வைத்திருந்த லெட்டரையும் பணத்தையும் எடுத்துக்கொடுத்தார்.
"அய்யா நூறு கம்மியா இருக்கு..."
"லெட்டர்ல ஏழாயிரமுன்னு தானே போட்ருந்துச்சு"
"சரிதானய்யா... ஸ்பெஷல் பீஸ் போடாமா விட்டுபோயிருக்கு... வேணுமுன்ன அத பின்ன கட்டிக்கோங்க"
"கொஞ்சம் இருங்க... " என்று மாட்டுக்கு தவுடு புண்ணாக்கு வாங்க வச்சுருந்த பணத்தை எடுத்து கொடுத்தார். மாடவே வித்தாச்சு அப்புறம் தவுடு புண்ணாக்கு யாருக்கு வாங்கணும் விரக்தியில் சிரித்துக்கொண்டார்.
கரட்டுபட்டி, சின்னவெள்ளை வீடு, இரவு
"இதுக்கு ஒன்னும் கோரவுல்ல... இன்னக்கி ஒன்னும் கெடையாது"
"என்னபாத்தா உனக்கு பாவமா இல்லயா?"
"என்னதான் கெஞ்சினாலும் இன்னக்கி கெடையாது"
"என்னடி இப்படி சொல்லுற... நான் ஓன் புருசெண்டி"
"பின்ன என்ன... பஞ்சாயத்துல பங்கு பிரிகிறப்போ... பால் பிச்சுற பசுவ தம்பிக்கு விட்டுக்கொடுத்துட்டு...ரெண்டு சின்னக் கன்னுக்குட்டிய வாங்கிட்டு வந்துருக்கிங்க... அதுவும் கேடரிகன்னு... இது வளந்து உழவுமாடு ஆகுறதுக்குள்ள விடுஞ்சிரும்"
"பாவமுடி ஏந்தம்பி ... அவன் பிள்ளைங்க ரெம்ப சிறுசுங்க வீடுல பால் கறக்குற மாடு இருந்த அதுங்களுக்கு உபயோகம இருக்கும் அதான்... இதப்போயி பெருசு பண்ணிக்கிட்டு"
"நாம வீட்டுளையும் தான் சின்னப் பையன் இருக்கான்"
"யோகி தான் பள்ளிக்கொடம் போக ஆரம்புச்சுடான்ல்லா... அவனுக்கு எதுக்கு பாலு"
"இன்னொரு புள்ள பொறந்தா என்ன பண்ணுவீங்க..."
"நீ தான் இன்னிக்கு முடியாதுன்னு சொல்லிட்டையில... அப்புறம் எப்படி இன்னொன்னு"
"அப்படின்ன ஏன் என்னை கட்டிபுடுச்சுக்கிட்டு இருக்கிங்க... நீங்க வாங்கிட்டு வந்த கன்னுக்குட்டிய கட்டிபுடுச்சுக்கிட்டு தூங்கவேண்டியதுதான" பொய்க்கோவம் காட்டினாள்.
கல்லுப்பட்டி, மாட்டுச்சந்தை, மதியம்
"என்னய்யா தரகரே... இந்த ரெண்டு மாட்டையும் கேரளா வண்டியில ஏத்துற"
"மாடுக்கு எல்லா பல்லும் போட்டுருச்சு... வயசான இந்த மாட்ட எந்த விவசாயி வாங்குவான்... அதான் நல்ல வெலைக்கு வந்துச்சு கேரளாவுக்கு ஏத்துறேன்"
"அந்த ஆளு சின்னவெள்ள... இந்த மாட்ட பிள்ள போல சின்னக் கண்ணுக்குட்டியில இருந்து வளத்தாரு... ஏதோ மகனுக்கு காலேஸ்ல பணம் கட்டணுமுன்னு தான் வித்தாரு"
"அதுக்கு நான் என்ன பண்றது"
"உன்கிட்ட கேட்டாருல்ல... இது விவசாயத்துக்கு தான வாங்கிரிங்களான்னு"
"எந்த விவசாயி சொந்த மாட்டா அடிமாட்டுக்கு விப்பான்... அதான் பொய் சொன்னேன்... நீ ஓன் தரக வாங்கிட்டு பேசாம போ"
"ஓன் தரகு யாருக்கு வேணும்... இந்த மாட்டுப்பாவம் உன்ன சும்மா விடாது" துண்டை ஒதறி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்த கிளம்பினார் இடைத்தரகர்.
கரட்டுபட்டி, சின்னவெள்ளை வீடு, காலை
"யம்மா... அய்யாவுக்கு லெட்டர் வந்திருக்கு" போஸ்ட்மேன்.
"நீங்களே... ஒடச்சு படிங்க தம்பி"
அன்புள்ள அம்மா அப்பாவுக்கு, நான் நலம். தாங்கள் மற்றும் தம்பி நலமா? நான் நல்ல முறையில் படிக்கிறேன். தோட்டத்துல நெல்லு, பருத்தி, கடலை எல்லாம் நல்ல இருக்கா? நெல்லுக்கு இரண்டாவது களை எடுத்து விட்டிர்களா ? தம்பி அப்பாவுக்கு உதவியாக வேலை செய்கிறானா?
நான் மாலை வகுப்பாக கம்யூட்டர் சேரலாம் என்று இருக்கிறேன். அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று எங்கள் வாத்தியார் சொன்னார். அதுக்கு சேர கொஞ்சம் பணம் செலவாகும். ஆனால் வேலை கிடைக்கும். அப்பாவிடம் சொல்லுங்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் சேர வேண்டும். பணம் ஏழாயிரம் கட்டவேண்டும். இதை தந்திபோல் பாவித்து சீக்கிரம் பணத்திற்கு ஏற்பாடு செய்யவும்.
அப்புறம் கேட்பதற்கு மறந்துவிட்டேன். நாம்ம மாடு கால்ல விறகுகுத்தி நொண்டி நொண்டி நடந்தது. இப்பொழுது கால் புண் ஆறிவிட்டதா? கால் ஊன்றி நன்றாக நடக்கிறதா மாடு?
இப்படிக்கு
தாங்கள் அன்புமகன்
சி. யோகி
பின்குறிப்பு:
Christopher Nolan ன்
Inception,
Memento,
Following,
The Prestige படம் அடுத்தடுத்து பார்த்து. இவரின் திரைக்கதையின் பாதிப்பில் என் கதையின் ஓட்டமும் ஒரு நேர்கோட்டில் இல்லாது முன்பின் மாறியிருக்கிறது. காட்சியின் இடமாற்றம் கதையின் புரிதலை பாதிக்கவில்லை என்றே நம்புகிறேன்.