வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, June 19, 2011

அவள் நினைப்பு


கண்ணெதிரே வந்து போனாள்
மனசை கலைத்து போனாள்
கலைந்த என் மனசுக்குள்
கலையாமல் விட்டு போனாள்
முழுமதியாள் அவள் முகத்தை

எதிலும் பிடிப்பு இல்லை
எப்போதும் அவள் நினைப்பு
மனசடக்கி மாத்தி யோசித்தாலும்
மூச்சடக்கியவன் உயிர் ஆசையாய்
உடனேவருது அவள் நினைப்பு

Tuesday, June 7, 2011

எண்ணும் நாட்கள்


ஒதுங்க இடமில்ல
ஒத்தாசைக்கு ஆளில்ல

மாத்து துணி இல்ல
மந்தைக்குபோக மக இல்ல

ஒத்தவயிறு காயிது
பெத்தமகன் இங்கில்ல

குடிக்க கூழு இல்ல
கும்பிட்டசாமி கூட வல்ல

கடைசியா பேரன பாத்தது
காதுகுத்த ஊருக்கு வந்தப்ப

இந்த கெளவிய பாக்க
இதுவரைக்கும் வந்ததில்ல

பாடையில போறத
பாக்க வருவானா

ஊதுபத்தி புடுச்சுகிட்டு
ஊர்வலமா வருவானா

பாதகத்தி கட்ட வேகிறத
காடுவர வந்து பாப்பானா

Friday, May 6, 2011

எங்காத்தா


சின்னவன இருக்கையில
வெளையாட்டுல ஒரு ஆளு
என்னை அடுச்சுட்டான்னு
பெரிய ஆளுன்னும் பாக்காம
பளாருன்னு அறஞ்சா எங்காத்தா
பதறிப்போனா அந்தாளு
அவ்வளவு கோவக்காரி எங்காத்தா

ஏம்மகன நீ அடுச்ச
உன்ன நான் அடுச்சேன்
அடிக்கு அடி சரியாபோச்சு
இப்ப சொல்லு என்ன தப்பு
செஞ்சான் ஏம்மகன்?
தப்பு எம்மேலயும் இருக்குன்னு
என்னையும் சாத்து சாத்துன்னு
சாத்துனா எங்காத்தா
அவ்வளவு நாணயக்காரி எங்காத்தா

உமிய அவசேலயில எடுத்து
அவ அடுச்ச தடத்துல
சுடுதண்ணி ஒத்தடம்
கொடுத்து அவமடியில
ஒறங்க வச்சா எங்காத்தா
அவ்வளவு பாசக்காரி எங்காத்தா

Wednesday, April 20, 2011

அவனாலா?


அன்னம் மறந்தேன் அவனாலா?
அன்னம் பிடிக்காமல் ஆனதாலா?

இடைமெலிந்து ஆனது பாதியா?
இல்லையிது காதல் வியாதியா?

கைவளை தனியே போனதா?
இல்லையிது பசலையால் வந்ததா?

உயிர்மூச்சில் உன் வாசமா?
உன் சுவாசத்தின் மீதமா?

உதட்டின் ஓரம் மச்சமா?
உன் முத்தத்தின் மிச்சமா?

கண்மூடி உனைகாண்பது கனவா?
காதல் செய்த நினைவா?

Monday, April 18, 2011

பயணம் தொடருது


இருக்கையில் அமர்ந்தாள்  
நீண்டபெருமூச்சு விட்டாள்
சன்னல் திறந்தாள்
எங்கோ வெறித்தாள்
தூறலை தொட்டாள் 
முந்தானைமுக்காடு இட்டாள்
நகம் கடித்தாள்
புத்தகம் புரட்டினாள்
புன்னகை பூத்தாள்
புருவம் சுருங்கி யோசித்தாள்
புத்தகம் நழுவ தூங்கினாள்
சொம்பல் முறித்து எழுந்தாள்
கைகள்தேய்த்து கண்ணில் ஒத்தினாள்
கண்கள்மூடி காத்து வாங்கினாள்
தலைமுடி காதுக்கு ஒதிக்கினாள்
முந்தானை சரி செய்தாள்
அவள் நிறுத்தத்தில் இறங்கினாள் 
ஒத்தையடிபாதையில் நடந்து மறைந்தாள் 
சில நாட்கள்.......
சில மாதம்.......
சில வருடம்......
ஒத்தையடிபாதை நிறுத்தம் வரும்போது 
நிற்காமல்வருது அவள் நினைப்பு
பயணம் தொடருது அதேவழி

Friday, April 1, 2011

நிகழா நிகழ்வா அவள் ?



