வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.
Thursday, September 1, 2016
விதை நெல் - நெல் நான்கு
விதை நெல் - நெல் மூன்று தலையில் சும்மாடு அதுக்குமேல கூழ்ச்சட்டி இடுப்பில் நார்ப்பெட்டி நிறைய வெதைத் தானியம் மறுகையில் கன்னுக்குட்டியும் பிடித்துக் கொண்டு புளிமூட்ட மாமா பின்னாடி கொஞ்சத்தூரத்தில் நடந்து வந்தார் செவனம்மா அத்தை.
தலையில் கூழ்ச்சட்டி எந்த பிடிமானமும் இல்லாமல் செவனம்மா அத்தை நடந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
நான் எழுந்து என் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு எங்க தோட்டத்தை நோக்கி நடந்தேன். என்னைப்பார்த்த அத்தை பாதையில் இருந்து சிறிது விலகி எனக்கு வழி விட்டு நடந்தாங்க.
"குதுரவள்ளி வெதைக்க போறீங்களா அத்த" என்றேன்.
"ஆமாம்.... மருமகனே..." மருமகனே என்னு சொன்னது அவங்களுக்கே கேட்டு இருக்காது அவ்வளவு மெதுவா தலையக்கூட நிமிராமல் கன்னுகுட்டியை பார்த்துக்கொண்டே பதில் சொன்னாங்க. பெறந்த குழந்த கூட அது மருமகன் முறை என்றால் எங்க ஊர் பொம்பளைங்க கொடுக்கும் மரியாதை எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும்.
தம்பியை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரெண்டு ஆட்டுக்குட்டிய விரட்டிக்கிட்டு "ஆத்தா... மெதுவா போ..." என்று கத்திக்கொண்டே வேகமாக நடந்து வந்தா ஒன்பது வயது மதிக்கத்தக்க அத்தமக.
நான் அவளை வழி மறித்து நின்றேன்.
"மாமா... வழிவிடுங்க நான் போகனும்" என்றாள்.
"உன் பேரு என்னன்னு சொல்லு... நான் வழி விடுறேன்" என்றேன்.
"செங்கனி" என்றாள்.
"நல்ல பேரு... உன் பேருக்கு என்ன அர்த்தம் ?" என்று வம்புக்கு இழத்தேன்.
"செம்மை கூட்டல் கனி" என்றாள்.
அவள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரிமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணர்வுகளை காட்டிக்கொள்ளாமல் " என்ன படிக்குற..." என்றேன்.
"பொம்பளப்புள்ள படிச்சு என்ன பண்ணப்போகுது... அதேன் எதுக்குன்னு நிறுத்திட்டோம்..." என்றார் அத்தை.
"அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்த... " என்றேன் வருத்தமாக.
"கூடமாட இருந்து வீட்டு வேல தோட்ட வேல கத்துகிட்டா போற இடத்துல ஒத்தாசைய இருப்பா அதான்... தம்பி..." என்று இழத்தார் அத்தை.
"பார்த்தா நல்லா படிக்குற பொண்ணு மாதரி இருக்கா... வீட்டுல பொண்ணுங்க தான் படிக்கனும்... அப்பதான் அவங்க பிள்ளைங்க படிக்க உதவியா இருக்கும்" என்றேன். அப்போது ஏனோ குடும்பவிளக்கு பாரதிதாசன் என் நினைவில் வந்து போனார்.
"ஆமாப்பா ஓட்டத்துல கூட மொத இடத்துல வந்து இருக்கா... அவங்க வகுப்புலயே இரண்டாவதாம்" அத்த கண்ணில் ஒரு சிறிய பெருமை வந்து போனதை கவனித்தேன்.
"பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க அத்த..." என்றேன் சிறிது கெஞ்சலாக.
"எங்க அப்பா கூட பள்ளிக்கூடம் தான் போகச் சொல்லுராங்க மாமா... ஆனா..." என்று தம்பியை இறக்கிவிட்டு அம்மாவை ஏறயிறங்க பார்த்தாள் செங்கனி.
"நான் அம்மா, அப்பாகிட்ட சொல்லிக்கிறேன். நீ பள்ளிக்கூடம் போறயா? " என்றேன்.
"சரிங்க மாமா " என்று ஆட்டுக்குட்டியை பிடிக்க துள்ளிகுதித்து ஓடினாள் செங்கனி.
செங்கனியை பார்த்தபோது என் தேன்மொழி தான் ஞாபகத்துல வந்தா? மனது பாரமானது... நல்லா மூச்சு இழந்துவிட்டேன் மனபாரம் குறையும் என்று. ஆனால் பாரம் கூடவே செய்தது.
யார் அந்த தேன்மொழி? ஏன் இவன் கவலையானான் தேன்மொழியை நினைத்து? தேன்மொழிக்கு என்ன ஆயிற்று?
No comments:
Post a Comment