தொகுப்பாளினின் தனித்தமிழ்
தாவணியில் தமிழ்ப்பெண்
ராமநாதபுரமாவட்டத்தில் மழை
சரியானநேரத்தில் ரயில்
நூறுசதம் ஓட்டுப்பதிவு
தமிழனுக்கு நல்லதலைவன்
கள்ளமில்லா மனிதன்
பள்ளமில்லா சாலை
ஆளுமையில்லா அப்பா
கேள்வியில்லா மனைவி
பொய்சொல்லா கணவன்
மனனமில்லா பாலர்கல்வி
நெடும்தொடரில்லா தமிழ்தொலைகாட்சி
வாரிசில்லா அரசியல்
ஊழலில்லா ஜனநாயகம்
லஞ்சமில்லா அரசுஅலுவலகம்
இலவசமில்லா தேர்தல்
விண்ணைத்தொடாத விலைவாசி
கடனில்லா விவசாயி
சோகமில்லா தனிஈழம்
மின்வெட்டில்லா தமிழகம்
குத்துபாட்டுல்லா விஜய்படம்
அரசியலில் ரஜினி
என வரவேமாட்டாயா
என்வாழ்வில் நீ ?

Thursday, February 17, 2011

See you அமெரிக்கா!!!

பாட்டானோட நாடா ?
நான் பிறந்த ஊரா ?
இளமை கழிந்தது இங்கேயா ?
என் காதலி வீடு இங்கிருக்கா ?

ஏன் பின்ன மனசு
கெடந்து லேசா வலிக்குது
இந்த ஊர பிரிய மறுக்குது

போன இடத்துக்கெல்லாம்
போய்வர துடிக்குது

பழகிய மனுசாரெல்லாம்
பாக்க தோணுது

பிடிக்காத பிட்சா கோக்
சாப்பிட எண்ணுது

அலுவலகம் போய் வந்த
பஸ்சுல சும்மா ஒரு தடவ
போக மனசு ஏங்குது.

அலுவலகத்து கம்ப்யூட்டர்
இருந்த இருக்கை
விட்டு வர மறுக்குது.

பல நாள் பாத்த இடம் கூட
புதுசு புதுசா தெரியுது

அழுக்கான வீட்டு
கிச்சன் கார்பெட் கம்பெடர்
எல்லாம் அழகா தெரியுது.

வீட்டு பால்கனியில கடைசியா நின்னு
ஒரு காப்பி குடிக்க தோணுது.

இருபத்தி ஐந்தாவது தளத்தில்
இருந்து இன்னொரு முறை
சிட்டியை பாக்க ஆசையாகுது.

நடந்த தெரு கடந்த சிக்னல்
காத்திருந்த பஸ் நிறுத்தம்
கனவுல கூட வந்து போகுது

வெள்ளி வெள்ளியாய் எத்தனை
வெள்ளி இரவுகள் விடிந்தன இங்கே

வாழாத வாழ்க்கையில்லை மறுபடியும்
வாழமுடியுமா தெரியவில்லை

போகாத இடங்கள் இல்லை மறுபடியும்
பார்ப்போமா தெரியவில்லை

எனக்குள் நான் புரட்டி பாக்காத
சில பக்கங்கள்
என்னை நான் புதுசா உணர்ந்த
சில தருணங்கள்
பள்ளி காலத்து நட்பாய் - எதையும்
எதிபார்க்காத நண்பர்கள்

என்ன சொல்ல???
ம்... ம்... ம்...
................................
................................
எல்லாத்துக்கும் நன்றி.

என் நட்பே ...
என்னை கொஞ்சம்
உன்னில் விட்டுச்செல்கிறேன்
என் கண்கொண்டும் காணு.


Wednesday, February 16, 2011

இதழ் உதிர் காலம்


கொஞ்சம் கொஞ்சமா
ஈரப்பதம் இன்றி
இதழ்கள் காய்கிறதிங்கே
மழையா பொழியாவிடினும்
கடைசிஈரம் காயும்முன்
மென்தூறல் எனவொன்று
தந்துவிட்டு போ
இதழ்கள் உயிர்த்திருக்கும்
இன்னும் கொஞ்சகாலம்.

Monday, February 14, 2011

உயிர் வாழ வழியிருக்கா ?



ஓடி பிடுச்சு வெளையாடி
விழுந்து உராய்ந்த புண்ணுக்கு
எச்சிமண்ண உனக்கு தடவுனப்ப
கொஞ்சம் மனசும் சேர்ந்து வந்திருச்சு

ஊர்க்கருப்புக்கு யாரோ ஒடச்ச
செதறு தேங்காசில்லுல ஒட்டுனமண்
ஊதி உனக்கு கொடுத்தப்ப
கொஞ்சம் உசிரு ஒட்டிகிட்டு வந்திருச்சு

கஞ்சி காச்சி வெளையாண்ட
கதவு இல்லாத வீட்டுக்குள்ள
ஒன் காலடித்தடம் பதிச்சப்ப
கொஞ்சம் உறவும் கூட வந்திருச்சு

சாமி ஊர்சுத்தி வந்தப்ப
மாவிளக்கு வெளுச்சத்துல மங்கலா
ஒன் மொகம் பாத்தப்ப
கொஞ்சம் கிறுக்கும் பிடுச்சு போச்சு

பச்சஓல இடுக்கு வழி
ஒன் கண்ண பாத்தப்ப
மிச்சம் மிதம் இருந்த
கொஞ்சம் நஞ்சம் உசிரும் போயிருச்சு

உயிர் வாழ வழியிருக்கா ?
நீ வந்துசேர மனமிருக்கா ?
வெறும் கூடுதான் இங்கிருக்கு
கொஞ்சம் கொஞ்சமா போனதெல்லாம்
கொண்டு வந்து சேப்பியா ?

Thursday, February 10, 2011

அன்பிருக்கா இல்லையா ?


ஆண்: கண்டும் காணாம
             பாசாங்கு செய்யுற

பெண்: உனை காண உன்தெருக்கு
              வந்தும்மா என்னை புரியல

ஆண்: பார்த்தும் பாக்காம
             தவிக்க வைக்கிற

பெண்: நீ இருக்கும் இடமெல்லாம்
             வந்தும்மா அறிய முடியல

ஆண்: ஓரக்கண்ணால் பார்த்து
               உயிர எடுக்குற

பெண்: கண்சாடை காட்டியும்
              அத படிக்க தெரியல

ஆண்: கவனத்த ஈர்த்து
             கவர்ந்து கொல்லுற

பெண்: நீ பாக்குறப்போ கொளந்தைய
              கொஞ்சினேன் அதுகூட புரியல

ஆண்: அன்பிருக்கா இல்லையா
             அறிய முடியல

பெண்: உங்கம்மாவ அத்தேன்னு
              கூப்பிட்டும்மா அன்பு புரியல

வேண்டுகோள்: இந்த கவிதையில் வருவது போல் பெண்கள் எப்ப அடுத்த நிலைக்கு போனார்கள் என்று பாவம் இந்த ஆண்களால் கண்டுபிடக்க முடிவதில்லை. பெண்களே தயவுசெய்து வரும் காதலர் தினத்தில் ஆவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.

Tuesday, February 8, 2011

மலரின் கதறல்


கட்டுண்டு கிடக்கிறாயா ?
கழண்டுவிழத் துடிக்கிறாயா?
மனிதக்கழிவிலும் கறி புகையிலும்
கசிந்த என் உயிரை
துளி துளியாய் துளிர்க்க செய்தாய்
கைமாறு என்ன செய்வேன் ?

தரையெங்கும் இலை மலர் பரப்பி
மறுமுறை மழையாய் விழும்போது
தரைவிழாது என்மடி ஏந்தி
உனக்கும் தரைக்கும் வலிக்காமல்
தரைக்கு மெல்ல தாரைவார்ப்பேன்

சூரியன் கதிர்களால் உன்னை
சுட்டு சுட்டு குடிக்காமல்
கதிர்களை கட்டுபடுத்தி
வெயிலை மட்டுபடுத்துவேன்.

காற்றை தென்றலாக்கி
உன் குளங்களின்
தளமெங்கும் தவலச்செய்வேன்.

உனை கொஞ்சம் உறிஞ்சி
மரங்களின் நாளங்களில்
உதிரமாய் ஓடவிட்டு
நீ உயிராய் நான் உடலாய்
காலம் காலமாய் வாழ்த்துடுவேன்

களங்கமில்லா நாம் காதல்
யுகம் யுகமாய் தொடர
கழிவுகளை மறுபரிசிலனை செய்ய
மனிதகுலத்திடம் மண்டியிடுவேன்.


பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.

Monday, February 7, 2011

உலகமயம்


தீண்ட தீண்டி
தழுவ தழுவி
அவிழ்ந்து அவிழ்த்து
இறுக இறுகி
உருக உருகி
மேலும் கீழா
ஆட ஆடி
கிறங்க கிறங்கி
அடங்க அடங்கி
ஊர்ந்து ஊர்ந்து
உயிர் உடலாகி
கொடி கொடியாய்
தொடர் தொடராய்
காலம் காலமாய்
கிளைவிரித்து விரிந்து
அடர்ந்த பெரும்காடாய்
நாடு நாடாய்
இடைவெளி இல்லாது
பரந்து பரவிகிடக்கு.

Saturday, February 5, 2011

கீதாரி


தலையில வெயிலுக்கு உருமா
முள்ளுக்கு கால்ல கனத்தசெருப்பு
குட்டி ஆடும் தொரடிக்கம்பும்
தோதா தொள்வச்சு
கைய ரெண்டும் கம்புலபோட்டு
ஒரு கையில தூக்குசட்டி கஞ்சி
மறுகையில ஆட்டுக்குட்டியோட காலு
கவனமா புடுச்சுக்கிட்டு
வெரசா எட்டுவச்சு வேகமா
நடக்குராறு கீதாரி.

ஆடு மேக்கிற பையன்
ஊருல கொடன்னு போயிட்டான்
கரட்டுல மேயிற கெடைய
கவனிக்க ஆளில்ல
கரடெல்லாம் முள்ள தவிர
ஆடு மேய புல்லில
ராத்திரி அடைய இடமில்ல
ஊரெல்லாம் வெள்ளாம
எப்ப இது வெளஞ்சு
வெள்ளாம அறுத்து
காடு தறுசாகி
ஆடு தர எறங்கி
நாலு நல்ல புல்லு
தின்னுமே தெரியல

தந்தரையில கெட
அடையுமோ தெரியல
நாலு நல்ல கெட அமத்தி
சியான் வீட்டு சில்லற
பொலங்குமோ தெரியல

நானும் பொண்டாடியோட
இருந்து பொழுதுவிடியிரப்ப
கெடைக்கு போவேனோ தெரியல

குறிப்பு: இதில் நிறைய வட்டாரவழக்கு வார்த்தைகள் உபயோகித்திருக்கிறேன். அதற்கு தனி விளக்கம் கொடுத்தால் அதன் அழகு சிதைந்து விடும் என்பதால் உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்.

Friday, February 4, 2011

இருக்கையின் மனசு



என்ன குறை கண்டாய்
ஏன் எனை விடுத்தது
அங்கு அமர்ந்தாய் ?
தயவுகூர்ந்து சொல்லிப்போ
எனை திருத்தி
இனி வரும் பெண்ணையாவது
ஏந்திக்கொள்கிறேன் என் மடியில்...

Thursday, February 3, 2011

முடியலடி


அப்படி நான் நெனைக்கல
ஓன் ஒத்த வாத்தயில
கெடையப் பிரிஞ்ச
ஆடுகெனக்க மனசு
கெடந்து அலையுதுடி.

தப்பா புருஞ்சுகிட்டிங்க
நீ சொன்னப்ப
கொக்கநோவு வந்த கோழியா
மனசு கெடந்து சொனங்குதுடி.

செநேகம் மட்டுந்தேன்
ஓன் ஒத்தச்சொல்லு
உச்சி வெயிலாட்டம்
சுளிருன்னு சுடுதுடி.

எல்லாத்தையம் மறந்திருங்க
ஓன் பேச்சு
கால்ல முறுஞ்சமுள்ளா
உள்ளுக்குள்ள கடுக்குதுடி.

பழகிய பழக்கமெல்லாம் பொய்யா ?
செஞ்ச அம்பு நெசமில்லையா ?
கடந்த நாக்க கனவா ?
அடுத்தடுத்து பொறந்த
சவலபுள்ள பசியா
மனசு பதறுதுடி.

Wednesday, February 2, 2011

பதிலில்லை பாவம் அவனிடம்.


கடிதம் வாழ்த்துஅட்டை
திரும்ப கேட்டு அழித்தான்.
***
நான் கொடுத்ததை எல்லாம்
கண்முன் காட்டி எரித்தான்.
***
அடையாளங்கள் அழித்தாகிவிட்டது
நமக்குள் எதுவுமில்லை என்றான்.
***
நீ காதல் சொன்னபோது
ஏற்ப்பட்ட சிலிர்ப்பை என்னசெய்ய
பதிலில்லை பாவம் அவனிடம்.
***

பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.

Monday, January 31, 2011

மகன் கையெழுத்து

மாசம் மொத தேதியாச்சு
மணியாடர் இன்னும் வல்ல.

மறக்காம மாசாமாசம் பணம்
அனுப்பும் மகனுக்கு என்னாச்சோ.

களப்பு கடக்காரன் கடனுக்கு
காப்பி கெடையாதுன்னுடான்.

எல்லையில நித்தம் சன்டையாம்
எல்லாரும் பேசிக்கிறாங்க.

வீட்டுக்கு ஒருத்தன் இருக்கான்
வெவரம் கேக்க ஆள்யில்ல.

லெட்டர் போட்டு கேக்க
எழுத படிக்கத் தெரியாது.

போன் போட்டு பேச
பட்டலியன் நம்பர் தெரியாது.

தபால்காரகிட்ட தகவல் ஒன்னுமில்ல
எப்போ வருமோ தெரியல.

மணியாடர்ல மகன் கையெழுத்து
பார்த்த மனசு கெடந்தடிக்காது.

Sunday, January 30, 2011

பூவையாரா? புதைகுழியா?

பூத்து கண்டவுடன் கவரப்பட்டேன்
இதழா(ள்)ல் ஈர்க்கப்பட்டேன்
அதென்ன இதழில்
துளியோ? தேனோ?
சுவைத்திட துணிந்தேன்
இதழா(ள்)ல் இடம்தர
இழுத்து கொ(ல்)ள்ளபட்டேன்
பூ(வையாரா)வா? புதைகுழியா?
புரியாமல் தவிக்கிறேன்.
வண்டின் அவஸ்த்தை.
பின்குறிப்பு: நான் எடுத்த புகைபடத்திற்கு சிறுவிளக்கமாக facebook ல் போட்டேன். அதை உங்களுடன் இங்க பகிர்ந்துகொண்டேன்.

Friday, January 28, 2011

ஆசையா புள்ள காத்திருக்கு


பேறுகாலத்துக்கு வந்த
மக தோடு அடகுவச்சு
போட்ட கடலச்செடி
மொளச்சு வந்துருச்சு.

கொடி கொலுசு
கொழந்தைக்கு எடுத்து
அடகுத்தோடு திருப்பி
அப்பன் அனுப்புமுன்னு
ஆசையா புள்ள காத்திருக்கு.

மறுதண்ணி இல்லாம
செடி வாடத்தொடங்கிருச்சு
ஒரு தூத்த வந்தா
செடி பொளச்சுக்கும்
புள்ளய அனுப்பலாம்
புருசன் வீட்டுக்கு.

Wednesday, January 26, 2011

முத்தம்




கொடுத்து கொண்டே
பெற்றுக் கொள்ள
முடிகிற விந்தை.
***
உடலில் பொருள்
பாராமல் பரிமாற
முடிகிற புதுமை.
***
இங்கு மட்டுமே
எச்சிலும் ஏற்க
துணியும் ஆச்சரியம்.
***
கணக்கு பார்த்து
கொடுப்பது இல்லை
இதில் கண்முடிகொண்டதால்.
***
இதழ்கள் நான்கு
என்றாலும் சேர்ந்தெழுப்பும்
ஓசை ஒன்றே.
***
வாங்குமிடம் கொடுக்கவும்
கொடுக்குமிடம் வாங்கவும்
முடிகிற லாவகம்.
***
கன்னத்தை குறிவைத்து
இதழில் இட்டாலும்
குற்றமென்று சட்டமில்லை.
***
கொடுப்பதால் இழக்க
ஏதுமில்லை - வாங்கியவன்
கொடுக்க குறைவதில்லை.
***
எதில் தொடங்கி
எங்கு முடிந்தாலும்
இதில் தொடங்கினால் சுபமே.
***
கொடுக்கல் வாங்கலில்
கொஞ்சம் கூடிக்குறையலாம்
இதுவொன்றும் கணிதமில்லை.
***
இறுக்கமான இதமான
அழுத்தமான மிதமான
எல்லாமே சரிதான் இதில்.
***
உன்னது என்னது
பாகுபாடு இல்லை
இதழ்களில் இடம்மாற.
***
இதழ்கள் இருப்பிடம்
வெவ்வேறு ஆனாலும்
இதில் சேருமிடம் ஒன்றே.
***
தொடக்கத்தில் தொடரவும்
முடிந்தபின் தொடங்கவும்
இதுவே முதல்.
***


Saturday, January 22, 2011

அவளில்லா இரவு

நீ போனாலும்
போகலடி உன் வாசம்.

கண் முடினாலும்
மறையலடி உன் உருவம்.

என் சுவாசத்திலும்
சுடுதடி உந்தன் இளங்சூடு.

முழுக்க போர்த்தினாலும்
இல்லையடி உந்தன் கதகதப்பு.

தலையணை கூட
தல்லையடி அந்த இதம்.

மெத்தையில் கூட
இல்லையடி அந்த பதம்.

இரவின் நிசப்தம்
நினைவூட்டுதடி அந்தநேர மவுனம்.

பாதித்தூக்கத்தில் உனை
தேடுதடி என் பாழ்மனது.

கனவிலும் உன்னிடம்
தொடருதடி என் சீண்டல்.

நீளும் இரவு
குடிக்குதடி என் உயிர்.

உந்தன் பெண்மையிடம்
தோற்றதடி எந்தன் ஆன்மை.

உறக்கத்தில் கூட
கொல்லுதடி உன் பிரிவு.

எழுந்தப்பின்னும் கலைய
மறுக்குதடி உன் நினைவு.




Thursday, January 20, 2011

காலத்தின் கையில் நான்



காலத்தின் கையில் நான்
------------------------------
விதை இருந்து
விலகி கருயிருத்தி
குளிர்ந்து பெருத்து துளிர்த்து
விரிந்து பிரிந்து
முலை முட்டி
இலை விரித்து
இதம் கதகதப்பு வேண்டி
வேரிடமிருந்து விலகி
கிளை பரப்பி
மரமாகி பூத்து
சூல்கொண்டு காய்த்து
கனியில் கருவேற்றி
விதை நிறுத்தி
தாய்மண்ணில் வேர்விடுவேனா?

பச்சையம் இழந்து தளர்ந்து
உலர்ந்து சருகாகி
தள்ளாடி தள்ளாடி
அயல்மண்ணுக்கு உரமாவேனோ?

காலத்தின் கையில் நான்.